ராமாயணம் பொய்யல்ல...!


                                              
   மீப காலமாக ஆழிப்பேரலை என்பதைப் பற்றி மக்கள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த ஆழிப் பேரலையான சுனாமி என்பதின் தாக்கம் எத்தகைய கொடூரம் வாய்ந்ததாக இருக்கும் என்பதை நேருக்கு நேராக நாம் அனுபவித்தும் விட்டோம்.

    இந்த சுனாமி புதிதாக நம்மை தாக்கவில்லை என்பதும் இதற்கு முன்னால் பல முறைகள் சுனாமியின் கொடூர தாக்குதல் பூமியின் நிலப்பரப்பையே மாற்றியமைத்திருக்கிறது என்ற  நிதர்சனத்தையும் நன்றாகவே உணர்ந்தும் விட்டோம்.

  அப்படியொரு இயற்கைப்பேரழிவு இன்னொரு முறை நடந்ததாக எடுத்துக்கொள்வோம். அதனால் உலகம் முழுமையும் முற்றிலுமாக அழிந்துவிட்டது என்றே வைத்துக்கொள்வோம். மனிதன் நாகரீகத்துடன் வாழ்ந்தான் என்ற சுவடே இல்லையென்பதாக கற்பனை செய்து கொள்வோம்.


      எந்த அழிவிலும் ஏதாவது ஒரு உயிர் தப்பித்து ஜீவத் தொடர்ச்சியை மேற்கொள்ளும் என்ற நியதியின் அடிப்படையில் ஏதோ ஒரு மனித ஜோடியின் மூலம் ஜனசமுத்திரம் ஒரு காலத்தில் உருவாவதாக எடுத்துக் கொள்வோம். அன்றைய காலத்தில் வாழும் ஒரு மனிதன் கையில் தற்கால சரித்திரத்தைக்கூறும் நூல் எப்படியோ தப்பி பிழைத்து அவன் கையில் கிடைப்பதாக கருதுவோம்.

      அவன் அந்த நூலைப்படிக்கிறான். மனிதன் ராக்கெட் என்ற அதிவிரைவான வாகனத்தின் மூலம் சந்திரனுக்குச் சென்றான். கலிபோர்னியாவில் நடக்கும் கால் பந்தாட்டத்தைக் காஞ்சிபுரத்தில் வீட்டிற்குள்ளிருந்தபடியே தொலைக்காட்சியில் பார்த்தான். கெட்டுப்போன மனித இதயத்தை அகற்றிவிட்டு செயற்கை இதயம் பொருத்திக் கொண்டான் என்று எழுதி இருக்கும் 


     நாம் இப்போது அனுபவிக்கும் நவீன விஞ்ஞானப்பயன்பாடுகள் பற்றி அந்த புத்தகத்தில் கூறியிருப்பதை அந்த மனிதன் படித்தான் என்றால் அப்போது அவன் மனதில் எந்த மாதிரியான எண்ணங்கள் எழக்கூடும் என்பதை சிந்திக்க வேண்டும்.

     நாகரீக வளர்ச்சியை தொட்டுப் பார்க்காத அந்த மனிதன் நிச்சயமாக அதை நம்பமாட்டான். தனது புலன்களாலோ, அறிவாலோ நுகராத எந்த விஷயத்தையும் எக்காலத்திலும் மனிதனால் நம்பமுடியாது.

    வானத்திலிருக்கும் சந்திரனை போயாவது தொடுவதாவது. தூரத்திலிருப்பதை அப்படியே காட்டும் பெட்டி இருந்ததா. சுத்தபிதற்றல் அருவாளின் கைப்பிடியை மாற்றுவதுபோல் இதயத்தை மாற்ற முடியுமா? பொய்களை மட்டுமே நடக்க முடியாதவைகளை மட்டுமே எவனோ ஒரு பழைய பைத்தியம் எழுதி வைத்திருக்கிறான் என்று தானே கருதுவான்.


     அழிவுக்கு பிறகு தோன்றுகின்ற வருங்கால மனிதனின் நிலையிலேயே இன்று நாம் இருக்கிறோம். மந்திரங்களால் யுத்தக் கருவிகளை இயக்கச் செய்வதும் ஆணையிட்டு கடலை பிளக்க செய்வதும் வானரங்களையும், கரடிகளையும் போருக்கு பயன்படுத்தியதையும் இன்று நம்மால் நம்ப முடியவில்லை என்பதற்காக அவைகளெல்லாம் நடைபெறவே முடியாத சம்பவங்கள் என்று ஒதுக்கித்தள்ள முடியாது.

     இந்தக் கால கணக்கு முறைகளை வைத்துக்கொண்டு ராமன் பனிரெண்டாயிரம் வருடங்கள் ஆட்சி செய்தான் என்பதை கணக்கு போட்டு மலைத்து போய் இது நடைபெறவே முடியாத சுத்தக் கற்பனை என்று ஒதுக்கத் துணிகிறோம்.

   ஆனால் ஆதிகாலத்தில் ஒரு கணக்கு முறை இருந்தது. அதை வைத்துப் பார்க்கும் பொழுது பல்லாயிரம் ஆண்டுகள் ராமன் அரசாண்டு இருப்பான் என்பதை நம்ப வேண்டிய நிலை இருக்கிறது. வேதகால இந்தியர்கள் சமப்புள்ளிகளையும், நிலைப்புள்ளிகளையும் உறுதிபடுத்தி அவற்றை அக்னி, இந்திரன், மித்திரன், வருணன் இவர்களுடன் சேர்த்தனர். 


  அதே போன்று சந்திரனின் வழியை 27 பிரிவுகளாக பிரித்து அவற்றை நட்சத்திரங்கள் என்றும் கருதினர். ஒரு பௌர்ணமியிலிருந்து இன்னொரு பௌர்ணமிக்கு உள்ள கால அவகாசத்தை ஒரு மாதமாகக்கொண்டனர்.

      இவ்வாறு சந்திர சலனத்தைக் கொண்டு கணக்கிடும் கால அளவைகள் சூரியனின் இயக்கத்தை அடிப்படையாக எழும் கால அளவைகளோடு ஒத்திருக்க செய்தவற்கு 62 மாதங்களை ஐந்து வருடமாக கணக்கிட்டு இந்த ஐந்து வருடத்தை ஒரு யுகமாக குறிப்பிட்டனர். இதற்கான ஆதாரம் ரிக் வேதத்தில் இருக்கிறது. ஐந்து வருடத்தையே ஒரு யுகமாகச்சொல்லுகின்ற மரபு அக்காலத்தில் இருந்தது என்றால் பனிரெண்டாயிரம் வருடங்கள் என்பது இன்று நமக்குத்தெரியாத ஏதாவது ஒரு கணித முறையில் கூறப்பட்ட வருடக் கணக்காக இருக்கலாம் அல்லவா.

   இதுவரை நான் சொன்ன அகச்சான்றுகள் பற்றிய யூகங்கள் முற்றிலுமாக எனது கருத்துக்கள் என்று நான் சொல்ல விரும்பவில்லை. பல அறிஞர்கள் இதே மாதிரியான அபிப்பிராயங்களை கொண்டுள்ளார்கள். அவற்றின் சாராம்சத்தைத்தான் நான் இங்கு கூறினேன். எனவே அகச் சான்றுகளின் ஆதாரமாக நம்பினால் ராமாயணம் என்பது கற்பனையல்ல நிதர்சனமான உண்மையென்பதும் நாம் வணங்கும் ஸ்ரீ ராமச்சந்திரன் கற்பனை கதாபாத்திரம் அல்ல. நாம் வாழும் இந்த பூமியில் நிஜமாகவே நடமாடிய தெய்வ மூர்த்திதான் என்பது தெளிவாகும்.
   நடந்ததாகக்கூறப்படுகின்ற வரலாற்று நிகழ்வுகளுக்குகூட சரியான ஆதாரங்கள் இதுவரை அதிகமாக கிடைக்கவில்லை. கிடைத்திருக்கின்ற ஆதரங்கள் கூட வரலாற்றுச் சம்பவங்கள் நடந்ததா நடக்கவில்லையா என்பதை உறுதியாகக்கூறமுடியாத நிலையிலேயே உள்ளது.

      உதாரணமாக சொல்வதென்றால் ஆரியர்கள் இந்தியாவில் வந்து குடியேறியவர்கள் என்று சில ஆதாரங்களை வைத்து பலர் கருதுகிறார்கள். அதே ஆதாரங்களைப்பயன்படுத்தி வேறு சிலர் ஆரியர்கள் இந்தியாவில் குடியேறவில்லை. அவர்களும் பூர்வகுடி மக்கள்தான் என்று சிலர் கருதுகிறார்கள்.


     வாதங்கள் சந்தேகங்கள் என்று வந்துவிட்டால் அவற்றைத்தீர்ப்பது என்பது முடியாத காரியமாகின்றது. ஒரு வகையில் முடிந்தால் இன்னொரு வகையில் சந்தேகங்கள் புதிதாகக்கிளம்பிக்கொண்டே இருக்கும். கடல் அலைகள் ஓய்ந்தால்தான் வாத அலைகள் ஓயும் என்றே சொல்லலாம். எனவே வாதங்களையும், சந்தேகங்களையும் ஒரு எல்லையோடு நிறுத்திக் கொள்வதே மனிதனை அமைதியான முறையில் வாழ அனுமதிப்பாதாகும்.

       எனவே ராமனும், ராமாயணமும் பொய் என்பதற்கு சந்தேகத்திற்கே இடம் இல்லாத வகையில் ஆதாரம் என்று கிடைக்கிறதோ அதுவரை நாம் அதை உண்மையென்று நம்புவதை யாரும் தடுக்க முடியாது. பொய்யென்று கூறுவதற்கு எவ்வளவு உரிமையுண்டோ அவ்வளவு உரிமை மெய்யென்று நம்புவதற்கு உண்டுயென்பதை நினைவில் கொள்ள வேண்டும். இனி ராமாயணத்தை ஆராய்ச்சி செய்வோம்.


      ராமாயணம் உண்மைச் சரித்திரமா ? பாகம் 1


       ராமாயணம் பொய்யல்ல...!  பாகம் 2


       ராமன் என்பது கங்கை நதி   பாகம் 3

0 comments:

Post a Comment

                     முக்கிய அறிவிப்பு  
           நமது ' ஸ்ரீ நாராயண கேசரி ' தளத்தை பார்வையிட்ட பல வாசகர்கள் தங்களது ஆன்மீக கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டுமென்று தொலை பேசியிலும் ஈ-மெயிலிலும் வற்புறுத்தி கேட்டனர் அதனால் கேள்விகளை +91-9442426434 என்ற அலைபேசி எண்ணிலும் E-Mail sriramanandaguruji@gmail.comமுகவரிக்கும் தெரிவிக்கவும் பதில் நமது தளத்தில் வெளியிடப்படும்