உலகம் முழுவதும் சிவ வழிபாடு



  அந்தக்காலத்தில் பாட்டிமார்கள் சில கதைகள் சொல்லுவார்கள் அவர்கள் சொல்லுகின்ற கதைகளில் மிகவும் சுவாரசியமானது. கற்பக விருட்சம் பற்றிய கதை ஆகும். இந்த கற்பக விருட்சம் என்ற மரம் தேவலோகத்தில் சொர்க்கத்தில் இருகிறதாம் இந்த மரத்திடம் நாம் எதைக்கேட்டாலும் அதை உடனடியாகத் தந்துவிடுமாம். வரம் தரும் மரத்தைபோல மனிதர்கள் யாராவது இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நான் யோசித்தது உண்டு. யோசித்தது மட்டுமல்ல அத்தகைய வரம் அருளும் மனிதர்களை தேடி பல இடங்களுக்கும் அலைந்தது உண்டு. அப்படி அலைந்ததில் ஞானிய பரம்பரையைப்பற்றி விழிப்பும், தெளிவும் ஓரளவேனும் எனக்கு ஏற்பட்டுள்ளது. அவர்கள் அதாவது ஞானிய பெருமக்கள் அழியக்கூடிய லௌகீக பொருட்களையும் தருவார்கள் அழியாத அமிர்தமான ஞான பொக்கிஷங்களையும் தருவார்கள் ஒரு சக்கரவர்த்தியிடம் போய் ஒரு வேளை சோறு மட்டும் போடு என்று கேட்பது எத்தகைய அறியாமையோ அதைப் போன்றதுதான் ஞானிகளிடம் உலகப் பொருட்களை கேட்பதும் ஆகும். எதைப் பெற்றால் எல்லாவற்றையும் பெற்றதாகுமோ அதைதான் அவர்களிடம் கேட்டுப் பெறவேண்டும் 


       அந்த ஞான வெளிச்சம் நமது வாழ்க்கைப் பாதையில் நிறைந்துள்ள கல்லையும், முள்ளையும் மட்டுமல்ல மாணிக்க கற்களையும் தங்க தாரகைகளையும் நமக்கு அடையாளம் காட்டும் நான் யோகி ஸ்ரீ ராமானந்த குருவிடம் இப்படி எத்தனையோ ஞான பொக்கிஷங்களை கேட்டுப் பெற்றிருக்கிறேன் ஆனாலும் அவரிடம் என் மனதிற்குள் நீண்ட நாட்களாக அரித்துக் கொண்டு இருக்கும் சிறு சந்தேகம் ஒன்றைக் கேட்டதில்லை தென்னாடுடைய சிவன் எந்நாட்டவருக்கும் இறைவனாக இருப்பதாக சமய குறவர்கள் நெக்குருகப்பாடி இருக்கிறார்கள். ஈரேழு பதினான்கு லோகங்களையும் திருமாலானவன் காத்து பரிபாலனம் செய்வதாக புராணங்கள் ஆலாபனை செய்கிறது. பிரம்ம தேவன்தான் உலகில் உள்ள சகல ஜீவன்களையும் சிருஷ்டி செய்ததாக வேத நூல்கள் கீதம் பாடுகின்றன.

      அப்படி யென்றால் அதாவது சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளும் தான் உலக காரணம் என்றால் உலகம் முழுவதும் உள்ள மக்கள் இவர்களைத்தானே வழிபட வேண்டும் இமயமலையை தாண்டினால் இவர்களைப்பற்றி எவருக்குமே தெரியவில்லையே அது ஏன் அதனால் இந்தியாவைத்தான் அந்த கால மக்கள் முழுமையான உலகம் என்று கருதி வந்தார்களா அல்லது வெளி உலகத்தை பற்றிய அவர்களின் அறிவு அவ்வளவுதானா என்ற சந்தேகம் என்னை வெகுநாளாகவே உறுத்தி கொண்டிருந்தது சமய நூல்களைப்பற்றிய அறிவு மட்டுமல்ல வரலாற்று ஞானமும் ஒருங்கே கொண்டவர் குருஜி என்பதனால் அவரிடம் எனது இந்த சந்தேக இருட்டை வெளிச்சமாக்குமாறு மண்டியிட்டு கேட்டேன். அதற்க்கு அவர் அளித்த பதிலை அப்படியே தருகிறேன் 


 குருஜி:

   தென்னாடுடைய சிவன் எந்நாட்டவருக்கும் இறைவனாக இருக்கிறான் என்றால் அதற்கான ஆதாரம் எங்கே என்பதுதானே உனது கேள்வி? இல்லாத ஒன்றை இருப்பதாக கூறுவது நமது முன்னோர்களின் மரபும் அல்ல அது அவர்களின் இயல்பும் அல்ல. ஆங்கிலத்தில் சூரியனை sun என்ற வார்த்தையில் குறிப்பிடுவது உனக்கு தெரியும். இந்த sun என்ற வார்த்தை சிவன் என்ற வேர்ச்சொல்லிலிருந்து வந்ததே ஆகும். ஆதிகால கிரேக்கர்கள் சீயஸ் என்னும் கடவுளை வழிபட்டதாக வரலாற்று குறிப்புகளில் நீ படித்து இருக்கலாம்.

   அந்த சியஸ் கடவுளும் சிவனின் திரிபு அம்சமே ஆகும். பாபிலோன் நாட்டில் அதாவது இன்றைய ஈராக்கில் களிமண் ஓடுகளில் எழுதி வைக்கப்பட்டுள்ள ஆதிகால பட்டயங்கள் சில பூமிக்கு அடியிலிருந்து கண்டெடுக்கப்பட்டது. அந்த பட்டயங்களில் சிவன் என்ற பெயர் எழுதி வைக்கபட்டிருக்கிறது. பாபிலோன் நாட்டில் அன்றைய காலத்தில் சிவன் என்ற பெயரில் ஒரு பெரிய நகரமே இருந்திருக்கிறது.


     தமிழ்தான் உலகின் முதல் மொழி என்று நம்பிக்கை உடையவர்கள் தமிழில் உள்ள சிவன் என்ற சொல்லே வேறு பல நாடுகளில் சற்று திரிபுக்குள்ளாகி பரவி இருப்பதாக கருதுகிறார்கள் அது மட்டுமல்ல சிவவழிபாடு என்பது சரித்திர ஆய்வாளர்கள் எட்டி பார்க்க முடியாத தொல்பழங்காலத்திலேயே உலகமெல்லாம் பரவி இருந்ததற்கான அசைக்க முடியாத ஆதாரங்கள் இன்று நமக்கு கிடைத்து இருக்கின்றன.

  வட அமெரிக்காவுக்கும், தென் அமெரிக்காவுக்கும் இடையே மத்திய பிரதேசமாக திகழும் மெக்சிகோ, பெரு ஆகிய நாடுகளில் பெரிய சிவன் கோவில்கள் இருந்திருக்கின்றன இன்றும் காலச் சூழலால் கவனிப்பாறற்ற நிலையால் சிதைந்து அவைகள் காணப்பட்டாலும் சிவவழிபாடு உலகம் தழுவிய வழிபாடு என்பதற்கு ஆதாரமாக திகழும் அந்த கோவில்கள் சுமார் 7000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டபட்டதாக ஒரு சாராரும் 10,000 ஆண்டுகள் இருக்கும் என்று ஒரு சாராரும் கணக்கிட்டு சொல்கிறார்கள்.

   இந்த சிவாலயங்கள் 1937-ல் கண்டுபிடிக்கப்பட்டு இன்று வரை பாதுகாக்கபட்டு வருகிறது. அதை பற்றிய விளக்கங்களையும் விரிவான நுணுக்கங்களையும் மக்களிடம் எடுத்துச் சொல்லி நமது கலாச்சாரத்தின் பெருமையையும், தொன்மையையும் மக்கள் அறிந்து பெருமிதம் கொள்ள செய்யாமல் இருப்பது நமது மதச்சார்பற்ற அரசுகளின் அலங்கோல ஆட்சி முறைகளே ஆகும்.

   சுய-கவுரவம் இல்லாத மனிதன் எவனும் வாழ்க்கை சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெற முடியாது அப்படிபட்ட மக்கள் நிறைந்த எந்த நாடும் முன்னேறி விட முடியாது நமது கலச்சாரம் இன்றைக்கு 10,000 ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்காவில் வேர் ஊன்றி இருந்ததற்கான ஆதாரங்கள் பல உள்ளது. அவற்றில் இந்த சிவாலயங்களும் கிரீஸ் தீவில் கண்டெடுக்கப்பட்ட சங்கு, வாத்தியம் போன்ற முத்திரைகளும் தில்லாந்து நாட்டில் சிவன் அதே பெயரிலேயே காக்கும் கடவுளாக வணங்கப்பட்டு வருவதையும் குறிப்பிடலாம்.

    சிரியா நாட்டில் ஆதிகால மக்கள் ரிஷிப வாகனத்தில் மான், மழு ஏந்திய தெய்வத்தை வழிபட்டதற்கான சித்திர ஆதாரங்களும், மலேயா, போர்னியா, பாலித்தீவுகள் போன்ற நாடுகளில் சிவவழிபாடு அனாதிகாலம் தொட்டே மக்களின் வாழ்க்கையில் பின்னி பிணைந்திருந்ததற்கான ஆதாரங்கள் பல நமக்கு கிடைத்திருக்கின்றது

     அது மட்டுமல்ல உலகில் ஆதிகாலத்தில் சூரியனையே பெருவாரியான மக்கள் வழிபட்டு வந்திருக்கிறார்கள் என்பதை நாம் அறிவோம். சிவன் என்ற வார்த்தைக்கே செம்மை, வெம்மை என்றுதான் பொருள். ஞாயிறு அல்லது சிவப்புநிறமான ஜோதியே சிவபெருமானின்தோற்றமாக வேதங்களிலும் தமிழ் மறைகளிலும் சொல்லப்பட்டிருக்கிறது.

    ‘ஆதியும் அந்தமும் இல்லாத அருட்பெரும் ஜோதி விரிசுடராய் நின்ற மெய்யன் பார்பதம் அண்டம் அனைத்துமாய் முளைத்து பரந்ததோர் படர்ஒளி பரப்பே ஜோதியாய் தோன்றும் திருவே ஜோதியே சுடரே சூழொளி விளக்கே”

     என்றெல்லாம் வரும் திருவாசகப்பாடலும் சிவ பெருமான் ஜோதி வடிவம் சூரியனின் சொரூபம் என்பதை நமக்கு சொல்லாமல் சொல்லுகிறது. இதை ஆதாரமாகக் கொண்டு நாம் சூரிய வழிபாடு எங்கெல்லாம் உள்ளதோ அவையெல்லாம் சிவ வழிபாடே என்று வாதம் புரிந்தாலும் அது தவறல்ல அறிவுக்கு ஒவ்வாத விஷயமும் அல்ல.

   இன்னும் ஆதாரங்களை கூறுகிறேன் கேள். பழைய பாபிலோன் நகரில் சிவவழிபாடு ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்திருக்கிறது. அதன் அடையாளமாக சிவலிங்கங்கள் பல அங்கு இன்னமும் கண்டெடுக்கப்பட்டு வருகிறது. அயர்லாந்திலும், ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் கண்டெடுக்கபட்டுள்ள பல சிவலிங்கங்கள் சிவ வழிபாட்டின் முழு வீச்சை நமக்கு காட்டுகிறது.

   உலகம் முழுவதையுமே அரசாண்ட இங்கிலாந்து நாடு ஒரு காலத்தில் ரோமாபுரி நாட்டிற்கு அடிமைபட்டு கிடந்ததை வரலாற்று மாணவன் கூட அறிவான் அப்போது ரோமர்கள் இங்கிலாந்து தேச முழுவதும் லிங்க வழிபாட்டை பரப்பினார்கள் என்பதற்கு பல ஆதாரங்கள் இருக்கின்றன. கடந்த 14-ம் நூற்றாண்டு வரையில் லித்வேனியா நாட்டில் சிவ வழிபாடு இருந்திருக்கிறது. அதுமட்டுமல்ல திபெத், பூட்டான் போன்ற நமது அண்டை நாடுகளிலும் ஜப்பானியரின் அரச மதமான ஹிண்டோ மதத்திலும் லிங்க வழிபாடு இன்றும் இருக்கிறது. இது மட்டும் அல்ல இஸ்லாமியர்களின் புனித ஸ்தலமான மெக்காவிலுள்ள காபாக்குள் சிவலிங்கமே இருக்கிறது. அதை தொட்டு முத்த மிடுவதே ஹஜ் பயணத்தின் முக்கிய நோக்கமாகும்.

    வெளிநாடுகளில் மட்டுமல்ல நமது நாட்டிலும் தொல்பழங்காலத்தில் லிங்க வழிபாடு மட்டுமே இருந்திருக்கிறது. அதற்கான ஆதாரங்கள் ஹராப்பா, மொகஞ்சதாரோ போன்ற பகுதிகளில் கிடைத்து இருக்கிறது. மனிதர்களும் பல விதமான விலங்குகளும் சூழ்ந்திருக்க யோக நிஷ்டையில் சிவ பெருமான் வீற்றிருக்கும் யோகத்திருக்கோலம் அப்பகுதிகளில் கிடைத்திருப்பது இதை நமக்கு காட்டுகிறது

  எனவே தென்னாடுடைய சிவன் எந்நாட்டவருக்கும் இறைவனாக இருந்திருப்பதும் இருப்பதும் வெறும் கற்பனை அல்ல முழுமையான நிஜமாகும். இந்த நிஜங்கள் நம்மை ஆண்ட வெள்ளைக்காரர்களும் அதற்கு பின்பு நம்மை ஆளுகின்ற அவர்களின் வாரிசுகளும் இதை மறைத்து விட்டார்கள். இன்றும் மறைப்பதற்கான அனைத்து வேலைகளையும் செய்து கொண்டிருக்கிறார்கள்

     இத்தகையவர்களிடமிருந்து நமது கலாச்சார வரலாற்றுப் பின்ணனியை காப்பாற்ற நாம் தான் விழிப்புடன் இருந்து பாடுபட வேண்டும். நமது சுயத்தன்மையை இழந்தோம் என்றால் முகமற்ற மனிதர்களாக முகவரியில்லாத கடிதங்களாக வருங்காலத்தில் நமது வாரிசுகள் அல்லாட வேண்டியது இருக்கும். என்று மிக விரிவாக சொல்லி முடித்தார் .



Dr.V.V.Santhanam M.D

3 comments:

பரஞ்சோதி said...

சிவனை பற்றி பதிவுக்கு நன்றி அய்யா.

மேலே சொன்ன தகவலுக்கு தகுந்த புகைப்பட ஆதாரங்கள், மற்றும் இணைய தள முகவரிகள் கிடைச்சா கொடுங்க.

இறைவன் என்று இருந்தால் அவர் ஒருவரே!

அவரை பல்வேறு வகையில் உலக மக்கள் வணங்கி வருகிறார்கள். எல்லோரும் இறைவனின் பிள்ளைகள் என்பதாலேயே அவர் அனைவரும் அரவணைத்து வருகிறார். அதே இறைவன் பெயரை சொல்லி மக்கள் ஒருவருக்கு ஒருவரை அடித்து கொண்டு சாவது மூடத்தனத்தின் உச்சக்கட்டம்.

maniajith007 said...

நிறைய விஷயங்கள் அறிந்து கொண்டேன் உண்மை நம் பெருமையை நாம் சரியாக அறிய முடியாத வகையில் இங்கே சூழ்ச்சி நடக்கிறது

dowsarpaandian said...

வணக்கம்! நல்ல கருத்து! சிவன் இல்லை என்று சொல்லுங்கள் வாசிக்கிறோம்! ஆனால், எல்லாம் சிவமயம் என்ற உண்மையை, மன்னிக்கவும்! எழுத வேண்டாம்! நல்ல நேரம்!!! பிற சகோதரர்கள் படிக்கவில்லை! படித்தால்........ ஒரு சகோதரர் ஏதேனும் புகைப்படம் கேட்டிருந்தார்! தேடிப்பார்த்து கொள்ளவும்! www.indiadivine.org

Post a Comment

                     முக்கிய அறிவிப்பு  
           நமது ' ஸ்ரீ நாராயண கேசரி ' தளத்தை பார்வையிட்ட பல வாசகர்கள் தங்களது ஆன்மீக கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டுமென்று தொலை பேசியிலும் ஈ-மெயிலிலும் வற்புறுத்தி கேட்டனர் அதனால் கேள்விகளை +91-9442426434 என்ற அலைபேசி எண்ணிலும் E-Mail sriramanandaguruji@gmail.comமுகவரிக்கும் தெரிவிக்கவும் பதில் நமது தளத்தில் வெளியிடப்படும்