கீதை படித்தால் சோறு கிடைக்குமா?

    ன்று ஒரு நாள் ஒரு நண்பர் என்னிடம் கேட்டார், உலகில் உள்ள அனைத்து மதங்களுக்கும் புனித நூல்கள் உள்ளன, நமது இந்து மதத்திற்கு அப்படி ஏதாவது ஒரு குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய புனித நூல் உண்டா? வேத புத்தகங்கள் புனிதமானவைகள்தான், அதில் மாற்றமோ, மறுகருத்தோ நான் கொள்ளவில்லை, ஆனால் வேதங்கள் உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும். இன மொழி மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு பொதுவானது, அதை இந்து மதத்தின் புனித நூல் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றார்.

    அவர் பேச்சில் இருந்த ஆதங்கமும் ஆழ்ந்த கருத்தும் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே ஆனந்தத்தையும் அதே நேரம் ஒருவித வருத்தத்தையும் தரும் என்பதில் ஐயமில்லை, வேதம் உலக மக்களின் பொதுசொத்து என்பதில் நாம் வேதங்களின் மைந்தர்கள் என்பதால் பெருமையும் ஆனந்தமும் அடையலாம், இந்து மதத்தின் புனித நூல் எது என்பதை பெருவாரியான இந்துக்களே இன்னும் அறிந்திருக்கவில்லை என்பதில் வருத்தம் அடைவதை தவிர வேறு வழியில்லை.


கிறிஸ்துவ  மதத்திற்கு புனித நூல் “விவிலியம்” என்றும் இஸ்லாத்தின் புனித நூல் “குர்ஆன்” என்பதும் பௌத்தத்தின் புனித நூல் “தம்பதம்” என்பதும் அந்த மதத்தினர்கள் மட்டுமல்ல, உலகில் உள்ள அனைத்து மக்களுமே மிக நன்றாக அறிவார்கள், ஆனால் நமது மக்களின் நிலையை யோசிக்கும் போது அவர்கள் தங்களது மதத்தில் உள்ள கணக்கற்ற புனித நூல்களை பார்த்து விட்டு இதில் எதை புனித நூல் என்று ஏற்றுக் கொள்வது எதை விட்டு விடுவது எனச் சிந்தித்து குழம்பிக் கொண்டு இருக்கிறார்கள் என்பதை நம்மால் நன்றாக உணர முடிகிறது.

அன்று முதல் இன்று வரை மனிதனால் சிந்திக்கப்பட்ட விஷயங்களும் சரி. இனி அவன் சிந்திக்கப் போகும் விஷயங்களாக இருந்தாலும் சரி அவை அனைத்தும் வேதங்களுகுள்ளேயே அது வகுத்திருக்கும் தீர்க்க கோட்டுக்குள்ளேயே அடங்கி இருக்கும் என்பது மறுக்க முடியாத விஞ்ஞான உண்மையாகும்,அந்த வேதங்களில் என்ன கூறப்பட்டு இருக்கிறது என்பதை எளிய முறையில் மக்களுக்கு எடுத்துக் கூற எழுந்தவைகளே உபநிஷதங்கள் ஆகும்.


    மெய்பொருள் ஆராய்ச்சியில் உபநிஷதங்கள் போக்கு எத்தகையது என்று இயம்புவது பிரம்ம சூத்திரம் அல்லது வேதாந்த சூத்திரம் ஆகும், வேதங்கள் உபநிஷதங்கள் பிரம்ம சூத்திரம் இவைகளில் அடங்கி உள்ள மேன்மை மிக்க மெய்பொருள் விளக்கத்தை கடையனும் கடைத்தேற விளக்குவது ஸ்ரீமத் பகவத் கீதை, மேலே குறிப்பிட்ட நான்கு பெருநூல்களை உள்ளடக்கி பிரஸ்தானத்திரயம் என்று கூறுவார்கள்,அதாவது முடிவான ஆதாரம் என்பது இதன் பொருளாகும், இந்த பிரஸ்தானத்திரயம் நமது புனித நூல் எனலாம், எனினும் வேதங்களும். உபநிஷதங்களும் அவ்வளவு விரைவில் எல்லோரும் கற்று தேர்ந்துவிட முடியாது, அனைவரும் எளிமையான பரம்பொருளின் ரகசியத்தை புரிந்து கொள்வதற்கு வணங்குவதற்குரிய நமது ரிஷிகள் “ஸ்ரீமத் பகவத்கீதை” யை படித்து உணர்ந்து அதன் வழி நடந்தாலே போதும் என்கிறார்கள், அதாவது ரிஷிகளின் முடிவு இந்து மதத்தின் புனித நுல் ஸ்ரீமத் பகவத் கீதை என்பது ஆகும்.


    நமது மதத்தின் புனித நூல் கீதை என்பதை நம்மில் எத்தனை பேர் அறிந்து இருக்கிறோம், நூற்றுக்கு முப்பது பேர்தான் அறிந்து இருக்கிறார்கள் என்பது வேதனை தரும் உண்மையாகும், பகவத் கீதை புத்தகத்தை கண்ணால் பார்க்காதவர்கள் கூட நம்மில் எத்தனையோ பேர் இருக்கிறார்கள், கீதையைப் பிரபலப்படுத்த எத்தனையோ அறிஞர்களும் ஞானிகளும் பெரும்பிரயாசை எடுத்தும் அதில் முழுமையான வெற்றியை நம்மால் இன்னும் அடையமுடியவில்லை, அது ஏன்? என்ற கேள்வி வந்தபோது என்னால் ஓர் உண்மையை உணர முடிந்தது,

   உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் ஓர் பொதுவான அம்சம் உள்ளது, இன்பத்தையும் சௌகரியத்தையும் தேடி வாழ்க்கை பயணத்தை அனைத்து ஜீவன்களும் நகர்த்துகின்றன, கண்ணுக்கு தெரியாத அமீபா முதல் மிக உயரிய படைப்பான மனிதன் வரையில் இந்த விதி பொருந்தும், இதில் மிக முக்கியமாக மனிதன் தனது சுய சந்தோஷத்திற்காகவே அனைத்து செயல்களிலும் ஈடுபடுகிறான், தர்மம் செய்வது முதல் திருடுவது வரை மனிதனின் தனிப்பட்ட சந்தோஷ வேட்டையே அடிப்படையாக அமைகிறது என்பதை தர்கீக ரீதியில் சிந்தித்தால் நம்மால் உணர முடியும்


    இன்னது செய்தால் உனக்கு இன்னது கிடைக்கும் என்று கூறினால்தான் நம்மால் எதையுமே செய்யமுடிகிறது, பொது நலம் பரோபகாரம் என்று ஆயிரம் வார்த்தைகளால் நமது செயலை நியாயப்படுத்திக் கொண்டாலும் அடித்தள உண்மை என்பது நான் மேலே குறிப்பிட்டது தான் என்பதில் எந்த மாற்றமும் இல்லை, இந்த ரீதியில் பிரச்சார யுக்தி அமைத்ததனால்தான் மற்ற மத புனித நூல்கள் அனைவராலும் அறியப்பட்டு இருக்கிறது.

நான் என்ன கூற வருகிறேன் என்றால் பரமார்த்திக விஷயங்கள் ஆயிரம் பேச்பட்டாலும் நம்மில் பலர் லௌகீகளே  ஆகும், லௌகீக சிக்கல்களை தீர்த்து வைப்பது எதுவோ அதைத்தான் மக்கள் அதிகம் நாடுவார்கள், சம்சார சாகரத்திலிருந்து வெளியே வர கீதை தோணியாக இருக்கிறது என்று அதிகம் பேசப்பட்டதே தவிர சம்சார சிக்கல்களை திர்த்து வைக்க கீதை வழி செய்கிறது என்று அதிகமாக பிரச்சாரம் செய்யப்படவில்லை என்றே நான் கருதுகிறேன், இது தான் நம்மில் பலர் கீதையை கண்ணால் கூட பார்க்காததற்கு காரணம் என்று நான் நம்புகிறேன்.

   தனிமனித சிக்கல்களை அதாவது வாழ்வில் அன்றாடம் ஏற்படும் பிரச்சனைகளை கீதை தீர்க்குமா? அப்படி தீர்க்கப்பட்ட பிரச்சனைகள் ஆதாரமாக ஏதேனும் உள்ளதா? என்று நான் பல நாட்களாக சிந்தித்தது உண்டு, எந்த தேடுதலுக்குமே இறைவன் காலதாமதம் செய்தாலும் கூட உறுதியான பதிலை தருவான் இது அனுபவ உண்மை, என்னிடம் வந்த ஓர் அன்பர் தனக்கு இருந்த தீராத வயிற்று வலி நோயை கீதையில் ஓர் குறிப்பிட்ட ஸ்லோகத்தை தொடர்ச்சியாக சொல்லி பரிபூரணமாக குணமாக்கி கொண்டதாகவும் தனக்கு அந்த வழியை தான் ஏதேச்சையாக சந்தித்த ஞானி போன்று இருந்த ஒருவர் கூறியதாகவும் என்னிடம் சொன்னார், அவர் சொன்ன தகவல் எனக்கு புது வேகத்தையும் உற்சாகத்தையும் தந்தது, கடன் சுமையால் வருந்தி வாழ்வில் நொந்து கிடந்த என் பக்தர் ஒருவருக்கு கீதையின் ஸ்லோகம் ஒன்று கொடுத்து ஜெபிக்க சொன்னேன், என்ன ஆச்சரியம் மூன்றே மாதத்தில் கடன் தீருவதற்கான வழியை அந்த பக்தர் கண்டார் அது எந்த சுலோகம் என்பது தானே உங்கள் கேள்வி?  நாளை இதை விரிவாக பேசுவோம்
                                                                                                                                                             (கடன்தொல்லைஅகற்றும்மந்திரம்)                                                                                                         

3 comments:

virutcham said...

உண்மை தான்.
நல்ல முயற்சி. தொடருங்கள்.
கீதையின் சுலோகங்கள் பிரச்சனையை தீர்க்கும் என்று சொல்லும் போது கூடவே அது என்ன சுலோகம் என்பதை அல்லது ref no கொடுத்தால் உபயோகமாக இருக்கும் இல்லையா?

Unknown said...

உங்கள் வலைப்பதிவை எனக்கு மிகவும் பிடித்திருக்கின்றது.
தொடருங்கள் மேலும்.

நண்பர்கள் உலகம் said...

அருமையான பாடம்!தொடரட்டும்!

Post a Comment

                     முக்கிய அறிவிப்பு  
           நமது ' ஸ்ரீ நாராயண கேசரி ' தளத்தை பார்வையிட்ட பல வாசகர்கள் தங்களது ஆன்மீக கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டுமென்று தொலை பேசியிலும் ஈ-மெயிலிலும் வற்புறுத்தி கேட்டனர் அதனால் கேள்விகளை +91-9442426434 என்ற அலைபேசி எண்ணிலும் E-Mail sriramanandaguruji@gmail.comமுகவரிக்கும் தெரிவிக்கவும் பதில் நமது தளத்தில் வெளியிடப்படும்