ராமன் என்பது கங்கை நதி


கேள்வி: உங்கள் பதிலால் எனது சந்தேக மனம் ஆறுதல் அடைகிறது. ராமன் வாழ்ந்து முடித்த பிறகுதான் ராமாயணம் எழுதப்பட்டிருக்க வேண்டும். அது எப்போது எழுதப்பட்டது அதை எழுதிய வால்மீகி என்பவர் யார்?



                ராமாயணம் நடந்த காலம் இதுதான் இதுவாகத்தான் இருக்க வேண்டும் என்று இதுவரை எவராலும் உறுதி செய்ய முடியவில்லை. இருந்தாலும் மகாபாரதம் எழுத்து வடிவம் பெறுவதற்கு முன்பே ராமாயணம் எழுதப்பட்டு விட்டது. இதற்கு ஆதாரம் வியாச முனிவர் எழுதிய மகாபாரத்தில் வனபருவத்தில் ராமோ பாக்யாஞனாம்  என்ற பெயரில் ராமனின் கதை கூறப்பட்டுள்ளது. அதில் வால்மீகியின் சில சுலோகங்கள் எடுத்தாளப்பட்டுள்ளன. இதிலிருந்து மகாபாரதத்திற்கு முந்தியது ராமாயணம் என்பது எந்த விதமான ஐயங்களும் இல்லாது உறுதி செய்யப்பட்டுள்ளது. பலவிதமான சர்ச்சைகளும் வாதப்பிரதிவாதங்களும் ஏற்பட்ட நிலையிலும் மகாபாரதம் கி.மு. நான்காம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்கலாம் என்று அறிஞர்கள் ஒருவாறு ஒத்துக் கொள்கிறார்கள். எனவே ராமாயணம் அதற்குச்சில நூற்றாண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று கருதுவதில் தவறு இருக்காது என நம்புகிறேன்.

       ராமாயணத்தை எழுதிய வால்மீகி கிருணு என்ற மகரிஷியின் மகனாவார். இவரின் இயற்பெயர் ரிச்சன் என்பதாகும். காட்டிலே பிறந்து காட்டிலே வளர்ந்ததினால் விலங்குகளை வேட்டையாடும் தொழிலை ரிச்சன் செய்தாலும் வழிப்பறிகூடவே செய்ததாகவும் கூறப்படுகிறது. சில அசம்பாவிதமான சம்பவங்களை தமது வாழ்க்கையில் அனுபவித்த ரிச்சன் மகரிஷிகள் சிலரின் ஆலோசனைப்படி ராமநாம ஜபத்தை மேற்கொண்டதாகவும் அதன் மூலம் அளவிட முடியாத ஞானத்தைப்பெற்று வால்மீகி என்ற பெயரைக்கொண்டதாகவும் ராமாயணத்திலேயே தகவல்கள் உள்ளன.

    நாகரீகமற்ற காட்டு வாசியாக முரட்டு ஆசாமியாக இருந்தாலும் உள்ளுணர்வு விழித்தெழுந்தால் எவனும் தனது சூழல்களை பொடிப்பொடியாக்கி பெரும் அறிஞனாக, ஞானியாக மாறிவிடுவான் என்பதற்கு வால்மீகியே தக்க சான்றாகும். எந்த குருகுலவாசத்திலும் மொழியை, இலக்கணத்தை இலக்கியத்தைக் கற்றிராத வால்மீகி இன்றைய நிலையிலும் வியப்போடு ரசிக்கும் வண்ணம் அழகான கவிதைகளில் ராமாயணத்தை எழுதியுள்ளார். அந்த கவிதைகளுக்கு இணையான கவிதைகள் இன்று வரை தோன்றவில்லை என்றே சொல்லலாம்.

        ராமாயணத்தில் ஏழு காண்டங்கள் உள்ளன. இதில் 500 சருக்கங்களும், 24000 சுலோகங்களும் உள்ளதாக வால்மீகியே கூறுகிறார். ஆனால் 647 சருக்கங்களும் 24250 சுலோகங்களும் ராமாயணத்தில் இன்று இருக்கின்றது இதை வைத்துப்பார்க்கும் பொழுது வால்மீகி ராமாயணத்தில் ஏராளமான இடைச்செருகல்கள் நடந்திருக்க வேண்டும் என்பது புலனாகிறது. ராமனின் வாழ்க்கையை மட்டும் ராமாயணம் கூறவில்லை. விஸ்வாமித்திரர் வரலாறு, பகிரதன் தவம், சுயப்பிரபையின் கதை என்று பல கிளைக் கதைகள் அதில் அடங்கியுள்ளன.

   தொல்பழங்காலத்தில் உருவான பலவித காவியங்களில் கதைகளுக்கு மட்டுமே முக்கியத்தும் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் ராமாயணத்தில் காவிய வடிவத்துடன் அழகிய உவமைகள், உருவகங்கள் தத்துவ சிந்தனைகள் ஆகிய அனைத்தும் மிக நேர்த்தியாக சொல்லப்பட்டுள்ளது. இதனாலேயே ராமாயணத்திற்கு ஆதிகாவியம் என்ற சிறப்பிடம் தரப்படுகிறது. வால்மீகியும் ஆதிகவி என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார். ராமாயணத்திற்கு இந்த பெயர் மட்டுமல்லாது ராவணன் வதம், சீதையின் பெருங்கதை என்ற பெயர்களையும் வால்மீகி தருகிறார். இதன் மூலம் சில உண்மைகளை நாம் புரிந்து கொள்ளுமாறு அவர் செய்கிறார் ராமாவதாரத்தின் முக்கிய நோக்கம் ராவணனை வதைப்பது என்பதாகும். நல்லவர்களுக்கும் தர்மங்களுக்கும் ஊறுவிளைவிப்பவன் எவனாக இருந்தாலும் அவனிடம் எத்தனைச்சிறப்புகள் இருந்தாலும் அவன் அழிந்தே தீரவேண்டும் என்பதாகவும், பெண்ணின் கற்பின் சிறப்பு அவளின் சோதனைகளைத்தாங்கிக்கொண்டு போரிடும் தன்மையிலேயே இருக்கிறது என்பதை நாம் உணர வேண்டும் என்பதாகவும் மேற்கண்ட பெயர்களை அவர் இக்காவியத்திற்கு சூட்டி இருக்கலாம்.


   ராமனின் உயர்வு, ராமாயணத்தின் நோக்கம் என்பதைப் பற்றியெல்லாம் நீ மிக நன்றாக அறிந்திருப்பாய் எனவே அதைப்பற்றி மீண்டும் சொல்லாமல் ராமாயணத்தில் உள்ள தத்துவ சிந்தனைகளை உனக்குக்கூறினால் நன்றாக இருக்கும் என்று கருதுகிறேன். அதே நேரம் ராமாயணத்தின் மூலமாக அக்கால சமூக அமைப்பையும் மக்களின் அறிவாற்றல் எப்படி இருந்தது என்பதையும் நாம் அறிய முடிகிறது. அவற்றை இன்றைய நிலையில் புரிந்து கொண்டு செயல்படுவது பல நல்ல விளைவுகளை சமூகத்தில் ஏற்படுத்தும் என்பதினால் முக்கியமானவைகளாக அவைகளைக்குறிப்பிட விரும்புகிறேன்.


   அக்கால சமூக அமைப்பில் வேதங்கள் குறிப்பிடும் வருணாஸரம தர்மங்கள் மிக முக்கியமாக கடைபிடிக்கப்பட்டு வந்தது. ஆனால் வருணங்கள் என்பது அதாவது ஜாதி அமைப்பு என்பது இன்று நாம் கடைபிடிக்கும் பிறப்பை அடிப்படையாகக் கொண்டு அன்று இல்லை. தனி மனிதனின் சிந்தனையையும், குண அம்சத்தையும், தொழில் நிலையையும் அடிப்படையாக கொண்டே அன்றைய வருணாஸரம தர்மங்கள் நடைமுறையில் இருந்தன.

கேள்வி: நீங்கள் கூறும் இந்த செய்தி வியப்பாக உள்ளது. பிராமணன், சத்திரியன், வைசீகன், சூத்திரர் என்ற நான்கு வருணமும் பஞ்சமன் என்ற ஐந்தாவது வருணமும் பிறப்பின் அடிப்படையிலேயே ஆதிகாலம் முதற்கொண்டே நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. அதனால்தான் காலங்காலமாக சமுதாயத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதி மக்கள் ஒடுக்கப்பட்ட நிலையில் வைக்கப்பட்டுள்ளார்கள் என்ற உண்மை பலராலும் கூறப்பட்டு வருகிறது. இதனாலேயே வருணாஸரம தர்மம் என்பது நாகரீக சமூகத்தில் ஒதுக்கப்பட வேண்டியதாக உள்ளது என்றும் கூறப்படுகிறது. நிலைமை அப்படி இருக்க பிறப்பால் வருவது வருணம் அல்ல குணத்தால் வருவதுதான் வர்ணம் என்ற உங்கள் கருத்தும் இதற்கு முன் பல இருந்த விபரங்கள் முழுமையாகத்தெரியவில்லை. அதைத் தெளிவுபடுத்தினால் நன்றாக இருக்குமென்று கருதுகிறேன்



   ருண தர்மம் என்பது இன்றைய நவீன சிந்தனைவாதிகள் கூறுவதைப்போல் ஒதுக்கப்பட வேண்டிய விஷயம் அல்ல. அதை ஒதுக்கி விடவும் யாராலும் எந்தக் காலத்திலும் முடியாது. காரணம் வருணதர்மம் என்பது இயற்கையையும் மனிதனது உளப்பாங்கையும் சார்ந்த விஷயமாகும். வேதங்களில் கூறப்பட்டுள்ள மனோதத்துவப்படி மனித மனங்கள் மூன்று பகுதிகளாகப்பிரிக்கப்பட்டிருக்கிறது. அவை,

1. சத்வம் (செயல்களை அதாவது கர்மாக்களை அடக்கி ஆளும் நிலை, தூய்மை, நன்மை, ஞானம் ஆகியவற்றின் ஒட்டு மொத்த உருவம்)

2. ரஜஸ் (செயல் துடிப்பு மிக்க நிலை,சிந்தனையில் விவேகமும் செயலில் வேகமும் உள்ள மனப்பாங்கு)

3. தமஸ் (சிந்தனைத் திறனற்ற துரித இயக்கத்தை விரும்பாத பலஹீனமான மனநிலை)

 இந்த மூன்று மனநிலைகளிலேயே உலகிலுள்ள அனைத்துவிதமான மனித மனங்களின் இயல்புகள் அடங்கிவிடுவதாக வேதம் கருதுகிறது. இது உண்மையும் கூட இவற்றின் கலவைகளாகவே இன்றைய மனிதர்களின் இயல்புகள் இருப்பதை நாம் நன்கு அறியலாம்.

   ரிக் வேதத்தில் 10 முதல் 90 பகுதிகள் வரை வருகின்ற புருஷ சூக்தத்தில் வர்ணம் என்ற சொல் மனிதனின் சமூக செயல்பாடுகளைக்குறிக்கும் விதத்திலும் குண இயல்புகளை அடிக்கோடிட்டு காட்டும் விதத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. முதல் முறையாக பிராமணன், வைசீகன், சத்திரியன், சூத்திரன் ஆகிய சொற்கள் புருஷ சூக்தத்திலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது. புருஷ சூக்தம் புருஷன் அதாவது ஆத்மா என்பதைப் பற்றி விரிவாக பேசும் பகுதியாகும். இதில் பரமாத்வாவின் வாயாக பிராமணனும், புஜங்களாக சத்திரியனும், தொடைகளாக வைசீகனும், பாதங்களாக சூத்திரனும் இருப்பதை குறியீடுகளாக காட்டப்பட்டுள்ளது. வாயிலிருந்து பேச்சு வரும் அதனால்தான் அது கல்விக்கான குறியீடு ஆகிறது. புஜங்கள் என்பது வலிமையை காட்டுகிறது அதனால் அது ஆளுமைக்கான குறியீடு ஆகும். தொடை என்பது உருவாக்குதல் என்ற குறியீடு ஆகும். பாதம் தொழிற்படுதல் என்ற குறியீடு ஆகும். எனவே வருணதர்மம் என்பது தனிமனிதனின் சிந்தனையின் பொருட்டே உருவானது ஆகும்.

 கற்றவன், கற்றவழி நிற்பவன், கற்றவற்றை கல்லாதவர்களுக்கு போதிப்பவன் எவனாக இருந்தாலும் அவன் பிராமணனே ஆவான்.

ஆளநினைப்பவன், அதற்காக செயல்படுபவன் பிறர் பொருட்டு துன்பங்களை ஏற்கத் துணிபவன் எவனோ அவனே சத்திரியன்.

பொருட்களை உற்பத்தி செய்பவன், பொருள் ஈட்டுபவன், பொருள் தேவையைப்பூர்த்தி செய்பவன், பொருளாதாரத்தை மேம்படுத்த உடலாலும் மனதாலும் உழைப்பவன் எவனாக இருப்பினும் அவன் வைசீகன்.

சிந்தனைக்கு முதலிடம் கொடுக்காமல் செயலை மட்டுமே மூலதனமாகக் கொள்பவன் தனது உடல் உழைப்பில் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள பாடுபடுபவன் எவனாக இருந்தாலும் அவன் சூத்திரன்.

    இன்றைய ஜாதி நடைமுறையோடு இந்த வருணக் கொள்கையைக் கலந்து சிந்தித்துப்பார்ப்போம். படித்தவன் பிராமணன் என்று சொல்லிக் கொள்பவனுக்கு கல்லாதவன் மூளை உழைப்பு இல்லாதவன் மகனாக இருந்தால் அவன் நிச்சயமாக பிராமணனாக கொள்ளத் தக்கவன் ஆகமாட்டான். அதே போன்றே உடல் உழைப்பை மூலதனமாகக் கொண்ட சூத்திரனுக்கு கல்வி கேள்விகளில் தேர்ச்சி மிக்க பிள்ளை இருந்தால் அவனைப் பிராமணனாக ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும். ஆகவே வருணம் என்பது ஜாதி என்பது பிறப்பின் அடிப்படையில் வருகிறது என்று வேதத்தில் எந்த இடத்திலேயும் கூறப்படவில்லை.

    இதை வேதம் காட்டும் சத்வ, ரஜஸ், தமஸ் என்ற மனோதத்துவ அடிப்படையில் பார்ப்போம். சத்வகுணம் மேலோங்கி நிற்பவன் அதாவது ஞானம், நன்மை, தூய்மை ஆகிய மனோபாவம் உடையவன் பிராமணன் ஆவான். வேகமும், செயல் துடிப்பும் உடைய மனோபாவம் கொண்டவன் சத்ரியன் ஆவான். செயல்துடிப்புள்ள ரஜஸமும் மூளைச் செயல்பாட்டை ஆளுமைக் குணத்திலிருந்து சற்று மாற்றிய தமஸமும் உடைய மனோபாவம் உடையவர்கள் வைசிகன் ஆவான். தமஸகுணம் மட்டுமே உடையவன் சூத்திரன் ஆவான். இந்த குணங்களும் தலைமுறைத் தலைமுறையாக தொடர்ச்சியாக மரபுவழியில் வருவது அல்ல. ஒவ்வொரு சிருஷ்டியும் ஒவ்வொரு இயல்பைக் கொண்டது என்பதினால் குணவழி, ஜாதிக்கொள்கை பிறப்பை அடிப்படையாகக் கொண்டது அல்ல.
கேள்வி: இந்து மதத்திலுள்ள ஜாதிமுறை பிறப்பை அடிப்படையாகக்கொண்டது அல்ல என்று நீங்கள் கூறுகிறீர்கள். அதனை உண்மையென்று ஏற்றுக்கொண்டால் குணத்தின் அடிப்படையில் சூத்திரராக இருக்கும் ஒருவனுக்கு பிறக்கும் மகன் கல்வியில் சிறந்தவனாக இருந்தால் அவன் வேதங்களைக்கற்றுக் கொள்ளும் தகுதியுடைய பிராமணனாக ஆகிவிடுகிறான். ஆனால் மனுநீதி சாஸ்திரம் போன்ற நூல்கள் பிறப்பையே வருணத்தின் அடிப்படையாக கொள்வதோடு சூத்திரன் வேதத்தை கேட்பதற்குக்கூட தகுதியில்லாதவன் என்று கூறுவதோடு இல்லாமல் அப்படி கேட்பவனின் செவிகளையும் படிப்பவனின் நாவுகளையும் பங்கப்படுத்த வேண்டும் என்றல்லவா கூறுகின்றது. இதற்குக் தாங்கள் என்ன விளக்கம் தருகிறீர்கள்?


   நீ சொல்லுவதைப்போன்ற குறிப்புகள் மனுநீதி சாஸ்திரத்தில் மட்டுமல்ல சாணக்கியனின் அர்த்தசாஸ்திர நூலிலும் வேறு பல நூல்களிலும் இருப்பது என்னவோ உண்மைதான் அதை மறைக்கவோ மறுக்கவோ முடியாது. ஆனால் நமது நாட்டை பொறுத்தவரை அறிவு நூல்கள் என்பவைகள் அதை உருவாக்கிய மூல கர்த்தாக்களின் கைவண்ணத்தின் நிஜ வடிவங்களாக இன்று நமக்குக்கிடைக்கவில்லை. அவ்வப்போது ஏராளமான நபர்கள் அவைகளில் தங்களது கருத்துக்களை புகுத்தி திருத்தி அமைத்து இருக்கிறார்கள். வேறு சிலரோ பிரபலமான நூல்களின் ஆசிரியர்களின் பெயர்களில் புதிய நூல்களை எழுதியும் வைத்திருக்கிறார்கள். உதாரணமாக திருவள்ளுவர் திருக்குறளை எழுதியிருப்பது நாம் அனைவரும் அறிந்த விஷயமாகும். ஆனால் அவர் பெயரிலேயே சில ஜோதிட நூல்கள் இருக்கின்றன. அவைகளின் மொழிநடையை வைத்தே வள்ளுவருக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்ற முடிவிற்கு நாம் சுலபமாக வந்துவிடலாம். இதே போன்றுதான் ஆதி மனுசாஸ்திரத்தில் பல குளறுபடிகளும் இடைச் செருகல்களும் நடந்திருக்கிறது.

   வேத பண்பாட்டை பின்பற்றுகின்ற வாழ்க்கை முறை நமது நாட்டில் மகா அலெக்ஸôண்டரின் படையெடுப்பு நடக்கும் வரை நடைமுறையில் இருந்திருக்கிறது. அதன் பிறகு தொடர்ச்சியான அந்நியப் படையெடுப்பு நம் மீது வலுக்கட்டாயமாக நிகழ்ந்த பொழுது நம் பண்பாட்டு கூறுகளைப்பாதுகாக்க வேண்டி குடும்பத்தின் அடிப்படையில் அறிவு விஷயங்களும், தொழில் விஷயங்களும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

    அவசியத்திற்காகவும் அவசரத்திற்காகவும் ஏற்படுத்தப்பட்ட இந்த முறை மாற்றியமைக்கப்படாமலேயே மக்களிடம் நாளாவட்டத்தில் அமைந்துவிட்டது. கலை மற்றும் அறிவு சார்ந்த துறைகளில் நிபுணனாக இருப்பவன் அதை வைத்தே தனது செல்வ நிலையை வளமாக்கிக் கொள்ள ஆரம்பித்தபிறகு அவைகளை மற்றவர்களுக்கு விட்டுக்கொடுக்க துணியமாட்டான்.

     அதுவும் வேதம், உபநிஷதம் போன்றவற்றை தொடர்ச்சியாக ஓதிக்கொண்டு இருப்பவனின் அறிவுத்திறமை நாளாவட்டத்தில் மிகவும் கூர்மையான நிலையை அடைந்துவிடும். வேதத்தின் ஒலி அலைக்கு இத்தகைய சக்தியுண்டு. எனவே தனது வாழ்க்கை தரத்தை உயர்த்தும் அறிவு பொக்கிஷத்தை தனக்கே சொந்தமாக்கிக் கொள்ள விரும்பிய ஒரு சில சுயநல புத்திசாலிகள் தங்களது கூட்டு முயற்சியால் பழைய நூல்களை தங்களது விருப்பப்படி திருத்தி அமைத்து இத்தகைய ஜாதி அமைப்பை நமது நாட்டில் வலுக்கட்டாயமாக நிலைநிற்கும்படி செய்துவிட்டார்கள்.

    இதற்கு வேதகால சமூகம் பொறுப்பாக முடியாது. இதற்கு ராமாயணத்திலேயே நல்ல ஆதாரங்கள் இருக்கின்றன. வேதங்கள் பிராமணர்களுக்கே சொந்தம் அதை அவர்கள் மட்டுமே கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிலை இன்றும் இருந்து வருகிறது. ஆனால் ராமாயணக் கால சமூக அமைப்பில் கீழ் இனங்களாகக்கருதப்படும் வானரங்களும், அரக்கர்களும் கூட வேத பண்டிதர்களாக இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. எனவே வேதம் என்பது இக்காலத்தைப் போல அக்காலத்தில் தனி இனத்தின் சொத்தாக இல்லை என்பதை நன்றாகப்புரிந்து கொண்டு அடுத்த விஷயங்களை ஆராய்ச்சி செய்வோம்.

   ராமாயண சமூகத்தில் முடியாட்சி முறைதான் நிலவியது என்றாலும் அந்த முடியாட்சி முறை மக்களின் விருப்பு வெறுப்புகளை பிரதிபலிக்கும் குடியாட்சி முறையாகவே இருந்தது. அரசன் என்பவன் நாட்டை ஆள்பவனாக மட்டும் இல்லாது தர்மங்களைக்காப்பவனாகவும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயரச்செய்ய எத்தகைய தியாகத்தையும் செய்ய சித்தமாக இருப்பவனாகவும் தனது சொந்த வாழ்விலும் மக்களை வழிநடத்தும் பண்புகளில் சிறப்புத் தன்மை கொண்டவனாக இருப்பவனாகவும் கருதப்பட்டான் அவனும் அப்படியே இருந்தான்.

    மக்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு ஒழுக்கம் எவ்வாறு முக்கியமானதாக கருதப்பட்டதோ அதே அளவு முக்கியத்துவம் கல்விக்கும் தரப்பட்டது. ராமாயணத்தில் நேரடியாக குறிக்கப்படும் வார்த்தைகளிலிருந்தும் மறைமுகமாக சுட்டிகாட்டப்படும் வார்த்தைகளிலிருந்தும் அக்கால மக்கள் வேதங்கள், உபநிஷதங்கள் அவற்றிற்குரிய அங்கங்களான ஒலியியல், கிரியாமுறைகள், சொல்லிலக்கணம், இலக்கணம், செய்யுள் அமைதி, வானநூல், நீதி மற்றும் சட்டநூல், புராணங்கள், அரசியல், ராணுவ இயல் அளவை நூல், ஜோதிடம், கைரேகை, தடயவியல், மருத்துவம், வேளாண்மை, கால்நடை பராமரிப்பு, வாணிகம் மற்றும் நுண்கலைகளான இசை, நாட்டியம், சிற்பம் போன்ற துறைகளைத் திறம்பட கற்றிருந்தனர். அவைகளைப் போதிக்கும் குருகுலங்களும் அக்காலத்தில் புகழ்பெற்று விளங்கின.

    கட்டிடக்கலையில் நிபுணர்கள் பலர் அக்காலத்தில் இருந்தாலும் கூட அவர்கள் அரச குடும்பத்தினர் வாழுகின்ற அரண்மனைகளைக் கட்டினார்கள் என்றும் மக்கள் வாழும் மாளிகைகளையும் சிறு வீடுகளையும் கட்டினார்கள் என்றும் சொல்லப்பட்டிருக்கிறதே தவிர இறைவழிபாடு நிகழ்த்தும் வழிபாட்டு கூடங்களையோ, ஆலயங்களையோ நிர்மாணம் செய்தார்கள் என்று சிறு குறிப்புகள் கூட ராமாயணத்தில் இல்லை.


     இதிலிருந்து மிக முக்கியமான விஷயம் ஒன்று நமக்குத்தெரிகிறது. அக்கால மக்கள் இறைவனை ரூப வடிவில் வழிபட்டாலும் கூட அதற்கென்று தனி அமைப்புகளை ஏற்படுத்தவில்லை. யாகங்களுக்கும் கூட்டு வழிபாடுகளுக்கும் கொடுத்த முக்கியத்துவத்தை வழிபாட்டுக்கென்று தனி இடத்தை ஏற்படுத்திக்கொள்வதற்கு கொடுக்கவில்லை. மேலும் முனிவர்கள் வாழும் தவச்சாலைகளையே அக்கால மக்கள் புனிதப் பகுதிகளாக கருதியிருக்கிறார்கள். இதற்கு மலைகளிலும், காடுகளிலும் சுதந்திரமாக சுற்றித்திரியும் துறவிகள் நாட்டிற்குள் வரும்போது அவர்களை தங்க வைக்க ஆயாதனம், சைத்தியம் போன்ற சிறு குடில்கள் பெரிய நகரங்களிலும், சிறு கிராமங்களிலும் நிறைய இருந்தன என்ற குறிப்புகளும் ராமனின் அறச்செயல்களை பட்டியலிடும்போது ஆலயங்களை அமைத்தான் என்ற குறிப்புகள் இல்லாததே முக்கிய ஆதாரமாகும்.

கேள்வி: ராமாயணக் கால மக்கள் கோவில்கள் அமைத்து இறைவனை வழிபடவில்லை என்றாலும் கூட சமய நெறியை அவர்கள் நிச்சயம் கடைப்பிடித்து இருக்க வேண்டுமல்லவா எனவே அவர்களின் சமயக் கொள்கையும் வழிபாட்டு முறைகளும் எப்படி இருந்தன என்பதை விளக்குங்கள்?


    க்காலத்தில் வேதங்களில் அருவக் கடவுளாகவும் குறியிட்டு கடவுளாகவும் சொல்லப்பட்ட அனைத்து தெய்வங்களும் மனிதச் சாயலை பெற்றனவாக இருந்தன. வேதக் கடவுள்கள் மட்டுமல்ல பல புதிய கடவுள் பெயர்களும் அக்கால வழக்கத்தில் இருந்திருக்கிறது. அந்த கடவுள்களின் நிலையை அறச்செயல்கள் புரிவதன் மூலம் மனிதர்கள் எட்டிவிடலாம் என்ற நம்பிக்கையும் இருந்திருக்கிறது. பலகடவுள்களை அவர்கள் உருவாக்கி வழிபட்டாலும் கூட படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழிலைச் செய்கின்ற பிரம்மா, திருமால், சிவபெருமான் ஆகிய திரிமூர்த்திகளே முக்கிய கடவுளாக வழிபடப்பட்டிருக்கிறார்கள். மூன்று பேரையும் ஒருங்கிணைத்து பரமாத்மா என்றும் குறிப்பிட்டு அப்பரமாத்வா பிறப்பில்லாதவன் என்றும் உள்ளவன், மாற்றமில்லாதவன் என்றும் கருதிவந்திருக்கிறார்கள். தனிப்பட்ட ஆத்மாக்களை பூதாத்மா என்று கருதிய மக்கள் அப்பூதாத்மா கட்டுகளை உடைத்து அதாவது பற்றுகளை அறுத்து பரமாத்மாவோடு இரண்டற கலக்கமுடியும் என்ற உறுதியான கொள்கைகளை உடையவர்களாக இருந்திருக்கிறார்கள்.

   பூதாத்மாவான ஜீவன்கள் பரம்பொருளோடு இரண்டற கலப்பதற்கு யோகமார்க்கம் ஒன்றே சிறந்த வழியென்ற அசைக்க முடியாத நம்பிக்கை அம்மக்களிடம் நிரம்பியிருந்திருக்கிறது. யோக மார்க்கத்தின் முக்கிய கூறுகளான ஆசனம், பிரணாயாமம், தியானம், சமாதி ஆகியவைகள் மக்களிடம் செல்வாக்கு மிக்கதாக இருந்திருக்கிறது. இதனால்தான் பிரம்மச்சரிய ஒழுக்கத்தை கடைபிடிக்கும் சந்நியாசிகள் செல்வாக்கு மிக்கவர்களாக திகழ்ந்தனர்.

    பலதரப்பட்ட மக்களாலும் துறவு வாழ்க்கை மதிக்கப்பட்டதனால் அதை மேற்கொள்வதற்கான ஆர்வம் பலரிடம் இருந்ததாக தெரிகிறது. இது தவிர பக்தி நெறியில் ஆடவரும், பெண்டீரும் மிக அதிக அளவு ஈடுபாடு காட்டியதற்கான ஆதாரங்களும் ராமாயணத்தில் உள்ளன. சமூகவியல், அரசியல் ஆகிய துறைகளில் ஆண், பெண் என்ற பேதம் காட்டப்படாதது போலவே ஆன்மீகத்திலும் பேதங்கள் காட்டப்படவில்லை. துறவியர்களான ஆண்கள் எவ்வாறு மதிக்கப்பட்டார்களோ அவ்வாறே பெண் துறவிகளும் மதிக்கப்பட்டார்கள்.

   இருப்பினும் இருபாலாருக்கும் இடையில் நிச்சயம் நுண்ணியமான வேற்றுமைகள் இருந்திருக்க வேண்டும் ஆனால் அதைபற்றிய விவரங்கள் எதுவும் ராமாயணத்தில் கிடைக்கவில்லை. ஆன்மவியலில் ஈடுபடும் அனைவருமே இறுதிநிலையான வீடுபேற்றை அதாவது பரபிரம்மத்தோடு ஐக்கியமாகும் நிலையை விரும்பியே அதில் ஈடுபட்டனர். இதனால் வயது முதிர்ந்த அனுபவசாலிகளான ரிஷிகள் மக்களால் நடமாடும் தெய்வங்களாகவேக் கருதி வழிபடப்பட்டனர்.

   கடவுளிடத்தில் நம்பிக்கையும் அவரோடு இரண்டற கலப்பதில் ஆர்வமும் கொண்ட பெருவாரியான மக்கள் கூட்டம் இருந்ததைப்போல் கடவுள் நம்பிக்கை இல்லாத ஒரு சில நபர்களும் இருந்ததாகத்தெரிகிறது. பெரும்பான்மையான மக்கள் ஆஸ்திகர்களாக இருந்தபோதிலும் கூட நாஸ்திகர்களின் கருத்து சுதந்திரம் போற்றிப்பாதுகாக்கவே பட்டது. இதை ராமனுக்கும் ஜபாலி என்ற நபருக்கும் நடந்த உரையாடல் மூலம் நன்கு அறியமுடிகிறது.

    ஜபாலி ராமனிடம் கூறுகிறான். ஒரு பிராணியானது தனியாகவே பிறந்து தனியாகவே மடிகிறது. அதற்குச்சுற்றமும் நண்பர்களும் இல்லை. ஆகையினால் தன்னுடைய தாய் அல்லது தகப்பன் என்று கருதப்படும் தனி ஆத்மாக்களுக்கு மனிதன் மரியாதை செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் மனிதனுக்குத்தந்தை, தமயன், வீடு, பொருள் இவையாவும் நெடுந்தூர பயணத்தில் அவ்வப்போது கிடைக்கும் ஓய்வு இடங்கள் போன்றவைதான். சுய அறிவுடைய எவனும் ஓய்விடங்களை வழிபட்டுக் கொண்டிருக்கமாட்டான்.

   ஆணினுடைய விந்தணுவும் பெண்ணின் கருமுட்டையும் இணைந்தே குழந்தைகள் உற்பத்தி ஆகுகின்றன. இது இயற்கையின் தவிர்க்க முடியாத தொடர்ச்சியான இயக்கமே ஆகும். இதில் கடவுளுக்கு எந்த சம்பந்தமும் கிடையாது. இத்தகைய உற்பத்தி முறைகளுக்கு கடவுள் என்ற சக்தி தேவையற்றது. ஒவ்வொரு ஜீவனும் தவிர்க்க முடியாத நிலையான மரணத்தை அடைந்தே தீரவேண்டும். அதனால் இறப்பின் பொருட்டு அச்சப்படவோ, துயரப்படவோ தேவையில்லை.

     இறந்து போனவர்களை மறந்துவிட்டு அடுத்த வேளையை கவனிப்பவனே புத்திசாலியாவான் அதை விட்டுவிட்டு ஈமக்கடனென்றும் பிண்டம் அளிப்பது என்றும் ஏராளமான பொருட்களை வீணடிப்பது முட்டாள்தனமாகும். இறந்தவனுக்கு படைப்பது என்பது வடிகட்டிய அறியாமையாகும். செத்துப்போனவன் சாப்பிடமுடியுமா? இறந்தவனுக்காக இருப்பவன் உண்டால் இறந்தவனின் பசியாறுவது உண்மையென்றால் வேற்றூருக்குப்பயணம் மேற்கொள்ளும் மகனுக்காக வீட்டிலிருந்தே அம்மா சாப்பிட்டு விடலாமே. பின்னர் எதற்காக வழிச்சாப்பாடு கட்டிக்கொண்டு செல்ல வேண்டும். எனவே சிரார்த்தம் என்பது ஏமாற்று வேலை.

      தியாகம், தர்மம், உபதேசம், விரதம், துறவு என்பதெல்லாம் மக்களிடத்திலிருந்து தந்திரமாக பொருளைப்பறித்துக் கொள்ள திறமைசாலிகள் உருவாக்கிய குறுக்கு வழிகளே ஆகும். எனவே ஐம்புலன்களால் உணரக்கூடியதை மட்டும் உண்மையென்று நம்பி மனத்திடத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஜபாலியின் இந்த நாஸ்திக வாதம் தற்காலிக பகுத்தறிவுவாதிகளின் பேச்சு போலவே தெரிகிறதல்லவா? பகுத்தறிவுவாதிகள் ஒன்றும் புதிதாக நாத்திகத்தை கண்டுபிடித்து பேசவில்லை என்பது இதன் மூலம் புலனாகும்.

      இந்த கருத்தை இங்கே நான் கூறுவதற்கு முக்கிய காரணம் இருக்கிறது. ஜபாலி இந்த கருத்துக்களை தெருவோர திண்ணைவாசிகளிடம் பேசவில்லை. நாட்டின் அரசனான ராமனிடம் பேசுகிறான். மக்களின் கருத்துச் சுதந்திரம் என்பது இன்றைய காலத்தைப்போல் ஏட்டளவிலும் அதிகார வர்க்கத்தின் பேச்சளவிலும் இல்லை. உண்மையாகவே நடைமுறையில் இருந்திருக்கிறது. இது மட்டுமல்ல ஒரு ஆஸ்தீக சமூகத்தில் நாஸ்திக கருத்து தைரியமாக எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது என்றால் அக்கால மக்களின் அறிவாற்றலும், மனத்தெளிவும் எத்தகைய விசாலமாக இருந்திருக்கிறது என்பதை உணரும் பொழுது நிச்சயமாகவே மெய்சிலிர்ப்பு ஏற்படுகிறது.
கேள்வி: ராமனிடம் தனது கருத்தை ஜபாலி கூறுவதற்கு எத்தனை துணிச்சல் மிக்கவனாக இருந்திருக்க வேண்டும் என்பதை இரண்டாம் பட்சமாகக்கொண்டாலும் அந்தக்கருத்தை அப்படியே பதிவு செய்த வால்மீகியின் பக்கம் சாராத அறிவு எத்தகையது என்பதை எண்ணி வியப்பு ஏற்படுகிறது. தான் வடிக்கும் காப்பியத்தில் உண்மைத் தன்மைகள் அனைத்தையுமே மறைக்காமல் எழுதி வைத்த வால்மீகியின் மனோபாவம் இன்றைய வரலாற்று ஆசிரியர்களுக்கு இருந்தால் பிரச்சினைகள் எல்லாமே சுமூகமாக தீர்க்கப்பட்டுவிடும் ராமாயணத்தின் கருத்துக்கள் இது தவிர வேறு என்னென்ன கூறப்பட்டுள்ளது?


  வ்வொரு மனிதனும் அடைய முயற்சிப்பது ராமாயணக் கருத்துப்படி திரிவர்க்கம் என்ற மூன்று நிலைகளாகும். அவை தர்மம் என்ற ஆத்மநலம், அர்த்தமென்ற பொருள்நலம், காமம் என்ற நுகர்ச்சி நலம் இந்த மூன்றில் தலைமையானது தர்மம் எனப்படுகிற ஆத்மநலனே ஆகும். மற்ற இரண்டும் இல்லாவிட்டாலும் கூட அவன் சிறந்த மனிதனாகக் கருதப்படுவான். இரண்டும் இருந்தும் முதல் நிலையான தர்மம் என்பது இல்லாவிட்டால் அவன் எத்தனை புகழ் படைத்தவனாக செல்வாக்குடையவனாக இருந்தாலும் கீழான நிலையிலேயே இருப்பவனாகக் கருதப்படுவான். ஏனென்றால், இன்ப வேட்கையே முதன்மையானது அதை அடைவதே வாழ்வின் முக்கியமான இலக்கு ஆகும் என்று செயல்படும் எவனும் தனக்கு மட்டுமல்ல பிறருக்கும் துன்பத்தையே என்றும் சம்பாதித்துக் கொடுப்பவனாக இருக்கிறான். இத்தகைய மனிதத்நிலையை வால்மீகி மரத்தின் உச்சியில் தூங்கி விழுந்தபின் விழிப்பவன் என்ற அழகிய உவமை மூலம் சுட்டிக் காட்டுகிறார்.

  ராமாயணத்தில் தர்மம் என்ற சொல் பரவலாக உபயோகப்படுத்தப்படுகிறது. தர்மம் என்பது ஒரு குறிக்கோளைக்காட்டுகிறது. அதே நேரம் அந்தக் குறிக்கோளை அடையும் வழியைக் காட்டுவதும் தர்மம் என்ற பெயராலேயே அழைக்கப்படுகிறது. சமய நூல்களால் விதிக்கப்பெற்றதும் அறிவாளிகளால் ஒப்புக்கொள்ளப்பட்டதுமான சமயக் கடமைகளையும், சமுதாயக் கடமைகளையும், நல்லொழுக்க கடமைகளையும் தர்மம் பிரத்யேகமான முறையில் விளக்குகிறது. தர்மம் என்ற சொல்லுக்கு வடமொழி சொல்லிலக்கணம் தாங்கி பிடித்தல் என்ற பொருளைச்சொல்லுவது போலவே ராமாயணமும் மக்களை, நாட்டை, அரசனை தர்மமே தாங்கி பிடித்துள்ளதும் என்று ஆனித்தரமாக சொல்கிறது. அதே நேரம் தர்மத்திற்கான பலன் பற்றிய புதுவிதமான கருத்தை ராமாயணம் காட்டுகிறது. ஒருவன் தொடர்ச்சியாக ஒரு புறத்தில் தர்மமும் மற்றொரு புறத்தில் அதற்கு எதிரான அதர்மமும் செய்து வந்தால் தர்மத்தின் பலனாக அதர்மத்திற்கு கிடைக்கக் கூடிய துயரம் எந்தச் சூழலிலும் தடுத்து நிறுத்திவிட முடியாதது என்கிறது. அதாவது தர்மவானாக இருந்தாலும்கூட தர்மத்தின் பலனை தனியாக நுகரலாமே தவிர அது அதர்மத்திற்கான தண்டனையைக்குறைக்கும் கருவியாக இருக்காது என்கிறது.

   தர்மத்தை விளக்குவதற்காகவும், பரப்புவதற்காகவும், ராமாயணம் தோன்றியது எனலாம். அந்தத்தோன்றலின் மூல லட்சியத்தை ராமாயணம் நிச்சயமாக அடைந்து விட்டது என்றே கூறலாம். அதனால்தான் பல ஆயிரம் வருடங்களாக இந்து மக்கள் மத்தியிலும் உலக மக்கள் அனைவரிடத்திலும் ராமாயணம் போற்றப்பட்டு இன்றுவரை நீண்டு நிலைத்து நிற்கிறது. இன்னும் ராமாயணத்தின் கருத்து கருவூலங்கள் காலத்தை வென்று என்றென்றும் நிலைத்து நிற்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

   ராமாயணம் எல்லா உயிர்களிடத்திலும் அன்பான மதிப்பு, உண்மையோடு இருத்தல், தன்னடக்கம், பெருந்தன்மை, பொறுமைத் தன்மை, பிறர்குற்றங்களை மன்னித்தல், விருந்தோம்பல், பகைவராக இருந்தாலும் நம்பியவருக்கு உதவிசெய்தல், மனம், மொழி செயல்களில் தூய்மையோடிருத்தல் ஆகியவற்றை ஒவ்வொரு மனிதனும் கடைப்பிடித்தே ஆக வேண்டும் என்று வலியுறுத்துகிறது. மேலும் பெற்றோர், ஆசிரியர், தமையன், கணவன், தலைவன் இவர்களுக்கு வணங்கத் தக்க மதிப்பு கொடுத்தலும் அவர்களின் சார்பாக மற்றவர்களிடம் காட்டும் அன்பும் திரும்பத் திரும்ப ராமாயணத்தில் வலியுறுத்தப்படுகிறது. ஒருதார மணம் ஆண், பெண் இருவருமே கற்பு நெறியில் உறுதியாக இருத்தல், ஆகியவைகள் வலியுறுத்தி கூறப்படுவதோடு பெண் மக்கள் தகப்பன், கணவன், மகன் இவர்களால் பாதுகாக்கப் பட்டாலும் அவர்களுக்கு சம உரிமையும், சம அந்தஸ்தும் கொடுக்க வேண்டும் என்று கூறும் ராமாயணம் கணவனும், மனைவியும் பிரிக்க முடியாத ஆத்மாவாக வாழ வேண்டுமென்றும் மனைவியின் கடமையில் கணவனும் கணவன் கடமையில் மனைவியிம் சமமாக பங்கெடுத்து முன்னேற வேண்டுமென்றும் ராமாயணம் அறிவுறுத்துகிறது.

   ராமாயணக் காலத்தில் பெண்கள் உள்நாட்டு அரசியல் நிர்வாகத்திலும், சர்வதேச அரசியல் தொடர்பிலும், யுத்த தந்திரங்கள் வகுக்கும் ராணுவ யுக்தியிலும் சிறந்தவர்களாக இருந்திருக்கிறார்கள். அதே நேரம் இல்லறத்தில் தன்னிகரற்ற அதிகாரமிக்க தலைமைப்பொறுப்பு பெண்களிடத்திலேயே இருந்திருக்கிறது. ஆணுக்கு நிகரான அறிவுடைய கல்வியுடைய பெண்களை ராமாயண பாத்திரங்களாக நாம் பார்க்க முடிகிறது. உலக விஷயங்களில் பெண்கள் எத்தகைய சம உரிமையுடன் செல்வாக்கு பெற்று விளங்கினார்களோ அதே அளவு சம உரிமையையும், செல்வாக்கையும் ஆன்மீகத் துறையில் அவர்கள் பெற்றிருந்தனர். இன்னும் ஒருபடி மேலே சொல்லுவதென்றால் உலகப்பற்றை துறந்து ஞானிக்கு இருக்கும் மரியாதை அக்காலத்தில் ஒழுக்க நெறியில் நிற்கும் பெண்களுக்கு கொடுக்கப்பட்டது. அவர்களும் நடமாடும் தேவியர்களாக மக்களால் போற்றப்பட்டனர்.

   தர்மத்தின் பாதுகாப்பிற்கும் குடிமக்களின் வாழ்க்கை நலத்திற்கும் உயிருக்கும் உத்திரவாதமாக விளங்குகின்ற அரசன் இறைவனின் மாற்றுருவமாக கருதப்பட்டான். ஆனால் தனது நலன்களை மட்டுமே கருத்தில் கொண்டு அரசகடமைகளை புறக்கணிக்கும் அரசன் மக்களால் பாவத்தின் சின்னமென்று கருதப்பட்டான் ஒரு நீதிபதியும், நீதிபதியால் தண்டிக்கப்பட்ட ஒரு குற்றவாளியும் இறைவனின் சந்நிதானம் முன் எப்படி சமமாக நடத்தப்படுவார்களோ அதே போன்றே அரசன் முன் சாதாரண குடிமகனும் அரச அதிகாரியும் நடத்தப்படவேண்டும் என்ற நியதி அக்காலத்தில் நடைமுறையில் இருந்திருக்கிறது.

  இன்று நாம் பேசுகின்ற மனித உரிமைகள் என்ற கருத்துக்கள் ராமாயண இதிகாசத்தில் நடைமுறையில் இருந்ததாக எழுதப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட ஒருவன் தன்னை நிரபராதி என்று நிரூபிக்கும் உரிமை அவனுக்கு தண்டனை நிறைவேற்றப்பட போகும் கடைசி நிமிடத்திலேயும்கூட வழங்கப்பட்டது. தன்னுயிரைத்தமது குடும்பத்தினரை பாதுகாப்பை காப்பாற்றுவதற்காக எதிரியைக் கொல்லுவது பாவமல்ல என்று கருதினாலும் தற்பாதுகாப்பிற்காக நடந்த கொலை என்பதை நிரூபித்தால் மட்டுமே எவனும் அரசு தண்டனையிலிருந்து தப்ப இயலும் என்பதும் கட்டாயப்படுத்தப்பட்டிருந்தது. மேலும் யுத்த காலத்தில் சரணடைந்தவனையும் புறமுதுகு காட்டி ஓடுகின்றவனையும் குடிவெறியில் உள்ளவனையும் பகைவனாக இருந்தால்கூட கொல்லக்கூடாது என்ற சட்டம் நடைமுறையில் இருந்திருக்கிறது. மேலும் அரசன், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் நோயாளிகள், தூங்குபவன் இவர்களைக்கொல்லுவதும் நம்பி வந்தவர்களை உதவி செய்யாமல் கைவிடுவதும் பெரும்பாவமாகக்கருதப்பட்டது.

  அறமும் தர்மமும் எந்த அளவு ராமாயணத்தில் பேசப்படுகிறதோ அந்த அளவு விதி என்பதும் பேசப்படுகிறது. வாதத்திற்கும், அறிவிக்கும் உணர்வுகளுக்கும், புலன்களுக்கும் அப்பாற்பட்டதாக விதி கருதப்படுகிறது. விதி என்பதும் காலம் என்பதும் சில இடங்களில் ஒரே கருத்துடைய சொல்லாக பயன்படுத்தப்பட்டாலும் விதி மட்டும் முன்னாலேயே நிர்ணயிக்கப்பட்ட சூழலாகும் என்ற கருத்தும் பரவலாக காணப்படுகிறது. விதி என்பது எல்லாவற்றையும் ஆட்சி செய்யும் ஆற்றலுடையது என்ற கருத்துபடி இவ்வுலகத்தில் எல்லாவற்றிக்கும் நியதிதான் முதற்காரணமாகிறது. ஒருவனது வெற்றிக்கும், தோல்விக்கும் அதுவே காரணமாக இருக்கிறது எந்த ஒரு மனிதனும் விதியை மீறி எந்தச்செயலையும் செய்ய முடியாது எனவே செயல்களுக்கு தானே காரணம் என்று மனிதர்கள் சொல்வது அறியாமையாகும். உலகம் கடவுள் வகுத்த விதியின்படி இயற்கை வழியில் செல்லுகிறது. அதிலிருந்து மாறுவதற்கு உலகத்திற்கோ மாற்றுவதற்கு கடவுளுக்கோ உரிமைஇல்லை என்று தாரை என்ற கதாபாத்திரத்திடம் ஸ்ரீராமன் உரையாடுவதன் மூலம் விதி பற்றிய நம்பிக்கை அக்காலத்தில் எவ்வளவு ஆழமாக இருந்துள்ளது என்பது நமக்கு புரியும்.

 விதியானது காலம் போடும் பாதையாகும். இந்தப்பாதை நமது முற்பிறவி கர்மாக்களாலும் இப்பிறவி செயல்களாலும் விதி என்ற வடிவில் விரிகிறது என்று ராமாயணம் கூறுவதிலிருந்து விதி பற்றிய நம்பிக்கை எந்த அளவு மக்களிடத்தில் வேரூன்றி இருந்ததோ அதே அளவு மறுபிறப்பு கொள்கையிலும் அவர்கள் நம்பிக்கையோடு இருந்தார்கள் என்பதை நமக்கு காட்டுகிறது.

   இந்த இருவேறு நோக்கங்களும் நமக்குச்சில முடிவுகளைத்தெளிவாக்குகிறது. முதலாவது மனிதன் என்பவன் பிரம்மாண்டமான அண்டத்தில் சிறு துகளாகும் என்பதும் இரண்டாவது அவன் மற்ற உயிரினங்களிடமிருந்து தெளிவாகப்பிரிக்கப்பட்ட உயிரினம் அதனால் அவன் அடைகின்ற ஒவ்வொரு இன்ப துன்பத்திற்கும் அவனே காரணமாகிறான் என்பதும் நன்குப்புலனாகிறது.

   அதே நேரம் இந்த விதிக்கோட்பாட்டிற்கு எதிரானதாக கருதப்படும் தனிமனித முயற்சிகள் எவற்றையும் ராமாயணம் இழித்துப் பேசவும் இல்லை தடைசெய்யவும் இல்லை. விதியும் தனிமனித முயற்சியும் ஒருங்கிணைந்தால் வெற்றியின் தன்மை உயரும் என்றும் தோல்வியின் பாதிப்பு குறையும் என்றும் ராமாயணம் வலியுறுத்துகிறது. இதில் சொல்லப்பட்டுள்ள அனைத்து விஷயங்களும் எல்லா காலத்திலும் மனிதர்கள் கால தேச வர்த்தமானங்களைக்கடந்து கடைப்பிடிக்க வேண்டிய அற்புதமான கொள்கைகளே ஆகும். ஆனால் ராமாயணம் என்ற மாபெரும் கருத்து செறிவுமிக்க கருவூலத்தை பெற்றிருக்கும் நாம் அதைக்கடைப்பிடிக்கிறோமா என்பதை பரிசீலித்துப்பார்க்க வேண்டும். அப்படி பார்க்கும் பட்சத்தில் அதிலிலுள்ள கருத்துக்களுக்கும் நாம் சமுதாய நிலைக்கும் இன்று எந்த சம்பந்தமும் இல்லையென்பது தெளிவாகத்தெரியும்.

கேள்வி: இவ்வளவு அற்புதமான கருத்துக்கள் ராமாயணத்தில் இருக்கும் பொழுது ராமாயணமும் ராமனும் சில நபர்களால் தரக்குறைவாக விமர்சனம் செய்யப்படுவது ஏன்? உதாரணமாக ராமனை குடிகாரன் என்று தற்போதுகூட ஓர் அறிஞர் விமர்சிப்பது ஏன்?

 
  ழிகாட்டி மரமென்பது வழிதெரியாதவனுக்கு திசைகாட்டும் கருவியாகும். அதை தலைகீழாகப் பார்க்கும் ஒருவன் வழிகாட்டும் மரங்கள் அனைத்துமே தவறானது என்று சொன்னால் பார்ப்பவனின் பார்வைக் கோளாறே காரணமென்று சொல்லவேண்டும். ஏசுநாதர் மிக அழகான ஒரு கருத்தைச்சொல்லுவார். அதை இந்த இடத்தில் சொல்லுவது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். உனது கண்ணிலுள்ள தூசியை எடுத்துவிட்டு மற்றவனின் முதுகிலுள்ள அழுக்கை பார் என்ற இந்த கருத்தை ராமனைக்குடிகாரன் என்று சொல்லிய அறிஞரை பார்த்து மக்கள் சொன்னால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

  வால்மீகி ராமாயணத்தையும், கம்பனின் ராமகாவியத்தையும் ஓரளவு படித்தவன் நான். அதில் எந்த இடத்திலேயும் ராமன் போதை பொருட்களை உண்டதாக எந்த குறிப்பும் இல்லை. வனவாசம் மேற்கொண்ட ராமன் குகனிடம் வரும்போது குகன் ராமனுக்கு மதுவையும் மீனையும் காணிக்கையாக்கியதாக ஒரு குறிப்பு வால்மீகியிடம் உண்டு. வடமொழியில் மது, மதுரம் என்ற வார்த்தைகள் தேனைக்குறிக்குமே தவிர போதைத் தரும் மதுவைக்குறிப்பதாகாது. மேலும் அவன் சோமபானம் என்ற ஒரு வித பானத்தை அருந்தியதாகச்சிலர் கூறுகிறார்கள். இந்த சோமபானம் என்பது கள்அல்ல. சோம என்ற புல்லிலிருந்து எடுக்கப்படும் ஒருவித ரசமே ஆகும். இதையும் ராமன் குடித்ததற்கான ஆதாரம் எந்த மொழியிலுள்ள ராமாயணத்திலும் இல்லையென்று துணிச்சலாகக்கூறலாம். எனினும் வாதத்திற்காக ராமனைக்குடிகாரன் என்று ஏற்றுக்கொண்டாலும் அவன் உலகப் பற்றுபாசங்களை விலக்கிய துறவி அல்ல. குடும்ப வாழ்க்கையை மேற்கொண்ட ஒரு இல்லறத்தான். அது மட்டுமல்ல நாட்டை வழிநடத்தும் அரசகுமாரன், போர்வீரன் ஒரு சத்திரியன். இந்த நிலையிலுள்ள ராமன் மது அருந்தியிருந்தாலும் கூட அது தர்மத்திற்கு விரோதமான செயலாகக்கருத இயலாது. ஆயினும் ராமன் குடிகாரன் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அறிவில் அழுகிய புண்ணுடைய நபர்கள் அவனை அப்படிக் கூறினால் அதற்கான தண்டனையை கொடுக்ககூடியது நாம் வழிபடும் இறைவனான ஸ்ரீ ராமபிரானின் வேலையே தவிர நமது வேலை அது அல்ல.

  நேர்மையுடையவனாகவும், ஈடில்லாவீரம் படைத்தவனாகவும், தர்மத்தின் சூட்சமத்தை அறிந்தவனாகவும், நன்றி மறவாதவனாகவும், எந்த நிலையிலேயும் உண்மையை மட்டுமே பேசுபவனாகவும், கொண்ட விரதத்தை கைவிடாதவனாகவும், குல கௌரவத்தை தவறவிடாதவனாகவும், அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு காட்டுபவனாகவும், பண்டிதனாகவும், வல்லவனாகவும், குளிர்ந்த பார்வையுடையவனாகவும், பெரும் தைரியம் உடையவனாகவும், கோபத்தை வென்றவனாகவும், ஒளிவீசும் வதனமுடையவனாகவும், பொறாமை இல்லாதவனாகவும், எதிரிகள் அஞ்சி நடுங்கும்படி எரிமலைபோல் யுத்தக்களத்தில் போர்புரிபவனாகவும், அழகின் இலக்கணமானவனாகவும் ஸ்ரீ ராமன் விளங்குவதாக ஆதிகவியான வால்மீகி வர்ணனை செய்கிறார்.

  ராமனிடத்திலுள்ள இத்தனை நற்பண்புகளையும் ஒன்றாகக் கொண்டவரோ கடைப்பிடிக்க கூடியவரோ நம்மில் யாருமே இல்லையென்பது நமக்கு நன்றாகத்தெரியும். ஆனாலும் அவற்றில் ஒன்றேயினும் நாம் கடைப்பிடிக்கவில்லையென்றால் மனிதன் என்ற பெயர் நமக்குப்பொருந்தாது. மேலும் ராமனை விமர்சித்தவர்களுக்கும் அவனது நெறியை கடைப்பிடிக்காத நமக்கும் பெரிய வித்தியாசங்கள் எதுவும் இல்லாமல் போய்விடும்.

    ராமாயணம் நடந்ததா ராமன் நல்லவனா என்று கேள்விகள் கேட்பதெல்லாம் திண்ணைப்பேச்சு வீரர்களின் மனோபாவம் ஆகும். நாம் திண்ணைப்பேச்சு வீரர்களிடம் ஜாக்கிரதையாகவும் இருக்க வேண்டும். திண்ணைப்பேச்சு வீரர்களாக மாறிவிடாமலும் இருக்கவேண்டும். ராமன் மனிதனாக வாழ்ந்த கடவுள் அல்லது கடவுளாக வாழ்ந்த மனிதன் என்று எப்படி வேண்டுமென்றாலும் எடுத்துக்கொள்ளலாம். அது எந்த வகையிலும் முக்கியமில்லாததாகும். அவன் வழியில் வாழ்கிறோமா என்பது தான் முக்கியமாகும். ராமன் என்ற கங்கை ஆயிரம் ஆயிரம் அழுக்குகளை கழுவினாலும் தான் எந்த வகையிலும் அழுக்காக மாறுவதில்லை. மாறவும் முடியாது.














      ராமாயணம் உண்மைச் சரித்திரமா ? பாகம் 1

       ராமாயணம் பொய்யல்ல...!  பாகம் 2

       ராமன் என்பது கங்கை நதி   பாகம் 3

0 comments:

Post a Comment

                     முக்கிய அறிவிப்பு  
           நமது ' ஸ்ரீ நாராயண கேசரி ' தளத்தை பார்வையிட்ட பல வாசகர்கள் தங்களது ஆன்மீக கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டுமென்று தொலை பேசியிலும் ஈ-மெயிலிலும் வற்புறுத்தி கேட்டனர் அதனால் கேள்விகளை +91-9442426434 என்ற அலைபேசி எண்ணிலும் E-Mail sriramanandaguruji@gmail.comமுகவரிக்கும் தெரிவிக்கவும் பதில் நமது தளத்தில் வெளியிடப்படும்