ஏழு வர்ணங்களும் ஒரே ஒரு வர்ணத்திலிருந்துதான் தோன்றியது. ஒரு விதையிலிருந்து தான் ஆயிரக்கணக்கான விதைகள் தோன்றுகின்றன. ஆதி மனிதன் ஒருவனில் இருந்துதான் மனித சமுதாய நதி பெருக்கெடுத்து ஓடுகிறது. வேதம் என்ற மூலப்பொருளிலிருந்துதான் இன்றைய நவீன சிந்தனைகள் உருவெடுத்து உள்ளன. இந்த வேத மகுடத்தில் உபநிஷதங்கள் என்ற வைரங்கள் பொறிக்கப்பட்டு அழகுக்கு அழகு சேர்கின்றன. உபநிஷத கருத்துக்கள் பல அந்த கருத்து என்ற வனத்திற்குள் சென்று சாமான்ய மனிதர்களால் பொருட்களை அடையாளம் காண முடியாது. ஆனால் உபநிஷத ஆரண்யங்களுக்குள் வாழுகின்ற மகா புருஷர்கள் மில சுலபமாக அதன் அனைத்து அங்கங்களையும் அடையாளம் காட்டி விடுவார்கள். எனவே அதன் உட்கிடையை புரிந்து கொள்ள யோகி ஸ்ரீ ராமானந்த குருவுடம் எனது சந்தேகங்களை கேள்விகளாக சமர்பித்தேன்.
கேள்வி:
உபநிஷதங்கள் பொதுவாக எதைப்பற்றி பேசுகின்றன?
குருஜி:
மிக சுலபமாக இந்த கேள்வியை நீ கேட்டுவிட்டாய். ஆனால் இதற்கு பதில் சொல்லுவது என்பது மிகவும் சிரமமான காரியம். அத்தி மரத்தில் அத்திகாய்தான் காய்க்கும் என்று கண்ணை மூடி கொண்டு சொல்லி விடலாம். மலைக்காடுகளில் இன்னென்ன மரங்கள் தான் வளரும் என்று வரையறுத்து கூறமுடியுமா! மலைக்காடுகளை விட அடர்த்தியானது சிக்கலானது உபநிஷத கருத்துகள். பொதுவாக அது என்ன கூறுகிறது என்று நீ கேட்பதனால் அது ஆத்ம ஞானத்தை பற்றி பேசுகிறது என்று சொல்லலாம்.
கேள்வி:
உபநிஷதங்கள் குறிப்பிட்ட ஒரு தத்துவத்தை எடுத்துக்கொண்டு பேசாமல் பல தரப்பட்ட கருத்துகளை பேசுகிறதா?
குருஜி:
பலதரப்பட்ட கருத்துகளை உபநிஷதங்கள் தனக்குள் கொண்டுள்ளது என்பது உண்மைதான். இருந்தாலும் அது பலகருத்துக்களை ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கி கொண்டே முடிவில்லாமல் போகவில்லை அதில் கூறப்பட்டுள்ள எல்லா கருத்துகளும் ஒட்டு மொத்தமாக உலகில் உண்மையானது எது என்று ஆராய்ச்சி செய்கிறது என்று சொல்லலாம். இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் சரியான வாழ்க்கை முறையே உபநிஷதத்தின் குறிக்கோள் ஆகும். அதாவது உடல் அவஸ்தையிலிருந்து ஆத்மாவை விடுவித்து தன்னை உணரும் பேரானந்த நிலையில் அதை நிலை நிறுத்துவதே உபநிஷதங்களின் குறிக்கோள் ஆகும்.
கேள்வி:
வேதங்கள் பிரம்மாணங்கள் ஆகியவற்றின் குறிக்கோள்களும் ஆத்ம விடுதலை என்பது தானே?
குருஜி:
உண்மைதான். வேதங்களும் ஜீவாத்மாக்கள் பரமாத்மாவுடன் இரண்டற கலக்க வேண்டும் என்பதைதான் வலியுறுத்துகின்றன ஆனால் அதற்கான வழிவகைகளை வேதங்கள் வேறு வகையில் சொல்லுகின்றன. உபநிஷதங்களோ வேதங்கள் கூறும் வழிவகைகளுக்கு முற்றாக மாறுபாடுடைய வழிவகைகளை காட்டுகின்றது. இதற்கு உதாரணம் கூற வேண்டுமானால் வேதங்கள் யாகங்களையும், சடங்குகளையும், புரோகிதர்களையும் முதன்மையானதாக கூறுகின்றன. ஆனால் உபநிஷதங்கள் வெறும் மந்திரங்களிலும், சடங்குகளிலும் நம்பிக்கை வைக்கவில்லை. கடவுளை அர்ச்சனை செய்வதினால் நம்மை காக்கும்படியும் வற்புறுத்த முடியாது. யாகங்கள் செய்வதினால் இறைவனை மகிழ்வித்துவிடவும் முடியாது என்று வெளிப்படையாகவே விமர்சிக்கின்றன.
கேள்வி:
இத்தகைய விமர்சனம் புனிதமானதான வேதங்களை அவமானப்படுத்துவதுபோல் அல்லவா இருகிறது? அப்படி மாற்றுக்கருத்தை உபநிஷதங்கள் கூறுவது ஏன்?
குருஜி:
வேதங்களை உபநிஷதங்கள் உதாசின படுத்துகின்றனவா இல்லையா என்பது முக்கியம் இல்லை. உபநிஷதங்களில் இந்த புரட்சிகரமான சிநதனைகள் வெளிபட்டதற்கு நிறைய காரணங்கள் உண்டு. இயற்கை வழிபாட்டை வற்புறுத்தும் வேதக் கெள்கைகளுக்கு முரணானதான சில சம்பவங்கள் அக்காலத்தில் அரங்கேறியது. வேத மந்திரங்களில் முக்கியமான பகுதிகள் கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையில் பூசாரி என்ற இடைத்தரகர் தேவையில்லை என கருதுகிறது. ஆனால் இக்கருத்துகளை பின்னுக்குத் தள்ளிவிட்டு. கிரியைகளுக்கும், யாகங்களுக்கும் முன்னுரிமை கொடுக்கும் சில கருத்துகளை மட்டுமே பிராதனபடுத்திய புரோகிதர்கள் தங்களை நிலை நிறுத்தி கொள்வதற்காக ஆத்ம சுத்திகரிப்பு என்ற ஆன்மீகத்தை விட்டுவிட்டு சடங்குகளில் ஆடம்பரத்தையும், மூடக்கொள்கைகளையும் வலியுறுத்தினார்கள். உதாரணமாக ஆயிரம் யாகங்கள் செய்பவன் இந்திரபதவியை உடனடியாக பெறலாம் என்றெல்லாம் கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டு தங்களது ஆசிரம கொட்டைகைகளில் கால்நடைகளின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ள விடாமுயற்சியில் ஈடுபட்டு இருந்ததோடு அதாவது ஆத்ம போதத்தை மறந்து சுகபோகத்தில் மக்கள் திளைத்த போது உபநிஷதங்களின் இத்தகைய புரட்சிகரமான கருத்துக்கள் தான் நமது தர்மத்தை காப்பாற்றியது எனலாம். இருப்பினும் புரோகிதர்களால் மந்திர மோகத்தில் மூழ்கடிக்கப்பட்ட சாதாரண மக்கள் இத்தகைய உண்மையான கருத்துகளை உடனடியாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதனால் உபநிஷதங்களை உருவாக்கிய ஞான புருஷர்கள் ஒரு புதுமையான வழியை கண்டுபிடித்தார்கள்.
வேதகாலத்தில் யாகங்கள் செய்து சில சடங்கு சம்பிரதாயங்களை புரிந்து தெய்வங்களை திருப்தி படுத்தினால் அவைகள் மனிதர்களாகிய நமக்கு நம் வாழ்க்கை தேவைகள் அனைத்தையும் தந்து காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கை அளவுக்கு அதிகமாக இருந்ததினால் இன்றைய திரைப்படங்களை போல் யாகங்கள் அன்று மக்களை ஈர்க்கும் கவர்ச்சி பொருளாக இருந்தது. அதனால் உபநிஷத ஞானிகள் யாகங்களை நேரடியாக மறுதலிக்காமல் யாகங்களுக்கு புதிய விளக்கங்களை கொடுக்கலானார்கள். மனிதன் தன்னை உணர்ந்து கொள்ள ஒரு மார்க்கம் தான் யாகம் என்பது ஒவ்வொரு தனிமனிதனின் வாழ்க்கையே யாகமாகும். அந்த வாழ்க்கை யாகத்தில் மனிதனின் ஆத்மவளர்ச்சிக்கு தடையாக இருக்கும் புலன் இன்பங்களையும், மோகத்தையும், போகத்தையும் பலிகளாக இடவேண்டும் என்றார்கள் அதாவது உடம்பு என்ற யாக குண்டத்தில் இறை வேட்கை என்ற அக்னியை எழுப்பி ஆசைகளை ஆகுதிகளாக ஆக்க வேண்டும் என்றார்கள்.
கேள்வி:
உண்மையிலேயே உபநிஷதங்களின் இந்த கருத்து தான்தோன்றித்தனமாக சுற்றி திரியும் மனித சமுதாயத்தை நெறிப்படுத்தும் உன்னதமான கருத்துகள் தான் இதே போன்ற கருத்துக்கள் உபநிஷதங்களில் வேறு என்னென்ன உள்ளது என்பதை தயவு செய்து கூறுங்கள்?
குருஜி:
நேர்மை என்பதும் வாய்மை என்பதும் மனித குலத்திற்கு அத்தியாவசியமான தேவைகள் என்பதை உபநிஷதங்கள் வலியுறுத்தி கூறுகின்றன. வாய்மையும் நேர்மையும் இல்லாத சமூகம் கெட்டு சீரழிந்து விடும் என்பதையும் அவைகள் சுட்டிகாட்டுவதோடு மட்டுமல்லாது உலகின் உண்மையானது எது என்பதை பற்றியும் விளக்குகின்றன.
கேள்வி:
உண்மையானது என்று உபநிஷதங்கள் எதைக் கூறுகின்றன?
குருஜி:
நான் யார்? மூலப் பரம்பொருள் எது? என்ற இரண்டு கேள்விக்கு சரியான பதில் எதுவோ அது தான் உலகிலேயே உண்மையானது என்று உபநிஷதங்கள் கூறுகின்றன.
கேள்வி:
அப்படி என்றால் நான் என்பது யார்?
குருஜி:
பெருவாரியான மனிதர்கள் தங்களது உடலையே நான் என்று கருதி வருகிறார்கள் உண்மையில் உடல்கள் நான் அல்ல பிறகு எது நான்? நமது உயிரா? அதுவும் அல்ல உடம்பில் காயம் பட்டுவிட்டால் என் உடம்பில் புண் வந்து விட்டது என்கிறோம் இதன் உள் அர்த்தம் நான்வேறு என் உடம்பு வேறு என்பதுதான். உயிர் போய்விட்டால் என் உயிர் போய்விட்டது என்கிறோம் அப்போதும் நான்வேறு என் உயிர் வேறு என்பதுதான் பொருளாக அமைகிறது அப்படியென்றால் நான் என்பது உண்மையில் என்ன? உடம்பை உயிர் இயக்குகிறது உயிரை எது இயக்குகிறது? அல்லது இப்படியும் கேட்கலாம். உடம்பு உயிரை மையமாகக்கொண்டு இருக்கிறது. உயிர் எதை மையமாகக் கொண்டு இருக்கிறது? என்றெல்லாம் கேள்விகளை மாற்றி மாற்றி போட்டுகேட்டாலும் உபநிஷதங்கள் ஒரே பதிலை உறுதியாக சொல்லுகின்றன. உடலைத்தாங்கி நிற்கும் உயிரை ஆன்மா தாங்குகிறது என்பது தான் அந்த பதிலாகும்.
கேள்வி:
ஆத்மாவை பற்றி பல நூல்கள் படித்திருக்கிறேன். பலரின் பேச்சுக்களையும் கேட்டிருக்கிறேன் இவை அனைத்திலும் முடிவாக குழப்பமே வருகிறது இதுவரை என்னால் ஆத்மா என்பது என்ன என்பதை முழுமையாக புரிந்து கொள்ள முடியவில்லை. இதற்கு காரணம் எனது அறிவு இன்னும் பக்குவபடவில்லை என்பதாகத்தான் இருக்கும் என்று நம்புகிறேன் நான் புரிந்து கொள்ளும் அளவில் ஆத்மாவை பற்றி விளக்கினால் நன்றாக இருக்கும்?
குருஜி:
கண்களால் காண முடியாதது, விரல்களால் தீண்ட முடியாதது, மரணத்தால் முடிவடையாதது, பாவபுண்ணியங்களால் தொடமுடியாதது, வயோதிகமும் நோயும் அண்ட முடியாதது, எத்தகைய உணர்ச்சியும் அற்றது. அதே நேரம் புலன்களின் உணர்வுகளாக வெளிப்படுவது இதுதான் ஆத்மா ஆகும் ஆத்மாவை பற்றிய முடிந்த முடிவாகும்.
கேள்வி:
உங்களின் இந்த பதில் எனது அறிவு குழப்பத்தை மேலும் அதிகரிக்கிறதே தவிர குறைக்க வில்லை. ஆகவே இன்னும் எளிமையாக தயவு செய்து சொல்லவும்?
குருஜி:
கண் என்பது ஒரு புலனாகும். இது ஒரு பொருளை பார்க்க உதவுகிறது இதில் பார்வை என்பதே ஆத்மாவாகும் காது ஒலியைக்கேட்கிறது அல்லவா அதில் உள்ள கேட்டல் என்பதே ஆத்மாவாகும். ஒரு பொருளை தொடுகிறோம் அதை ஸ்பரிசம் அல்லது தொடு உணர்வு என்று சொல்கிறோம் அந்த உணர்வுதான் ஆத்மாவாகும் அதாவது மெய், வாய், கண், மூக்கு, காது ஆகிய ஐம்புலன்களும் ஆத்மாவின் சாதனங்கள் ஆகும். இந்த புலன்கள் ஐந்தும் ஆத்மாவைப்பற்றி நாம் அறிந்து கொள்ள அல்லது ஆத்மா தன்னை ஓரளவு வெளிப்படுத்திக் கொள்ள உதவியாய் இருக்கிறது. அதாவது உயிர், புலன்கள், உணர்வுகள் இவை அனைத்தையும் கிளைகள், மரங்கள் என்று சொன்னால் ஆத்மாவை வேர்கள் என்று சொல்லலாம் இதுதான் ஆத்மாவைப்பற்றிய நான் அறிந்த எளிய விளக்கம் இதைவிட எளிமையாகக்கூறுவதற்கு வார்த்தைகள் இல்லை என்றே கருதுகிறேன். தாய்மையின் பரிவை எப்படி உணர மட்டும் தான் முடியுமோ அதே போன்றே ஆத்மாவின் இருப்பை ஒவ்வொரு ஜீவனும் உணரமட்டும் தான் முடியும். அப்படி உணர முயற்சிக்கும் ஜீவன்கள் ஆத்மாவோடு ஐக்கியமாகிவிடும் என்பதுதான் உண்மைநிலை.
கேள்வி:
ஓரளவு புரிந்து கொண்டேன் இன்னும் புரிந்து கொள்ள முயற்சி செய்கிறேன். இருப்பினும் ஆத்மாவை பற்றி இன்னும் ஒரு சந்தேகம் எனக்கு இருக்கிறது அது நமது உடலில் ஆத்மா எந்த நிலையில் இருக்கிறது என்பதாகும் அதை சற்று விரிவாக கூறவும்?
குருஜி:
விழிப்பு நிலை, கனவு நிலை, உறக்க நிலை, தன்னுனர்வு நிலை என்ற நான்கு நிலைகளாக ஆத்மா நமது உடலில் தங்கியுள்ளது விழிப்பு நிலையில் இருக்கும்போது புறஉலக உணர்வோடு ஆத்மா செயல்படுகிறது. கனவு நிலையில் உடலிலிருந்து விடுபட்டு சுயேட்சையாக, சுதந்திரமாக வெளியில் சுற்றித்திரிகிறது. அப்பொழுது தான் நமக்கு வண்ணமயமான அல்லது பயமுறுத்தக் கூடிய கனவுகள் ஏற்படுவதாக கருதுகிறோம். ஆத்மாவின் உறக்கநிலையில் நமக்கு கனவுகளும் இருக்காது நினைவுகளும் இருக்காது அப்பொழுதுதான் ஆத்மா தற்காலிகமாக பிரம்மத்துடன் ஒன்றி இருக்கிறது அல்லது கலந்து இருக்கிறது என்று கூறலாம்.
கேள்வி:
ஆழ்ந்த மயக்கமோ அல்லது அதிகபடியான போதையோ கனவும், நினைவும் இல்லாமல் தானே இருக்கிறது. இந்நிலைகளில் ஆத்மா பிரம்மத்தோடு ஐக்கியமாகி இருக்கிறது என்று கூறலாமா?
குருஜி:
அப்படி கூற முடியாது. ஏனென்றால் ஆத்மா ஐக்கியத்தோடு இருக்கிறதா, மயக்கத்தோடு இருக்கிறதா என்ற சந்தேகம் ஆத்மாவின் உறக்கநிலையில் இருப்பதனால்தான் இதை தற்கால ஐக்கியம் என்று குறிப்பிடுகிறோம். உண்மையில் ஆத்மாவின் உயரிய நிலை என்பது தன் உணர்வோடு அதாவது துரிய நிலையில்தான் உள்ளது. இந்த நிலைதான் ஆத்மாவின் பூரணநிலை அதாவது மதில்மேல் இருப்பவன் மதிலுக்கு உள்ளேயும், வெளியேயும் உள்ளவற்றை உள்ளவாறு அறிய முடிவதுபோல் பிரம்மத்தை பற்றிய அறிவும் பிரகிருதியை பற்றிய அறிவும் பெறுவதற்குக் காரணமாக இருந்து ஆத்மாவை பரிபூரணமாக்குகிறது. இதை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத, பேரானந்த நிலை என்றும் சொல்லலாம். இந்த நிலை இப்படித்தான் இருக்கும் என்று கற்பனைக் கூட செய்ய முடியாததனால் பிரம்மத்தோடு கலந்த நிலை என்றுதான் கொள்ள வேண்டும்.
கேள்வி:
ஆன்மா பிரம்மத்தோடு கலக்கும் நிலைதான் உயர்ந்த நிலை இறுதிநிலை என்கின்ற போது பிரம்மா என்றால் என்னவென்று அறிந்து கொள்ள ஆர்வம் எழுகிறது. பிரம்மத்தை பற்றி விளக்க முடியுமா?
குருஜி:
நாம் நமது கண்களால் காணுகின்ற உலகமும் காணாத பிரபஞ்சமும் எதிலிருந்து தோன்றியதோ அல்லது இவைகளுக்கு எது மூலப்பொருளாக இருந்ததோ எதிலிருந்து எல்லாம் தோன்றி கடைசியில் எதில் போய் எல்லாம் முடிகிறதோ முடிந்த பின் மீண்டும் எதிலிருந்து எல்லாம் உற்பத்தியாகிறதோ அது தான் பிரம்மம்.
கேள்வி:
கேள்வி:
இந்த பதிலை புரிந்து கொள்வதற்கு சற்று சிரமமாக இருக்கிறது எனவே இதை இன்னும் எளிமைப்படுத்தி சொல்ல முடியுமா?
குருஜி:
மரத்திற்கு ஆதாரமாக இருப்பது விதை; பானைக்கு ஆதாரமாக இருப்பது மண். சேலைக்கு ஆதாரமாக இருப்பது நூல். அதே போன்றே உலகத்திற்கு ஆதாரமாக இருப்பது பிரம்மம். அனுபவம் வாய்ந்த மகா ஞானிகளே பிரம்மத்தைப் பற்றி விவரிக்கும் போது அது இதுதான் என்று வரையறுத்துக் கூற சிரமப்படுகிறார்கள் தடுமாறுகிறார்கள் பிரம்மானது தனது இயல்பை இருப்பை மனிதர்களுக்கு முழுமையாக வெளிக்காட்டும் வரை பிரம்மத்தைப் பற்றிய முழு ஞானத்தையும் மனிதனால் பெற இயலாது. உபநிஷதங்கள் பிரம்மவிளக்கத்தில் சிகரமாக இரு கருத்தை கூறுகின்றன அவை ==தத்வமஸி++ என்றும் ==அஹம் பிரஹ்மாஸ்மி++ என்றும் கூறுகிறது. ==தத்வமஸி++ என்றால் நீ அதுவாக இருக்கிறாய் என்று பொருள் ==அஹம் பிரஹ்மாஸ்மி++ என்றால் நான் பிரம்மமாய் இருக்கிறேன் என்று பொருள் இந்த இரண்டு கருத்துகளையும் இணைத்து பார்க்கும் போது ஆத்மாதான் பிரம்மமோ அல்லது கடவுளோ என்ற சந்தேகம் நமக்கு வருகிறது.
கேள்வி:
உண்மையில் ஆத்மாவின் விளக்கத்தை பார்க்கும்போதும் பிரம்மத்தின் விளக்கத்தை பார்க்கும் போதும் இரண்டும் ஒன்றுதானோ என்ற ஐயம் எல்லோருக்கும் ஏற்படுகிறது உண்மையில் ஆத்மாவும் பிரம்மாவும் வேறுவேறா அல்லது ஒன்றே தானா?
குருஜி:
ஒரு கோணத்தில் பார்க்க போனால் ஆத்மாவும், பிரம்மாவும் ஒன்றே தான். அதாவது கடவுளும், மனிதனும் ஒன்றே தான் மனிதன் மட்டுமல்ல கண்ணுக்கு தெரியாத அமீபாவும் சாக்கடையில் நெளிகின்ற புழுவும் கடவுள்தான் சகல மதத்தின் சிருஷ்டி ரகசிய கருத்துக்கள் இறைவன் மனிதனை தனது சாயலிலேயே படைத்தான் என்பதுதான். எனவே ஆத்மாவை ஒரு சிறிய அகல் விளக்கிற்கு ஒப்பிட்டால் பரமாத்மாவை கார்த்திகை மகா தீபத்திற்கு ஒப்பிடலாம். அதாவது அந்த மகா தீபத்திலிருந்து ஏற்றப்பட்டதே சிறிய அகல் விளக்குகள் ஆகும் வெளிச்சத்தில் சிறிது பெரிது என்ற வேறுபாடு இருந்தாலும் இரண்டுமே நெருப்புதான். ஒவ்வொரு ஜீவனுக்குள்ளேயும் ஆத்மா நிறைந்து இருக்கிறது. அதாவது இறைவன் குடி கொண்டு இருக்கிறார். உடம்பு என்பது இறைவன் வாழுகின்ற ஆலயம் ஆகும். ஆலயத்தை பாதுகாத்து அதனுள் இருக்கும் மூலமூர்த்தியை தரிசனம் செய்ய முயற்சிப்பதே ஒவ்வொரு ஜீவனின் கடமை ஆகும் அந்த கடமையை யார் சரிவர செய்கிறார்களோ அவர்களே இறைவனும் தானும் வேறல்ல என்ற உண்மையை உணர்ந்தவர் ஆகிறார்கள்.
கேள்வி:
பரமாத்மாவும், ஜீவாத்மாவும் ஒன்று என்றால் உலக உற்பத்தி என்பது எப்படி நிகழ்ந்தது?
குருஜி:
“ஓம் பூர்ணமத : பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவாவ ஹிஷ்யதே” இந்த சுலோகத்தின் பொருளை புரிந்து கொண்டால் பரமாத்மா ஜீவாத்மாவின் தோற்றத்தையும் உலக உற்பத்தியையும் மிக நன்றாக தெரிந்து கொள்ளலாம். இதன் பொருள் என்னவென்றால் அது பூரணம் இதுவும் பூரணம் பூரணத்திலிருந்து பூரணம் தோன்றியது, பூரணத்திலிருந்து பூரணத்தை எடுத்த பின்பும் பூரணமே எஞ்சி நிற்கிறது என்பதாகும். அதாவது சுடர் விடும் ஓர் விளக்கிலிருந்து இன்னொரு விளக்கை ஏற்றினால் ஏற்றிய விளக்கும் குறைவானதாகாது ஏற்றப்பட்ட விளக்கும் குறைந்து போகாது அது மாதிரிதான் ஆதிமூலமான பிரம்மத்திலிருந்து பிரபஞ்சம் வெளிப்பட்டபோதும் ஆத்மாக்கள் விரிவடைந்தபோதும் பிரம்மமானது எள்ளளவும் குறைவை எட்டவில்லை பிரம்மம் தன்னை பௌதீகமாக வெளிப்படுத்தி கொண்ட தோற்றமே பிரபஞ்சமாகும். நாம் காணுகின்ற பொருள் கண்ணுக்கு தெரியாத வஸ்துக்கள் அனைத்திலுமே பிரம்மம் நிறைந்துள்ளது அல்லது பிரம்மத்திலேயே அந்த பொருட்கள் அனைத்தும் அடங்கி உள்ளது.
கேள்வி:
இதுவரை உடல்தாங்கி இருக்கும் அனைத்து உயிர்களும் பாவத்தின் சம்பளமாகவே வாழ்க்கையை பெற்று இருப்பதாக நான் நம்பி வந்தேன் சுத்த சைதன்யமான பரப்பிரம்மத்திலிருந்தே வந்தவன் நான் என்று அறியும்போது நெஞ்சம் பூரிக்கின்றது இப்படி எனக்குள் மறைந்திருக்கும் பரப்பிரம்மத்தை நான் எவ்வாறு தேடிப்பிடித்து அடைக்கலம் ஆவது?
குருஜி:
ஒவ்வொரு இதயத்திற்குள்ளேயும் புதர்போல் மண்டிக்கிடக்கும் ஆசை கொடிகளை அறுத்தெரிய வேண்டுமென்று உபநிஷதங்கள் கூறுகின்றன. ஆசைகளை அறுத்துவிட்டால் அதாவது நூலாம் படையை துடைத்துவிட்டால் அதனுள் மறைந்து இருக்கும் ஓவியங்களை தெளிவாக பார்ப்பதுபோல் நமக்குள் இருக்கும் இறைவனை தரிசித்து நிலையான ஆனந்தத்தை அடையலாம்
கேள்வி:
கௌதம புத்தரும் துக்கத்திற்கு காரணம் ஆசைதான் என்கிறார் புத்தரின் கொள்கையும் உபநிஷதங்களின் கொள்கையும் ஒன்றா?
குருஜி:
இல்லை. உபநிஷதங்கள் தோன்றி சில ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னரே கௌதம புத்தர் தோன்றினார். அதாவது கௌதமபுத்தர் நமக்கு பாட்டன் என்றால் உபநிஷதங்கள் நமது கொள்ளுபாட்டன்களுக்கு பாட்டன் ஆகும் அதே நேரம் புத்தர் சகலவிதமான ஆசைகளையும் துறந்து விட்டால்தான் முழுமையான நிலையான ஆனந்தத்தை அடைய முடியும் என்றார். உபநிஷதங்களோ அறுக்க வேண்டிய பற்றுகளை மட்டும் அறுத்தால் போதும் என்று சில ஆசைகளுக்கு அனுமதியும் தருகிறது ஒரு மனிதனின் ஆசை எதை நோக்கி செல்கிறதோ அதை பொறுத்துதான் அவனின் நிலையும் அமைகிறது. அழகில் ஆசை விழுந்தால் கலைஞன் ஆகிறான். உடம்பில் ஆசை பெருகினால் காமுகன் ஆகிறான். பணம் பொருள் என்று ஆசை பெருகினால் லோபி ஆகிறான். வாழ்க்கையின் மேல் ஈர்ப்பு ஏற்பட்டால் சம்சாரி ஆகிறான் இறைவன்மேல் ஆசை பெருகினால் ஞானி ஆகிறான். ஒவ்வொரு விஷயத்திலும் பட்டு தெளிந்து அல்லது பட்டுத்தெளிந்தவனை பார்த்து தெரிந்து எது நிலையானது? என்பதை அறிந்து கொள்ள எந்த பற்றை கைவிடவேண்டுமோ அதை கைவிட்டு அதாவது ஆணவம் காமம் போன்ற பற்றுகளை தூர வீசி அன்பு, கருணை, மனிதாபிமானம் போன்ற பற்றுகளை அள்ளி அனைத்து ஜீவன் இறைவனை நோக்கி நகர வேண்டுமென்று உபநிஷதங்கள் வலியுறுத்துகின்றன.
கேள்வி:
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உபநிஷதங்கள் இவ்வளவு அழகிய அறிய கருத்துகளை கூறி இருப்பது நமது நாட்டு ஞானிகளின் மேதா விலாசத்தை நம்மால் புரிந்து கொண்டு மெய்சிலிர்க்க வைக்கிறது. உபநிஷதங்கள் பற்றி வேறு செய்திகள் இருக்கிறதா? உபநிஷதம் என்ற வார்த்தைக்கு பொருள் என்ன என்பதெல்லாம் அறிய ஆவலாக இருக்கிறேன்?
குருஜி:
உபநிஷதங்கள் என்ற வார்த்தைக்கு குருவின் அருகில் பணிவுடன் இருத்தல் என்பது பொருளாகும். இந்த பொருளின் படியே உபநிஷதங்கள் அனைத்தின் அமைப்பும் அமைந்திருக்கிறது. சீடன் கேள்வியை கேட்க குரு அவனது வினாவிற்கு பதில் அளித்து சந்தேகத்தை நிவர்த்தி செய்வது என்பதே உபநிஷதங்களின் பாணியாகும். சீடன் என்ன கேட்டான் குரு அதற்கு என்ன பதில் கூறினார் என்பதை அவைகளை படிக்கும் போது நாம் அறிந்து கொள்கிறோம். 200-க்கும் மேற்பட்ட உபநிஷதங்கள் இருந்தாலும் 108 உபநிஷதங்களே பிரதானமாக கருதபடுகிறது. அந்த 108-லும் ஆதி சங்கரர் விளக்கம் எழுதிய பத்து உபநிஷதங்களே மிக முக்கியமானதாக இன்று கருதபடுகிறது. உபநிஷதங்கள் சந்தேகமே இல்லாமல் புத்தரின் காலத்திற்கு முன்பு தோன்றியவைகள் மிகப்பழமையான உபநிஷதங்கள் உரைநடை வடிவிலேயே இருக்கின்றது. காலத்தால் சற்று பிந்திய உபநிஷதங்கள் பாட்டு வடிவிலே இருக்கிறது.
இந்த உபநிஷதங்களை உருவாக்கியவர்கள் மாபெரும் முனிவர்களே இந்த முனிவர்கள் முழுமையான ஆத்மஞானம் பெற்றவர்கள் தாங்கள் கூறுகின்ற ஒவ்வொரு விஷயத்தையும் வரிக்கு வரி தங்கள் வாழ்வின் அனுபவங்களாகக்கண்டவர்கள் தங்களை பற்றியோ தங்களது வாழ்க்கை முறையை பற்றியோ பிறருக்கு தெரிவிக்க வேண்டும் என்ற அக்கறை சிறிதும் இல்லாதவர்கள் அதாவது சுயவிளம்பரப்பிரியர்கள் அவர்கள் அல்ல தங்களை விட தங்களது கருத்துகளே முக்கியமானது என்று கருதும் மனோபாவம் உடையவர்கள் இதில் ஒரு பெரிய ஆன்மீக ரகசியம் அடங்கியுள்ளது தன்னை பற்றி அதிகமாகப்பேசுபவன் எவனோ அவன் சரீரத்தின் மீது அதிக பற்றுடையவனாக இருப்பான். ஆன்ம ஞானி சரீர இச்சைகளை கடந்து தான் மட்டுமல்ல தன்னைச் சேர்ந்தவர்களும் பற்றற்றான் பற்றினை பற்றவேண்டும் என்று உறுதியாக இருப்பான்.
குருஜி உபநிஷதங்களை பற்றிய எனது சந்தேகங்களுக்கு இவ்வாறு பதில் அளித்து வந்தபோது பற்றற்ற பற்று என்ற வார்த்தை பகவத் கீதையில் வரும் நிஷ்காமிய கர்மாவை பற்றிய நினைவை எனக்கு ஏற்படுத்தியது அடுத்த முறை கீதையை பற்றி அறிய வேண்டும் என்ற எண்ணத்தில் விடைபெற்றேன்.
R.V.வெங்கட்ரமணன்
4 comments:
tdrajeswaran
அந்த வாழ்க்கை யாகத்தில் மனிதனின் ஆத்மவளர்ச்சிக்கு தடையாக
இருக்கும் புலன் இன்பங்களையும், மோகத்தையும், போகத்தையும் பலிகளாக
இடவேண்டும் என்றார்கள் அதாவது உடம்பு என்ற யாக குண்டத்தில் இறை வேட்கை என்ற
அக்னியை எழுப்பி ஆசைகளை ஆகுதிகளாக ஆக்க வேண்டும் என்றார்கள்.
உடலைத்தாங்கி நிற்கும் உயிரை ஆன்மா
தாங்குகிறது என்பது தான் அந்த பதிலாகும்.
உயிர்,
புலன்கள், உணர்வுகள் இவை அனைத்தையும் கிளைகள், மரங்கள் என்று சொன்னால்
ஆத்மாவை வேர்கள் என்று சொல்லலாம் இதுதான் ஆத்மாவைப்பற்றிய நான் அறிந்த எளிய
விளக்கம்
தாய்மையின் பரிவை எப்படி உணர மட்டும் தான் முடியுமோ அதே
போன்றே ஆத்மாவின் இருப்பை ஒவ்வொரு ஜீவனும் உணரமட்டும் தான் முடியும்.
அப்படி உணர முயற்சிக்கும் ஜீவன்கள் ஆத்மாவோடு ஐக்கியமாகிவிடும் என்பதுதான்
உண்மைநிலை.
உடம்பு என்பது இறைவன் வாழுகின்ற ஆலயம் ஆகும். ஆலயத்தை
பாதுகாத்து அதனுள் இருக்கும் மூலமூர்த்தியை தரிசனம் செய்ய முயற்சிப்பதே
ஒவ்வொரு ஜீவனின் கடமை ஆகும் அந்த கடமையை யார் சரிவர செய்கிறார்களோ அவர்களே
இறைவனும் தானும் வேறல்ல என்ற உண்மையை உணர்ந்தவர் ஆகிறார்கள்.
சுடர் விடும் ஓர்
விளக்கிலிருந்து இன்னொரு விளக்கை ஏற்றினால் ஏற்றிய விளக்கும்
குறைவானதாகாது ஏற்றப்பட்ட விளக்கும் குறைந்து போகாது அது மாதிரிதான்
ஆதிமூலமான பிரம்மத்திலிருந்து பிரபஞ்சம் வெளிப்பட்டபோதும் ஆத்மாக்கள்
விரிவடைந்தபோதும் பிரம்மமானது எள்ளளவும் குறைவை எட்டவில்லை பிரம்மம் தன்னை
பௌதீகமாக வெளிப்படுத்தி கொண்ட தோற்றமே பிரபஞ்சமாகும். நாம் காணுகின்ற
பொருள் கண்ணுக்கு தெரியாத வஸ்துக்கள் அனைத்திலுமே பிரம்மம் நிறைந்துள்ளது
அல்லது பிரம்மத்திலேயே அந்த பொருட்கள் அனைத்தும் அடங்கி உள்ளது.
ஒவ்வொரு இதயத்திற்குள்ளேயும் புதர்போல் மண்டிக்கிடக்கும் ஆசை கொடிகளை
அறுத்தெரிய வேண்டுமென்று உபநிஷதங்கள் கூறுகின்றன. ஆசைகளை அறுத்துவிட்டால்
அதாவது நூலாம் படையை துடைத்துவிட்டால் அதனுள் மறைந்து இருக்கும்
ஓவியங்களை தெளிவாக பார்ப்பதுபோல் நமக்குள் இருக்கும் இறைவனை தரிசித்து
நிலையான ஆனந்தத்தை அடையலாம்
---------------
அற்புதமான கட்டுரை.
இதை ப்டித்தப்போது ஒரு புத்தகத்தையே படித்தது போல இருந்தது.
நன்றி, வணக்கம்.
http://tamil.darkbb.com/-f27/-t1804.htm#5230
உபநிஷதங்கள், வேதங்கள் பற்றி நல்ல விளக்கம்
அருமையான தகவலை கொடுத்த குருஜிக்கு மிக்க நன்றி..
தெளிவான விளக்கங்கள்!
Post a Comment