ஆவி உலகவழிபாடும் சிறுதெய்வ வழிபாடும் மிக பழங்காலம் தொட்டே ஒன்றுக்கொன்று பேதங்கள் தெரியாமல் பின்னி பினைந்து இருப்பதை பகுத்து தொகுத்து அறியவேண்டும் என்றால் நமது தொண்மைக்கால மக்களின் வாழ்வியல் பண்பாட்டுக் கூறுகள் இன்று எங்கேனும் சற்று ஆழமாக தெரிந்தால் அதை வைத்துக்கொண்டே இந்த விஷயத்தில் ஓர் தெளிவான முடிவுக்கு வரலாம் என்று நான் எண்ணி இருந்தபோது யாழ்கூடா நாட்டின் பேராசிரியர் ஒருவர் எழுதி இருந்த ஓர் கருத்துக் கோவையை படிக்க நேரிட்டது,
இன்டர்நெட்யுகத்தை நோக்கி மனித சமுதாயம் முன்னேறிவிட்டாலும் லெமுரியா காலத்திய பண்பாட்டுக் கூறுகள் இன்னும் யாழ்பாணத்து தமிழ் மக்களிடமும் கனனியாகுமரி. திருநெல்வேலி ஆகிய பகுதி மக்களிடமும் இன்றும் கொஞ்சம் ஒட்டி இருக்கிறது என்ற அவர் கூற்று ஓர் புதிய நம்பிக்கை நட்சத்திரத்தை எனக்குள் உதயமாக்கியது.
எனது நீண்ட நாள் நண்பர் நடுவக்குறிச்சி கருணாகரனும் அவரால் அறிமுகமான பேராசிரியர் இராமச்சந்திரன் மூலமும் மற்றும் பக்தர் வலநாடு கோபாலகிருஷ்ணனும் திருநெல்வேலியில் பல பகுதிகளிலிருந்து அரும்பாடுபட்டு சிறு தெய்வம் மற்றும் ஆவி உலக தகவல்களை சேகரித்து அனுப்பி இருந்தார்கள்,
அந்த தகவல்களும் நான் ஏற்கனவே அனுபவரீதியாக அறிந்து இருந்த பல விஷயங்களையும் ஒருங்கிணைத்து பார்த்தபோது மிக துல்லியமாக பல விஷயங்கள் புலப்பட்டன, அந்த விஷயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் நான் பெருமையும் சந்தோஷமும் அடைகிறேன்.
கன்னியாகுமரி மற்றும் நெல்லை பகுதியில் பெருவாரியான மக்களால் அறியப்படும் தெய்வம் “சுடலைமாடன்” ஆகும், சுடலைமாடனுக்கு இந்தப் பகுதிகளில் பெரும் பக்தர்களம் அதே நேரம் பயந்தவர்களும் ஏராளமானவர்கள் இருக்கின்றார்கள், சுடலைமாடன் விஷயத்தில் எனக்கு ஓர் நேரடி அனுபவம் உண்டு
எனது பூர்வாசிரம காலத்தில் பதினைந்து வருடங்களுக்கு முன்பு என எண்ணுகிறேன், நாகர்கோவிலில் எனத உறவினர் ஒருவர் வீட்டில் தங்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது, அவர் வீட்டிற்கு நேர்எதிரரே ஓர் கோவில் இருந்தது, அது என்ன கோவில்? அது என்ன தெய்வம்? என்று எனக்கு தெரியாது, அதை தெரிந்துகொள்ளும் ஆவலும் எனக்கு இல்லை, காரணம் எனக்கு அப்போது அசதியினால் உறக்கம் மட்டுமே தேவையாக இருந்தது, வீட்டிற்கு வெளித்திண்மையில் காற்றுக்காக படுத்து உறங்கினேன், உறங்கிக் கொண்டிருந்த எனக்குள் மூளை நரம்புகள் கிடுகிடுவென நடுங்கின மண்டைக்குள் கைவிட்டு யாரோ மூளையை பிசைவது போல் இருந்தது, ஆழ்ந்த உறக்கத்தில் மூச்சுத்திணறல் திடீரென ஏற்பட்டது, மூச்சுக்காற்றுக்காக ஏங்கி துடித்து அதள பாதாளத்தில் விழுவது போன்ற ஓர் உணர்வு ஏற்பட்டது, என் உட்புற சக்திகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து வலுகொண்டு எழுந்து உட்கார முனைந்தேன், ஆனால் முடியவில்லை, மார்கழி மாதத்தின் குளிரிலும் வியர்த்துக் கொட்டியது அதை மாற்றுவதற்கோ என்னவோ ஊதல் பனி காற்று மெதுவாக வீசியது, அந்த காற்றின் நடையோடு “கலீர், கலீர்” என சலங்கை சத்தம் கேட்டது, அந்த சலங்கை சத்தம் என் அடி வயிற்றுக்குள் ஓர் அச்சப்பந்தை உருட்டிவிட்டது, இரும்பு வாள்களும். கேடயங்களும் ஒன்றோடு ஒன்று உராய்வது போன்ற ஓர் பெரும் சத்தம் அதனோடு பலவிதமான மணி ஓசைகளும் திடீரென என்னை கடந்து சென்றது, அந்த ஒலிகள் என்னை கடக்கும்போது திடகாத்திரமான இரண்டு கால்கள் நடந்து சென்றதை நான் பார்த்தேன்.
உருண்டு திரண்ட முறுக்கேறிய தசைகள் ஏறி இறங்கும் கெண்டைக்கால்களும். யானையின் பாதம் பூமியை தொடுவதுபோல் நின்று நிதானமாக அழுத்தம் திருத்தத்துடன் பூமியில் பதிந்து இருந்த பாதங்களும் கடைந்து எடுத்த பாறாங்கற்கள் போன்ற தொடைகளும் மலையின் சிறு பட்டை தவழவிட்டது போன்ற இடுப்புக்கச்சையும் அந்த கச்சையில் பதிந்திருந்த விதவிதமான வண்ணங்களையும் வெளிச்சமாக வாரி இறைக்கும் கற்களும்,குதிகால்களை தொட்டு வளைந்து நெளிந்து இருந்த வீர கழல்களும். அந்த கழல்கள் எழுப்பிய “கலீர். கலீல் ” ஒலியும் இன்றும் என் நினைவில் இருந்து முற்றிலுமாக விலகிவிடவில்லை,
அந்த அழகிய கம்பீர முழு உருவத்தை தரிசித்து இருக்க வேண்டுமென்றால் நான் மிக வேமாக எழுந்து இருக்க வேண்டும், ஆனால் என் உடல்நிலை அதற்கு இடம் தராததாலும் தாழ்வான முன்பக்க கூரைமேல் அமைப்பை மறைத்து விட்டதாலும் என்னால் இடுப்புவரையே அக்காட்சியை காணமுடிந்தது, காலை எழுந்தவுடன் என் உறவினரிடம் கண்ட அற்புதக் காட்சியை சொன்னேன், அவர் சுடலை மாடசாமி சாரி போய் இருப்பார், அதை பார்த்து இருக்கிறீர்கள், இப்படி சாரி போவது அவ்வளவு சுலபமாக யாராலும் பார்க்க முடியாது, ஒரு ஒரு பெரும் பாக்கியம்தான் பயப்படுவதற்கு இதில் ஒன்றும் இல்லை என்றார்,
நான் அன்று நேரில் கண்ட காட்சியும் என் நண்பர்களும் பக்தர்களும் கொடுத்த சுடலை மாடன் உருவத்தை பற்றிய வர்ணனைகளையும் ஏறக்குறைய ஒன்றாகவே இருந்ததனால் நான் மிகவும் சந்தோஷப்பட நேரிட்டது
சுடலை மாடனைப்பற்றிய வரலாறுகளை. வழிபாட்டு முறைகளையும். மந்திரப்பிரயோகங்களையும் துல்லியமாக அறிந்து கொள்ளும் வழி ஏற்பட்டது, இந்த இடத்தில் மிக்க அதிர்ச்சி தரக்கூடிய விஷயத்தையும் நான் தெரிந்துகொண்டேன், அதாவது சுடலைமாடன் என்ற பெயரில் “ சுடலை ” என்று தெய்வத்தையும் “ மாடன் ” என்பது புண்ணிய ஆத்மாக்களின் ஆவிகளை குறிப்பதாக அமைந்து உள்ளது பெரும் வியப்பை தந்தது.
தமிழ் மக்களின் வாழ்வு வேளாண்மையை ஒட்டியே அமைகிறது உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை என்ற கூற்றின் உண்மையை உணர்ந்த நமது முன்னோர்கள் உழவுக்கு உறுதுணை செய்யும் மாடுகளையும் பெரும் செல்வமாக கருதினர், மாடு என்ற சொல் செல்வத்தை குறிப்பதை நாம் அறிவோம், செல்வமாக கருதிய மாட்டினை நமது முன்னோர்கள் தெய்வமாகக் கருதினர், எருமைக் கொம்பினை நட்டு அதை தெய்வமாக மக்கள் வணங்கிய விதத்தினை “முல்லைக்கனி” யில் நச்சினார்க்கினியர் உரை வாயிலாக நாம் அறிய முடிகிறது, மேலும் கறவு என்ற மீனின் கொம்பைக் கூட நட்டு தெய்வமாக வணங்கிய காட்சியை பழந்தமிழ் இலக்கியங்கள் பலவாறு குறிப்பிடகின்றன
தெய்வமாக கருதும் ஆநிறையை காப்பது தங்களது முழுமுதற்கடன் என அக்கால மன்னர்களும் மக்களும் கருதினர், பகைவர் நாட்டு பசுக்கூட்டங்களை போருக்கு முன்னர் அரசர்கள் கவர்ந்து வருவார்கள், பசுக்களை கவரச் செல்லும் வீர மறவர்கள் “வெட்சி” எனும் பூவை அணிந்து செல்வதாகவும். தங்கள் நாட்டு பசுக்களை மாற்றார் கவறாமல் தடுக்க போர்புரியும் வீரர்கள் “கரந்தை” எனும் பூவை சூடிச் செல்வதாகவும் தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார்,
கவரும்போதும் கவருவதை தடுக்கும்போதும் அங்கே பெரும்போர் உருவாகி ஆற்றலுடைய மறவர்கள் பலர் விழுப்புண் பட்டு வீர மரணம் அடைவர், இவர்களே “ தொறுமீட்டுப்பட்டான் ” என்று கல்வெட்டுக்கள் குறிப்பிடுகிறது,தொறு என்பது பசுவை குறிக்கும்சொல் ஆகும்,
இவ்வாறு வீர மரணம் எய்திய வீரர்களின் நினைவிடங்கள் “மாடன்கள் ” என நாட்டுப்புற மக்களால் அழைக்கப்பட்டது, மாடன் என்ற வார்த்தைக்கு மாடுகளை காப்பவன். மேய்ப்பவன் என பொருள் கொள்ளலாம், எனது பூர்வாசிரம கிராமத்தில் ஊரார் மாடுகளை மேய்ப்பவரை “ மாடக்கோன் ” என்று அழைப்பார்கள், மாடன் என்ற தெய்வம் மாடுகளோடு சம்பந்தப்பட்டது என்பதற்கு தொழு மாடன். காளை மாடன் என்ற பெயர்கள் சான்றாக கொள்வதோடு சில மாடன் கோவில்களில் மாட்டுத்தலையோடு மனித உருவத்தில் தளவாய் மாடசாமி என்ற தெய்வம் இருப்பதை இன்றும் அறியலாம் எனவே மாடுகளுக்காக உயிர்நீத்தவனை மாடன் என்ற அழைக்கலானார்கள்.
பண்டைய கால எகிப்தியரும். கிரேக்கர்களும் பசுக்களை தெய்வமாக போற்றி வந்தனர். மொஹஞ்சதாரோ. ஹரப்பா நாகரீக சுவடுகள் பசுவழிபாடு வரலாற்று காலத்திற்கு முன்பே இந்தியாவில் இருந்ததாக நமக்கு காட்டுகிறது, தெய்வத்தன்மை பொருந்திய பசுவை கோர்த்தன மலையை குடையாக பிடித்து கோபாலன் காப்பாறியதாகவும் அந்த ஆநிறைகளை மேய்த்து ஆனந்த நடனம் புரிந்து ஆத்மாக்களை கண்ணன் உய்வித்ததாகவும் பாகவதம் முதலிய புராணங்கள் கூறுகின்றன, வடநாட்டில் ஆநிரை காத்த கிருஷ்ணனை தெய்வமாக வழிபாடுவதை போல் தென்நாட்டில் ஆநிறை காக்க உயிர்விட்ட வீர மறவர்களை மாடன்களாக மக்கள் பலகாலமாக வழிபட்டு வருகின்றார்கள்,
இத்தகைய மாடன்கள் 20 வகையானவர்கள் உள்ளார்கள், முன்டன். சுத்தவீரன். பலவேசக்காரன். அன்னாவி. மாசானமுத்து. மாசான போற்றி. கட்டை ஏறும் பெருமாள். பன்றிமாடன். குழிதோண்டி. மாடன். கல்லடி மாடன். கௌதல மாடன். காட்டு மாடன். ஆறுகுலபோற்றி. சீவலப்பேரிமாடன். ஊசிக்காட்டு மாடன். ஆறுமுகமங்கல மாடன். தளவாய்மாடன். வண்ணார மாடன். புலமாடன். கசமாடன் ஆகிய இவர்கள் அனைவருமே பூமியில் மனிதராக பிறந்து ஆநிறை காப்பதற்காக வீரமரணம் அடைந்தவர்களே ஆவார்கள், இவர்களை சில மந்திரப்பிரயோகங்கள் மூலம் வசப்படுத்தி எதிரிகளின்மீது ஏவி அவர்களை முற்றிலுமாக கொடூரமான முறையில் அழித்து விடுகிறர்கள்,
இரண்டு மாதங்களுக்கு முன்பு தென்தமிழ்நாட்டிலிருந்து ஓர் அன்பர் என்னிடம் வந்தார், தனது ஒரே மகளுக்கு பேய் பிடித்து இருந்தபோது அந்த பேயை விரட்ட தங்கள் ஊருக்கு அருகில் உள்ள ஓர் மாந்திரீகரை அணுகியபோது இவரின் செல்வநிலையை நன்கு அறிந்து கொண்ட மாந்தரீகர் அந்த பெண்ணிடமிருந்து ஆவியை விலக்கிவிட்டு வேறு ஒரு தீய சக்தியை அப்பெண்ணிற்குள் புகுத்தி பல தொல்லைகளை கொடுக்க ஏற்பாடு செய்து விட்டான், நாளடைவில் மகள் படும் துயரம் அதிகரித்தாலும் அதை எல்லாம் மீறி தனது வீட்டின்மேல் கற்கள் வந்து விழுவதாகவும் சாப்பிடும் போது மனித கழிவுகள் வந்து விழுவதாகவும் இன்னும் பல துயரங்களை தான் அனுபவிப்பதாகவும் அந்த தெற்கத்திய அன்பர் மனத்துயர் தாளாது கண்ணீர் மல்க கூறினார்,
அவர் பிரச்சனையின் முழு தாத்பரியத்தை உணர்ந்து கொண்ட நான் அந்த மாந்தரீகன் “ பன்றி மாடன் ” என்ற மாடனை ஏவி இத்தகைய காரியங்களை செய்துகொண்டு இருக்கிறார் என்பதை புரிந்துகொண்டேன், பன்றிமாடன் அவர்கள் குடும்பத்திலிருந்து விலக்குவதற்கான பிரத்யேக பூஜைகளை செய்து பன்றி மாடனை விரட்டி அதன்பின் அந்த அன்பரை அனுப்பி வைத்தேன் இதிலிருந்து ஓர் உண்மையை உங்களிடம் பகிர்ந்துகொள்ள நான் விரும்புகிறேன், “சுடலை” என்பது “தெய்வம்” அந்த தெய்வம் மந்திரத்திற்கு கட்டுப்பட்டாலும் தீய செயல்களை செய்யாது.
ஆனால் மாடன்கள் மந்திரவாதியின் அனைத்து கட்டளைக்கும் அடிபணிந்து யாருக்கு வேண்டுமென்றாலும் எத்தகைய தீங்கும் செய்வார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்,
மாடன் வேறு. சுடலை வேறு அது மாடன்கள் வரலாறோடு முற்றிலும் இணைந்து வராது, ஆவிகள் வழிபாட்டையும் சிறு தெய்வ வழிபாட்டையும் ஒருங்கிணைத்து மக்கள் வழிபாடு செய்து வருவதனால் தெய்வத்திற்கும் ஆவிகளுக்கும் வித்தியாசம் தெரியாமல் சிறுகுழப்பம் இன்றும் நிலவி வருகிறது,
மயான பூமியில் தெய்வம் இருக்கும் என்ற நம்பிக்கை தொழ் பழங்காலம் தொட்டே மக்களிடம் இருந்து வருகிறது, பெரும் தெய்வ வழிபாட்டில் வரும் சிவனை மக்கள் அழிக்கும் தெய்வமாக கருதுகிறார்கள், இதனால் சிவனுக்கு “கொலைவன்” என்ற பெயர் உள்ளதாக கலித்தொகை பாடல் குறிப்பிடுகிறது, கொலைவனான சிவனை காடுடைய சடலை பொடி பூசியவன் என்று திருஞ்ஞான சம்பந்தரும் நடுச்சாமத்தில் மயானத்தில் சிவன் நடனம்புரிவதாக காரைக்கால் அம்மையாரும் குறிப்பிடுகின்றார்கள், சிவனை போன்றே சுடலைக்கு பிணமாலை சூடும் பெருமாள் மயானச்சுடலை. எலும்புச்சுடலை என்ற பெயர்களும் உண்டு,
இந்த இடத்தில் மிக முக்கியமான விஷயத்தை சொல்ல விரும்புகிறேன், குமரி மற்றும் நெல்லை பகுதிகளில் ஒருசில சுடலை கோவில்களில் திருவிழாவின்போது “கோமரத்தடிகள்” என்று அழைக்கப்படும் சாமிக்கொண்டாடிகள் மயானத்திற்கு சென்று எலும்புகளையும் பிணத்தின் பகுதிகளையும் எடுத்துக்கொண்டு வந்து சாமி ஆடுவது வழக்கம், இத்தகைய காட்சிகளை தென்காசி பகுதியில் உள்ள வேதம்புதூர் என்ற ஊரில் சுடலைக் கோவிலில் இன்றும் காணலாம்,சுடலைக்கும் சுடுகாட்டிற்கும் இத்தகைய தொடர்பு இருப்பதாகவும் சிவன் நள்ளிரவில் அங்கு நடனம் புரிவதாகவும் சுடலை பொடியினை சிவன் பூசிக் கொள்வதாலும். சுடலையும் சிவனும் ஒன்று ஒன்று என்ற வழக்கம் இன்றும் சில மக்களிடையே நம்பிக்கை உள்ளது, ஆனால் வரலாறு உண்மையில் வேறு விதமானது,
கஜமுகனை அழிப்பதற்கு கணபதியை உருவாக்கியதுபோல் சூரனைக் கூறுபடக்கிழிக்க வேலை படைத்ததைப் போல் சுயநல எண்ணம் கொண்ட மனித மிருகங்களை அழிக்க சுடலையை உருவாக்கி பூமிக்கு அனுப்பி வைத்தான் எல்லாம் வல்லா சிவவெருமான், பூமிக்கு வந்த சுடலை அன்னை பகவதியின் காவலனாகவும். ஏவலனாகவும் பணிபுரிந்து வருகிறார்,
கன்னியாகுமரி பகவதி அம்மன் ஆலயத்தில் பெரும் பொருள் இருப்பதை மைமூலமாக அறிந்துகொண்ட காளிப்புலையன் என்னும் மலையாள மாந்திரீகன் சுடலை. அன்னையின் பணிக்கு வெளியில் சென்று இருந்தபோது கோவில் பொருளை கொள்ளை இட்டு சென்றானாம், இதை அறிந்த சுடலை காளிப்புலையணை வதைத்து குற்றாலம் வழியாக சீவலப்பேரிக்க வந்து குடி கொண்டானாம், அங்கிருந்து பிடி மண் மூலம் தென் தமிழ் நாடு முழுக்க இன்ற சுடலை ஆண்டவன் பரந்து விரிந்து தன் ஆட்சியை நடத்தி வருகிறான்,
நல்லோர் மனதை நடுங்க செய்பவர்கள். நட்டாற்றில் கையை நழுவ விடுபவர்கள். வரவு போக்கிற்கு வழி அடைப்பவர்கள். வலிய வழக்கிட்டு மானம் கெடுப்பவர்கள். கற்பு வழி நிற்கும் கன்னியரை அழிப்பவர்கள். பொது சொத்தை கொள்ளை அடிப்பவர்கள். பதவியை பயன்படுத்தி பகட்டு வேஷம் போடுபவர்கள் இன்னும் பல ஆயிரமாயிரம் நரித்தனம் செய்யும் நயவஞ்சக மனிதர்களை கழுவேற்றி காவு கொள்வத போல் கண்ணீருடன் சுடலையிடம் முறையிடுவர்களுக்காக இன்றும் துரோகிகளை பழிதீர்த்து நல்லவர்களை காப்பாற்றி வருகிறான்,
சுடலை ஆண்டவன் சன்னதியில் பொய் சத்தியம் செய்பவர்களுக்கும் அவர்கள் குடும்பத்தின் தலைமுறையும் பூண்டற்று போய்விடும் என அசைக்க முடியாத நம்பிக்கை இன்னும் மக்களிடம் ஆழமாக வேறூன்றி உள்ளது, அப்படி பொய் சத்தியம் செய்துவிட்டு அழிந்து போன எத்தனையோ குடும்பங்களை நான் நிறைய பார்த்திருக்கிறேன், தனக்கு ஓர் துயர் நேர்ந்துவிட்டது என்று கண்ணீருடன் எந்த அப்பாவியும் முறையிட்டால் சுடலை சும்மாவிடமாட்டான் என்பது வெறும் கதையல்ல ரத்தவரிகளால் எழுதப்பட்ட சரித்திரமாக இன்றும் நிலைத்து நிற்கிறது.
எல்லா தெய்வங்களுக்கும் போலவே பிரத்யேகமான வழிபாட்டு முறைகள் சுடலைக்கும் உண்டு, இவருக்கு நடு ஜாம படைப்பு என்பது மிக விசேஷமானது ஊன் கலந்த சோறு அர்த்த ஜாம பூஜையில் படைக்கப்பட்டாலும் முட்டை தேங்காய் கலந்த சாவாப்பலி இவருக்கு உண்டு, இவருக்கு ஜாதி பேதமின்றி யார் வேண்டுமென்றாலும் பூஜை செய்யலாம், அந்தணர்கள் உட்பட அனைத்து ஜாதியிலும் பூசாரிகள் உண்டு, இவர் ஆலயத்தில் பிரம்ம சக்தி. சிவனடைந்த பெருமாள். அனைந்த அம்மை. இசக்கி. பேச்சி. முண்டன். லாட சன்னியாசி. முனியன் போன்ற தெய்வங்களும் குடிகொண்டு இருப்பார்கள்.
இதில் பிரம்ம சக்தி சுடலையின் அன்னை என்றும் அனைந்த அம்மை மனைவியாகவும். சிவனடைந்த பெருமாளை சுடலையின் குருவாகவும் மக்கள் வழிபட்டு வருகிறார்கள், பொதுவாக சுடலை நயவஞ்சகரை அழிப்பவராகவும் பொய் சத்யவாதியை வதைப்பவராகவும். தீய மந்திர சக்திகளை ஒழிப்பவராகவும் இருக்கிறார், பல எதிரிகளுக்கு ஆட்பட்டு வாழ்க்கையில் துயரப்படுபவர்கள் சுடலையை வணங்கினால் சத்ருநாசம் சந்தோஷமான வாழ்வை பெறுவார்கள், சுடலை ஏவப்படும் சக்தி ஈவு இரக்கமற்றவர் என்று மக்கள் கருதுவது மாடன்களையே குறிக்குமே அல்லாது சுடலையை குறிக்காது, காலப்போக்கில் இரண்டையும் ஒன்றாக்கியது நம் தவறே ஒழிய தெய்வங்களின் தவறல்ல,
1 comments:
முதலில் உங்களுக்கு நன்றி,
தங்களுடைய குல தெய்வ வழிபாடுகளை சரிவர புரிந்துகொள்ள முடியாமல் இருந்தவர்களுக்கு உங்கள் கட்டுரை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் துளியளவும் சந்தேகம் இல்லை. என் வாழ்வில் அந்த சுடலை ஈஸ்வரரின் சக்தியை , அனுக்கிரகத்தை பரிபூரனமாய் உணர்ந்து இருக்கிறேன்.
இங்கு ஒன்றினை உங்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன் , சுடலை ஈஸ்வரரின் கோவில்கள் தென் மாவட்டங்களில் பரவலாக இருப்பது உண்மையே ஆனால் அவரின் அனுக்கிரகத்தை , சுடலைக்கும், மாட தேவதைகளுக்கும் உள்ள வித்தியாசத்தை அறிய குறிப்பிட்ட சில ஊர்களுக்கு குறிப்பாக எங்கெல்லாம் ௨௪ பந்தி பரிவார ஸ்தலங்கள் உள்ளதோ அங்கு சென்றால் அறியலாம் . மிக முக்கியமாக கணபதி சமுத்திரம் இரட்டை சுடலை ஈஸ்வரர் கோவில், பனையூர் இரட்டை சுடலை ஈஸ்வரர் கோவில், ஆறுமுக மங்களம் சுடலை ஈஸ்வரர் கோவில் , சீவலபேரி சுடலை ஈஸ்வரர் கோவில் . இத்திருதளங்களில் எல்லாம் மாட தேவதைகள் எல்லாம் சுடலை ஈஸ்வரறிற்கு காவல் தெய்வங்களாகதான் உள்ளது.அதேபோல் மூலவர் உள்ளே சுடலை ஈஸ்வரராகவும் வெளியே சத்தியம் செய்வதற்கு உள்ள இடத்தில் சத்திய குட்டி என்ற பெயரிலும் இருப்பதையும் காணமுடியும். மாட தேவதைகள் பொழி மாடன், விராட குரு, சந்நியாசி, கசமாடன், புலமாடன், பட்டாணி மாடன், சப்பாணி மாடன், பலவேசக்காரன் என்றெல்லாம் அழைக்கப்படுகிறார்கள். சுடலைக்கும் , மாட தேவதைகளுக்கும் படையல் ஒரே மாதிரி இருந்தாலும் இரண்டிற்கும் வித்தியாசம் உண்டு, சுடலை ஈஸ்வரர்க்கு படைத்த படையலை மாட தேவதைகள் உரிமை கொள்ள முடியாது.
இங்குள்ள கோவில்களில் மற்றொரு சிறப்பு அணைத்து சுடலை ஈஸ்வரர் கோவில்களிலும் ஸ்ரீமன் நாராயண சுவாமி, பெருமாள் என்ற பெயரில் இருந்து அருள்பாலிக்கிறார் . சுடலை ஈஸ்வரரை கட்டுபடுத்த கூடிய , சுடலை ஈஸ்வரர் கட்டுபடும் தெய்வமும் அவரே. இவர்கள் இருவருக்கும் மாமன் , மருமகன் என்ற உறவு நீடிக்கிறது . கவனிக்கவும் சுடலை ஈஸ்வரர் சிவபெருமானின் படைப்பு என்பதும் முருக பெருமானிற்கு அடுத்ததாக பார்வதி தேவியின் மகனாக பிறந்தவர் என்பதும் , மாமிச படையல் விரும்பியவராக இருத்தினால் மேலே கட்டுரையில் சொல்லியது போலே கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேச்சி பாறை என்ற இடத்திற்கு வந்தார் என்பது கால காலமாக இங்குள்ள மக்களால் ஆணித்தரமாக நம்பப்படும் நிகழ்வு ஆகும். பார்வதி தேவி தன் மகனை பூமியில் காப்பதற்காகவே தன்னுடைய சக்தியால் பேச்சி அம்மன் உருவாக்கினார் , அந்த இடமே பேச்சி பாறை என்று இன்றும் வழங்கபடுகிறது. சுடலை ஈஸ்வரரின் திரு தளங்களில் எல்லாம் பேச்சி அம்மன் அவரின் அன்னையாக இருந்து இடுகாட்டு வேட்டையுளும் அவரை வழி நடத்துகிறார். கட்டுரயில் சொல்லியது போல சுடலை ஈஸ்வரரை எவர் மீதும் மந்திரத்தால் ஏவல் செய்ய முடியாது என்பது மறுக்க முடியாத உண்மையே.
ஆனால் பல்வேறு இடங்களில் சுடலை ஈஸ்வரர்க்கு உருவம் கிடையாது . மண்ணிலோ அல்லது கல்லிலோ கீழிருந்து மேல் நோக்கி செவ்வக கூம்பு வடிவில் வடிவமைத்து வழிபட்டு வருகின்றனர். இத்திருதளங்களின் உண்மையான நோக்கமே மக்கள் தங்களின் இஷ்ட தெய்வங்களை தங்கள் விருப்பம் போல் வணங்கவும், தங்களின் வாழ்கை முறையை நல் முறையில் அமைத்து கொள்வதற்கே. தவறுதலான வாழ்கை கொண்டவர்களுக்கு சுடலை என்றுமே தண்டிக்கும் தெய்வம் , நல்லோருக்கு என்றுமே பரிபூரண ஆசியை வழங்கும் தெய்வம் .
முறைப்படி தங்களின் குலதெய்வ வழிபாடுகளை செய்வோர்க்கு வாழ்வில் அத்தனை சுகங்களும் , புண்ணியமும் கிடைக்கும்.
Post a Comment