கடன் தொல்லை அகற்றும் மந்திரம்

       வர் ஒரு காலத்தில் பெரிய பணக்காரர், வண்டி வாகன வசதியுடன் வாழ்வின் சகல போகங்களையும் அனுபவித்து திளைத்தவர், இன்றோ வாலருத்த பட்டம் போல் கடன் சூறாவெளியில் அகப்பட்டு எப்போது வேண்டுமென்றாலும் மண்ணில் வீழ்ந்து விடும் நிலையிலிருந்தார்.பார்க்காத ஜோதிடர் இல்லை, செய்யாத பரிகாரம் இல்லை, கடன் சுமை நாளுக்கு நாள் ஏறியதே ஒழிய குறைவதற்கான அறிகுறியே தென்படவில்லை, இது உன் தலை எழுத்து இதிலிருந்து மீளுவதற்கு இனி யாதொரு வழியும் இல்லை என்று எல்லோரும் அவரை கைவிட்டு விட்டார்கள், இந்த நிலையை என்னிடம் சொல்லி கண்ணீர்விட்டு அழுதார், தான் துன்பப்படுவதை பற்றி கவலையில்லை, கடனை திருப்பிக் கொடுக்க முடியாது கடன் கொடுத்தவர்களுக்கு துரோகியாக மாறிவிடுவேனா என்று தான் ஒவ்வொரு நாளும் துடிப்பதாக நெஞ்சுருகி கண்ணீர் மல்க கூறினார்.


    அவரின் பரிதாபகரமான நிலையை பரிபூரணமாக உணர்ந்த நான் ஸ்ரீமத் பகவத் கீதையிலிருந்து ஒரு குறிப்பிட்ட ஸ்லோகத்தை எழுதிக் கொடுத்து சில முறைகளையும் சொல்லி இதை பாராயணம் செய்யுங்கள். 50 நாட்களுக்கு பின்பு என்னை சந்தியுங்கள் எனக்கூறி அனுப்பினேன், அதன்பின்பு எனது பல்வேறு வேலைகளில் அவரைப் பற்றிய விஷயத்தை நான் மறந்தே போய்விட்டேன்,இரண்டு மாதம் கழித்து என்னை அவர் சந்தித்த போது புதிய மனிதராக மாறி இருந்தார், முகத்திலும் பேச்சிலும் தெளிவும் நம்பிக்கையும் வெளிப்பட்டன, தனது கடன் தீருவதற்கு ஒரு புதுவழி கிடைத்துவிட்டதாகவும் நலிந்து போன தனது தொழிலும் வாழ்வும் இனி புத்தொளி மிக்கதாக மாறுவதற்கான சூழ்நிலை ஏற்பட்டு விட்டதாக கூறினார்,

   அவர் வாழ்வை மாற்றிய சுலோகம் எது அதை பாராயணம் செய்யும் முறை என்ன என அறிந்து கொள்ளும் ஆவல் எல்லோருக்கும் ஏற்படுவது இயற்கை, அதை விளக்கமாக சொல்வது தான் இந்த கட்டுரையின் நோக்கம், ஸ்ரீமத் பகவத்கீதையில் பக்தி யோகம் என்ற பனிரெண்டாம் அத்யாயத்தில் ஏழாவது ஸ்லோகம் தான் அது,


“தேஷாமஹம் ஸமுத்தர்தா
         ம்ருத்யுஸம்  ஸாரஸாகராத்
    பவாமி நசிராத்பார்த மய்யாவேஸித
                    சேதஸாம்”

இதன் பொருள் என்ன? யார் எல்லாக் கர்மாக்களையும் என்னிடம் அர்ப்பணித்து என்னையே குறிக்கோளாகக் கொண்டு மற்றொன்றை நினைக்காத யோகத்தினால் என்னை தியானம் செய்து உபாசிக்கிறார்களோ அப்படி என்னிடமே மனதை புகுத்திய அத்தகையவர்களை ஜனன மரணமாகிய சம்சாரத்திலிருந்து உடனே கரை சேர்த்து விடுவேன், அதாவது உடலாகிய ஜடத்தின் கட்டிலிருந்து (கர்மாவிலிருந்து) பக்தர்கள் தீவிர உபாசனையின் மூலம் உடனடியாகவே விடுவிக்கப்படுவார்கள் என்று பகவானாகிய ஸ்ரீ கிருஷ்ணர் வெளிப்படையாக அந்த ஸ்லோகத்தில் உறுதி அளிக்கிறார், எனவே எந்த ஒரு மனிதனும் முழுமையாக பக்தி செய்வதற்கு படைக்கப்பட்டு இருக்கிறான் என்பது சர்வ நிச்சயமாகிறது, எந்த செயலை மனிதன் செய்கிறான் என்து முக்கியமில்லை, எதை இறைவனுக்கு அர்ப்பணித்து செய்கிறான் என்பதுதான் மிக முக்கியமாகிறது.

பரமார்த்திக கர்மாக்களோ. லௌகீக கர்மாக்களோ குரு ஷேத்திரப் பேரில் அர்ஜீனன் ஸ்ரீகிருஷ்ணருக்கு அர்ப்பணித்து காரியங்களை செய்தது போல் எந்த ஒரு செயலும் இறை அர்ப்பணமாக செய்வதையே ஆத்மாவிற்கான முன்னேற்ற வழி என்று இறைவன் கருதுகிறான், இது தான் வராக புராணத்தில்

“நயாமி பரமம் ஸ்தானம் அர்சிராதி
                 கதிம்வினா
    கருட ஸ்கந்தம் ஆரோப்ய யதேச்சம்
                அனிவாரித”
என்று சொல்லப்பட்டு இருக்கிறது,

   அதாவது ஆன்மிக முன்னேற்றத்திற்கு தன் ஆத்மாவை மாற்றிக் கொள்ள சாதகர்கள் அஷ்டாங்கயோகம் பயில வேண்டிய அவசியம் இல்லை, பக்தி பண்னினால் மட்டுமே போதுமானது, பகவானே ஆத்மாவின் முன்னேற்றத்திற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்கிறான், இது எப்படி என்றால் குட்டிப்பூனையானது தனது முழு வாழ்க்கையை தாய்பூனையிடம் ஒப்படைத்து விடுகிறது, வாழ்வானாலும் தாழ்வானாலும் தாய்ப்பூனை தருவதையே மனதிருப்தியோடு குட்டிப்பூனை பெற்று சந்தோஷத்தோடும் சர்வ சுதந்திரத்தோடும் இனிதே வாழ்கிறது.

இதேபோன்று நம் வாழ்வின் அனைத்தையும் சர்வ வல்லமை படைத்த ஸ்ரீ கிருஷ்ணனிடம் ஒப்படைத்துவிட வேண்டும், ஒரு சிறந்த விவசாயி தனது தோட்டத்திலிருக்கும் எந்த தென்னை மரத்தையும் பட்டு போக விடமாட்டான், மரத்தின் வளர்ச்சிக்காக நீர் பாய்ச்சுவதும் உரம் வைப்பதும் விவசாயிகள் நித்ய கடமை ஆகிவிடுகிறது, அதேபோன்று தான் நமது வளர்ச்சியை ஸ்ரீகிருஷ்ணர் சதா சர்காலமும் கண்காணித்து நமக்கு அனுக்கிரக்கிறார்,


   இதுதான் இந்த ஸ்லோகத்தின் பொருளும் உட்பொருளும் ஆகும், இதில் சாமான்ய மனிதர்களின் பிரச்சனையை தீர்க்கும் பகுதி எதில் உள்ளது என்ற கேள்வி எழலாம், ஸ்லோகத்தின் அட்சரங்களை பகுத்து பார்க்கும்போது “மகாலஷ்மியின்” அருளைப் பெரும் பீஜ மந்திரம் உள்ளீடாக மறைந்து உள்ளது, இதை குரு சிஷ்ய உறவால் மட்டுமே உள்ளங்கை நெல்லிக்கனிபோல் அறிந்து கொள்ளலாம்.

இனி இதை எப்படி பாராயணம் செய்வது என்று தெரிந்து கொள்வோம், பசும் சாணத்தால் மெழுகி சுத்தம் செய்யப்பட்ட தனிபூஜை அறையில் ஸ்ரீகிருஷ்ணர் விக்ரகமோ அல்லது திருஉருவப் படமோ ஸ்தாபிதம் செய்ய வேண்டும், இளம் துளசி மாலை சாற்றி அவல் பாயசம் சிறிது செய்து நைவேத்யம் வைக்க வேண்டும்.

“ஸ்ரீ ருக்மணீ ஸத்யபாமா  ஸமேதே ஸ்ரீகிருஷ்ண
        பரமாத்மந : ப்ரஸாதேந ருணபாதா நிவ்ருத்திபூர்வக
                            ஸீகபராப்த்யர்த்தம்
ஸ்ரீமத் பகவத்கீதாஸ்லோக பாராயணம் அஹம் கரிஷ்யே!”

என்ற மந்திரத்தை மூன்று முறை சொல்லி சங்கல்பம் செய்ய வேண்டும், பின்னர் முன்பு சொன்ன கீதை ஸ்லோகத்தை 1500 முறை காலையும் மாலை சூரிய அஸ்தமனத்திற்குபின் 1500 முறையும் ஆக 1 நாளைக்கு 3000 முறை ஜெபிக்க வேண்டும், இப்படி தொடர்நது 54 நாட்கள் ஜெபிக்க வேண்டும், ஒரு லட்சம் ஐம்பதாயிரத்திற்கு மேல் உறு ஏற்றப்படும் இந்த கீதை ஸ்லோகம் உங்கள் வாழ்வில் வியத்தகு மாற்றத்தை ஏற்படுத்துவதை கண்கூடாக நீங்கள் காணலாம்.

54 நாட்கள் இந்த பாராயண பூஜையை தொடர்ந்து செய்வதில் சில சிக்கல்களும் பல பிரச்சினைகளும் வரலாம், எடுத்த காரியத்தை தொடுத்து முடிக்கும் மனோதைரியம் இவர்களிடம் உள்ளதா என பரிசோதனை செய்து பார்பதற்காகவே இறைவன் இத்தகைய இடர்பாடுகள் செயற்கையாக உருவாக்குவான், எனவே பகீரதன் கொண்ட மனோதைரியமும் விடாமுயற்சியும் அயராத உழைப்பும் நாமும் கொண்டு மனம் கலங்காது உடல் சோராது இந்த நற்காரியத்தை செய்து முடிக்க ஸ்ரீகிருஷ்ணனையே பரிபூரணமாக சரணடைந்து காரியமாற்ற வேண்டும்.

கடனுக்கு மட்டும்தான் கீதையில் நிவர்த்தி ஸ்லோகம் உண்டா மற்றவற்றுக்கு இல்லையா? என எண்ணுபவர்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன், நோயால் வருந்துபவர்களுக்கு. எல்லாம் இருந்தும் நிம்மதி இல்லாமல் வருந்துபவர்களுக்கு. புகழ்வேண்டி ஏங்குபவர்களுக்கு. வெற்றி வேண்டி கலங்குபவர்களுக்கு. பகைவர் தொல்லையால் வருந்துபவர்களுக்கு இன்னும் எத்தனையோ மனித துக்கங்களுக்கு அருமருந்தாக ஸ்ரீமத் கீதையின் 18 அத்தியாயங்களிலும் 700 ஸ்லோகங்களிலும் நிவாரண மருந்து மறைந்து கிடக்கிறது.

அதை சற்று சிரமப்பட்டு தேடினோம் என்றால் அனைவருக்குமே அந்த அற்புத மாணிக்க கற்கள் கிடைக்கும் என்று நான் உறுதி கூறுகிறேன், இப்படிப்பட்ட எத்தனையோ அற்புதமான ரகசியங்கள் கீதையில் மட்டுமல்ல வேறுபலவற்றிலும் மறைந்து உள்ளது,
0 comments:

Post a Comment

                     முக்கிய அறிவிப்பு  
           நமது ' ஸ்ரீ நாராயண கேசரி ' தளத்தை பார்வையிட்ட பல வாசகர்கள் தங்களது ஆன்மீக கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டுமென்று தொலை பேசியிலும் ஈ-மெயிலிலும் வற்புறுத்தி கேட்டனர் அதனால் கேள்விகளை +91-9442426434 என்ற அலைபேசி எண்ணிலும் E-Mail sriramanandaguruji@gmail.comமுகவரிக்கும் தெரிவிக்கவும் பதில் நமது தளத்தில் வெளியிடப்படும்