கடவுளை காட்டியவர்


  ஆதிசங்கரர் உலகத்தை மாயை கனவுபோன்ற இல்லாத பொருள் என்று அத்வைத சித்தாந்தம் பேசுகிறார் அவரைப்போன்றே ஞானமும் தவமும் கொண்டவர் ஸ்ரீராமானுஞர் அவர் உலகத்திற்கு தந்த தத்துவம் விஷிஸ்டாத்வைதம் அக்கொள்கை என்னவென்று அறிந்து கொள்ள சில வினாக்களை யோகி ஸ்ரீ ராமானந்த குருவிடம் கேட்டேன் அதற்கு அவர்....

குருஜி:   நீ கண்களால் காணும் தொடுஉணர்வால் நுகரும் இந்த உலகம் பொய்யல்ல நிஜம் என்று ராமானுஜர் கூறுகிறார்.  ராமானுஜரின் உலகம் உண்மையென்ற இந்த தத்துவம் சங்கரரின் ஒருமைவாதமான அத்வைதத்திற்கு முற்றிலும் மாறுபட்டது.  ஆதி சங்கரரின் ஒவ்வொரு கருத்தையுமே எதிர்க்கக்கூடிய கருத்துகளை ஸ்ரீ ராமானுஜர் வெளியிட்டுள்ளார்.






கேள்வி:    உலகத்தை உண்மையென்று சொல்லும், வாழ்க்கையை நிஜம் என்று கருதும் ஸ்ரீ ராமானுஜரின் திவ்யமான கருத்துகளை அறிந்து கொள்ள ஆவலோடு இருக்கிறேன். அதை முழுமையாகக் கூற வேண்டுகிறேன்?




குருஜி:   பொதுவாக இன்று நிறைய மனிதர்கள் தத்துவம், சித்தாந்தம், கொள்கைகள் என்பதெல்லாம் வேறு,  மதம் என்பது வேறு என்று கருதி வருகிறார்கள் அதாவது தத்துவத்தை சிந்தனைப் பொருளாகவும் மதத்தை வழிபாட்டுப் பொருளாகவும் கருதிக் கொண்டிருக்கிறார்கள்.  தத்துவம் என்பது சிந்தனைக்கு மட்டும் உரியது அல்ல வாழ்க்கையின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் வழிபாட்டிற்கும் உரியது மதம் வேறு தத்துவம் வேறு என்று கருதுவது அறியாமையின் வெளிப்பாடாகும் என்று மதத்தையும் தத்துவத்தையும் ஒருங்கிணைத்து மனிதன் நடந்து செல்லும் வாழ்க்கைப் பாதையாக்கியவர் முதன்முதலில் ஸ்ரீ ராமானுஜரே ஆவார். 

   அவருக்குப்பிறகு சைவ சித்தாந்திகள் இப்பணியைச்  செய்தவர்களாவார்கள்  நமது நாட்டை பொறுத்தவரையில் தத்துவம், இலக்கியம், சமயங்கள் என்று அனைத்திற்கும் மூலமாகவும் ஆதாரமாகவும் இருப்பது வேதங்களும், உபநிஷதங்களும் தான். இந்த ஒன்றினையே ஆதாரமாகக் கொண்ட போதிலும் தத்துவங்களும், சமயங்களும் தங்களுக்குள் ஒருங்கிணையாமல் இரு துருவங்களாக இருப்பது என்னவோ வாஸ்தவம்தான்.  இந்த பிரபஞ்சத்தின் இயல்பையும் அதன் மூலத்தையும் ஆராய்வது தத்துவம்.  ஆனால் இந்த ஆராய்ச்சியினால் மட்டும் மக்களின் மனம் முழு திருப்தியை அடைந்துவிட முடியாது ஆராய்ச்சியையும் தாண்டி வாழ்க்கை என்பதற்கு என்ன லட்சியம் தேவை அந்த லட்சியத்தை அடைவதற்கு என்னென்ன வழி வகைகள் உண்டு என்பதை அறிந்துகொள்ள மனிதர்கள் ஆசைபடுவார்கள்.
 
    மக்களின் வாழ்க்கை லட்சியம் இதுதான். இதை இந்த வழியில்தான் அடைய வேண்டுமென்று மதங்கள் கூறுகின்றன.  இதனால்தான் தத்துவ நிழலைத்தேடி இளைப்பாறும் மனித கூட்டத்தைவிட மதங்களின் அரவணைப்பில் பாதுகாப்போடு வாழுகின்ற மனிதக் கூட்டம் அதிகமாக இருக்கிறது. திசையறியாது திணறிக் கொண்டிருக்கும் மக்கள் தடம்பார்த்து நடைபயில மதங்கள் இறைவன் என்ற பற்றுக்கோட்டைத்தருகிறது.  ஆகவே உலகிலுள்ள அனைத்து மதங்களுமே கடவுள் கொள்கையை ஆதாரமாகக் கொண்டே எழுந்து நிற்கின்றன.  இதனாலேயே கடவுளை இரண்டாம் பட்சமாகக்கருதி அறிவையும், தெளிவையும் முதலாவதாகக் கொள்ளுகின்ற தத்துவங்கள் மதங்களுக்கு அருகிலேயே இருந்தாலும் புகைவண்டியின் வழித்தடங்கள்போல் இணையாமலே இருந்து வந்தன.

    மதங்கள் ஆதாரமாகக் கொண்டிருக்கும் கடவுள் கொள்கையும், தத்துவங்கள் கூறும் பிரம்மக்கொள்கையும் ஒன்றே என்பதை நிரூபிக்க அல்லது இணைத்துக்காட்ட பல அறிஞர்கள் முயன்றாலும் அதில் முழு வெற்றியை அடைந்தவர் ஸ்ரீ ராமானுஜரே ஆவார்.  ஆதி சங்கரரைப்போன்றே ஸ்ரீ ராமானுஜரும் பழுத்த அறிவு முதிர்ந்த ஒரு தத்துவ ஞானியே ஆவார்.  இவரும் சங்கரரைப்போன்றே நமது நாட்டின் தெற்கில் உதித்த சூரியன் ஆவார்.  சங்கரர் பிரம்மசூத்திரத்திற்கும், பகவத்கீதைக்கும் சில உபநிஷதங்களுக்கும் விளக்க உரை எழுதியது போன்றே ஸ்ரீ ராமானுஜரும் பல விளக்க உரைகளை எழுதியிருக்கிறார்.  இவர் பிரம்ம சூத்திரத்திற்கு எழுதிய விளக்க உரை ஸ்ரீபாஷ்யம் என்ற பெயரில் புகழோடு விளங்குகிறது.  இது தவிர வேதாந்த சாரம், வேதாந்த சங்கிரகம்  வேதாந்த தீபம் போன்ற அறிய நூல்களையும் படைத்துள்ளார்.

    ஆதிசங்கரர் ஸ்ரீ ராமானுஜர் அவதாரம் எடுப்பதற்கு சில நூறு ஆண்டுகளுக்கு முன்பே  தோன்றியவர் ஆவார்.  அதனால் ஆதிசங்கரரின் அனைத்து கொள்கைகளையும் நன்கு விளங்கி உள்வாங்கிக் கொள்ளும் சூழ்நிலையை காலம் ஸ்ரீ ராமானுஜருக்கு ஏற்படுத்திக்கொடுத்தது. சங்கரரும் அவரைப் பின்பற்றி வந்த மற்ற அத்வைதிகளும் கொண்ட கொள்கையை ஸ்ரீ ராமானுஜர் அறிவுப்பூர்வமாகவும் வாதத்திறமையுடனும் எதிர்த்து தனது கொள்கைகளை நிலைநாட்டிக் கொள்ள விரும்பினார்.  இதனாலேயே விஷிஸ்டாத்வைதம் என்ற தத்துவகொள்கையை உருவாக்கி மக்களிடம் பிரச்சாரம் செய்தார்.

    இக்கொள்கையே நாளடைவில் ராமானுஜ வேதாந்தம் என்று ஆகி வைஷ்ணவ சமய பிரிவாக மக்கள் இன்றுவரை பின்பற்றி வருகிறார்கள். சங்கரர் சிவபெருமானை வழிபடும் மூர்த்தியாக கொண்டிருந்த போதும்கூட அவரின் தத்துவத்தை சைவசமயம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் ஸ்ரீ ராமானுஜரின் தத்துவச்சாரமே ஸ்ரீ வைஷ்ணவம் என்ற சமயப்பிரிவாக உருவாகி இருக்கிறது என்றால் அதற்கு ஏதேனும் விசேஷமான காரணம் இருக்க வேண்டுமல்லவா.  

    அது என்ன என்று நான் சிந்தித்தபோது சுவாமி விவேகானந்தரின் நூல்வழியாக தக்க சான்று கிடைத்தது. சங்கராச்சாரியாரின் கொள்கை முழுவதும் அறிவுப்பூர்வமானது. அறிவானது அளவுக்கு அதிகமாக இருக்கும் இடத்தில் உணர்வு பூர்வம் என்ற ஈரப்பசை இல்லாத வறண்ட காய்ந்துபோன பகுதிகளாகவே இருக்கிறது.  ஸ்ரீ ராமானுஜரிடமோ அறிவு மட்டுமின்றி உணர்வும் கலந்திருப்பதினால் மக்கள் அதைக் கடைபிடிக்க சுலபமாகக் கருதி சமயப்பிரிவாகவே மாற்றிவிட்டார்கள் என்ற உண்மை புலப்பட்டது.



கேள்வி:    சங்கரரும், இராமானுஜரும் வேதங்கள் உபநிஷதங்களையே மூல ஆதாரமாகக் கருதுகிறார்கள்.  அப்படி இருக்க இருவரின் கருத்துகளும் எப்படி எதிர்எதிர் திசையை நோக்கிச்செல்லும்?




குருஜி:  இரண்டு பேரின் கருத்துகளும் மாறுபட்டு இருக்கிறதே தவிர எதிர் எதிர் திசையில் செல்வதாகக் கூறமுடியாது.  இருவரின் கருத்துக்களிலும் எவ்வகையான மாறுபாடுகள் உள்ளன என்பதை அறிந்து கொள்ள இருவரின் சிந்தனைகளையும் ஒப்பிட்டு பார்ப்பதைத்தவிர வேறுவழி கிடையாது.  இந்த ஒப்பு நோக்குதல் என்று வரும்பொழுது இரு சிந்தனைகளிலும் எது சிறந்தது? பெரியது? என்ற ஒரு சிக்கல் எழக்கூடும்.  இதனால் சில மனவருத்தங்களும் ஏற்படலாம் அதற்காக ஒப்பு நோக்குவதை கைவிட்டுவிடவும் முடியாது.  இருவரின் சிந்தனைகள் எத்தனை அளவு உயர்ந்ததோ அதே போன்றே இருவரின் கொள்கைகளிலும் சில குறைபாடுகள் உண்டு என்பதை உணர்ந்தால் இந்த உலகத்தில் எதுவும் முழுமையான நிறைவுடையது இல்லை. அதே நேரம் முற்றிலும் குறைவானது என்றும் எதுவும் இல்லை என்பது புலனாகும்.
 
  இப்போது ராமானுஜரின் கொள்கைகளை சங்கரரின் சித்தாந்தத்தோடு இணைத்துப் பார்க்க முயற்சிப்போம். இந்த உலகத்தில் எண்ணிக்கையில் அடங்காத உயிரினங்கள் இருக்கின்றன.  ஒவ்வொன்றும் இயக்கத்தாலும் உடல் அமைப்பாலும் ஒன்றிலிருந்து மாறுபட்டு அமைந்திருப்பதைக் காணுகிறோம்.  ஆனால் எல்லா படைப்புகளுக்கும் உயிர் என்பது மட்டும் பொதுத்தன்மையாக இருப்பதை நாம் அறிவோம்.  அதே நேரம் இந்த உயிர்கள் அனைத்தும் வேறுவேறானது அதாவது பல உயிர்கள் உலகில் உண்டு என்று நாம் நம்பி வருகிறோம். ஆனால் ஆதிசங்கரர் இவைகள் உடம்புகளால் வேறுபட்டு இருந்தாலும் உயிரால் ஒன்றுபட்டு இருக்கிறது. அதாவது பல உயிர்கள் என்பது கிடையாது எல்லாமே ஒரே உயிர்தான் என்கிறார்.  அந்த ஒரு உயிர் மட்டுமே உண்மை அது பலவாக தோன்றுகிறதே தவிர பல அல்ல. என்று அவர் வாதிப்பதினால் அவரையும் அவரைப்போன்ற அத்வைதிகளையும் ஏகான்ம வாதிகள் என்று அறிஞர்கள் அழைக்கிறார்கள்.
 
  ஓர் உயிர் கொள்கையை நிரூபிக்க சங்கரர் இரண்டு விதமான உதாரணங்களைத் தருகிறார்.  அவற்றுள் ஒன்று பிரதிபிம்ப வாதம் எனப்படும்.  பிரதிபிம்ப வாதம் என்றால் என்னவென்று பார்ப்போம். வானத்திலே ஒரே ஒரு நிலா மட்டுமே இருக்கிறது. பூமியில் ஆறுகள், ஏரிகள், குளம், குட்டைகள் என்று பல நீர் நிலைகள் உள்ளன. இந்த நீர்நிலைகள் அனைத்திலும் நிலாவின் பிம்பம் தெரிகிறது. அப்படி தெரிவதினால் இது ஆற்று நிலா அது கிணற்று நிலா என்று பல நிலவுகள் இல்லை. ஒரே ஒரு நிலாதான் பல சந்திரன்களாகத் தெரிகிறது.  அதே போன்றுதான் ஒரே ஒரு உயிர் பல உயிர்களாக தோற்றம் அளிக்கிறது என்கிறார்கள். இதன் பெயர்தான் பிரதிபிம்பவாதம் ஆகும்.
  
    நிலாவின் நிழல் நீரில் விழுவதுபோல பரமாத்மாவின் நிழல் உயிர்களாகத்தோன்றுகிறது என்று வாதிடும்போது இன்னொரு கேள்வி இயற்கையாக எழுகிறது. நிலாவின் நிழல் நீரில் விழுவதினால் இன்னொரு நிலா தோன்றுகிறது. அதே போன்று பரமாத்மாவின் நிழல் எதன் மேல் விழுந்து ஜீவாத்மாவாக தோற்றமளிக்கிறது என்பதே அக்கேள்வியாகும். இதற்கு அத்வைதிகள் அற்புதமான பதிலைத்தருகிறார்கள். சந்திர பிம்பத்தை பிரதிபலிக்க நீர் இருப்பதுபோல பரமாத்மாவின் பிம்பத்தை பிரதிபலிக்க அவித்தை அதாவது மாயை இருக்கிறது என்கிறார்கள்.

    நீரில் விழும் நிலாபிம்பம் நீர் அசைந்தால் அசைகிறது. அசையாவிட்டால் அசையாமல் இருக்கிறது. நீரின் தன்மைக்கு ஏற்றவாறு அதன் காட்சி அமைகிறது.  அதே போன்றே மாயையின் இயல்புக்கு ஏற்றவாறு ஆத்மாவின் இயல்புகளும் மாறுபடுகின்றன என்றும் கூறுகிறார்கள்.  நீர் எல்லாம் வற்றிவிட்டால் பிம்ப நிலாக்கள் மறைந்து நிஜமான நிலா மட்டுமே எஞ்சி நிற்கும் அவ்வாறே அவித்தையெல்லாம் மாயையெல்லாம் மறைந்துவிட்டால் நிஜமான நிலையான ஆத்மாமட்டுமே தனித்து இருக்கும் என்பதாகவும் கூறுகிறார்கள்.
  
    இனி சங்கரர் கூறும் இரண்டாவது உதாரணத்தை பார்ப்போம்.  இந்த உதாரணத்திற்கு அவச்சேதவாதம் என்று பெயர்.  இந்த வாதத்தின் விரிவாக்கத்தைக் கூறுகிறேன் கேள்.  நமது பூமி முழுவதும் காற்றானது நிரம்பி இருக்கிறது.  எங்கும் வியாபித்து இருக்கிறது ஆனாலும் இந்த காற்று பூமியில் உள்ள ஏராளமான அடைப்புகளில் தடைபட்டு அங்கங்கு பிரிந்து உள்ளது. ஒரு அறையினுள் இருக்கும் காற்று அந்த அறையின் வடிவத்திற்கு ஏற்றவாறும் ஒரு பாட்டிலுக்குள் அடைபட்டு இருக்கும் காற்று அந்தப்பாட்டிலின் உருவத்திற்கு ஏற்றவாறு பிரிந்து தனித்து இருக்கிறது. ஆனால் அறைக்குள் இருக்கும் காற்றிற்கும் அதற்கு வெளியே இருக்கும் காற்றிற்கும் பாட்டிலில் இருக்கும் காற்றிற்கும் அதற்கு புறத்தே இருக்கும் காற்றிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை.  எல்லாக்காற்றுமே ஒரே காற்றுதான்

    ஆனால் தற்காலிகமான தடுப்புகளால் அது வேறுவேறு அமைப்பில் இயங்குகிறது இதே போன்றுதான் பிரம்மமும் தற்காலிகமாகப் பலவித ஆத்மாக்கள்போல் தோற்றம் அளிக்கிறது. காற்றைப் பிரித்துக் காட்டுவது எப்படி பலவித தடைகளோ அதே போன்றதுதான் பரமாத்மாவை பல ஜீவாத்மாக்களாகப் பிரித்துக்காட்டும் மாயையின் பல நிலைகள் ஆகும்.
  
     மேலே சொன்ன பிரதிபிம்பவாதம், அவச்சேதவாதம் ஆகிய இரண்டும் ஆத்மாக்கள் அடிப்படையில் ஒன்றுதான் என்பதை விளக்க ஆதிசங்கரர் குறிப்பிடும் உதாரணங்கள் ஆகும்.  இந்த உதாரணங்களை ராமானுஜர் முற்றிலும் ஒதுக்கித்தள்ளி மறுத்துரைக்கிறார். அதோடு மட்டுமின்றி ஒன்று பலவாகத் தோன்றுவதற்கு மாயைதான் காரணம் என்பதையும் முற்றிலும் மறுக்கிறார்.  மாயையை அறியாமை என்ற பொருளில்தான் சங்கரர் பயன்படுத்துவதாக ராமானுஜர் கருதி அறியாமையான மாயை எதனை ஆதாரமாகக் கொண்டு செயல்படுகிறது என்ற கேள்வியை எழுப்பி பிரம்மத்தை நிலைக்களனாக ஆதாரமாக கொண்டு செயல்படுகிறது என்ற பதிலைச் சொன்னால் அதை ஏற்கமுடியாது என்றார்.

    ஏனென்றால் பிரம்மம் என்பது அறிவே சொரூபமானதாகும். அறிவே வடிவான பிரம்மத்திலிருந்து அறியாமை என்ற மாயை தோன்றுவதற்கு வழியே கிடையாது என்று வாதிடும் ராமானுஜர் ஆத்மாவை அடிப்படையாகக் கொண்டு மாயை செயல்படுகிறதா? என்று அடுத்த கேள்வியும் கேட்டு அதற்குச்சரியான பதிலையும் தருகிறார். ஆத்மாவை நிலைக்களனாக மாயை கொள்கிறது என்றால் ஆத்மா தோன்றுவதற்கு முன்னாலேயே மாயை தோன்றிவிடுகிறது. அதாவது பிரம்மம் மாயை வசப்பட்டதனால்தான் ஜீவாத்மாபோல் தோன்றுகிறது என்று சங்கரர் கூறுவதினால் ஆத்மாவைவிட மாயை மூத்தது ஆகிறது. தனக்கு பின்னால் உருவாகும் ஒன்றை முன்னால் தோன்றியது எப்படி ஆதாரமாகிக்கொள்ள முடியும் என்றும் அதைத்தள்ளிவிடுகிறார்.

  ஸ்ரீ ராமானுஜரின் இத்தகைய கேள்விகளுக்கு சங்கரர் வழித்தோன்றல்கள் பதில் கூறாமல் இல்லை.  ஆனால் ராமானுஜர் அந்த பதில்கள் எவற்றிற்கும் சமாதானம் அடையாமல் அவைகள் பொருந்தவே பொருந்தாது என்று மறுதலிக்கிறார்.  உயிர்களின் தோற்றத்தைப்பற்றிய கொள்கைகளை மட்டுமல்ல உலகின் தோற்றத்தைப்பற்றிய சங்கரரின் கொள்கைகளை இவ்வாறே ராமானுஜர் மறுதலித்து நிராகரித்து விடுகிறார்.



கேள்வி:    மாயையால் உலகமும் உயிர்களும் தோன்றுகின்றன என்ற சங்கரரின் சித்தாந்தத்தை மறுத்துரைக்கும் ராமானுஜர் அதற்கு மாற்றாக என்ன கருத்தை தருகிறார்?






குருஜி:    சங்கரரின் கருத்துகளை ராமானுஜர் தனது சுயவிருப்பத்தின் அடிப்படையில் மறுக்கவில்லை.  சங்கரர் இந்த கொள்கைகளை எந்த வேதத்திலும் உபநிஷதத்திலும் இருந்து பெற்றாரோ அதே வேதங்களையும் உபநிஷதங்களையும் ஆதாரமாகக் கொண்டே ராமானுஜர் மறுத்தார்.  உலகம் உயிர் இவைகளைப்பற்றி ராமானுஜர் கூறும் கருத்துக்கள் மிகவும் எளிமையானது அதே நேரம் அறிவாற்றலின் எல்லையைத் தொட்டவர்களால் மட்டுமே கூறமுடியும் என்கின்ற அளவிற்கு ஆழமானது.

   அவர் சொல்கிறார் இந்த உலகையும், உயிர்களையும் இயக்குவது இறைவனாகும் அதாவது நமது உடலை உயிரானது எப்படி இயக்குகிறதோ அதே போன்றே இறைவன் உலகத்தையும், உயிர்களையும் இயக்குகிறான். எனவே இறைவனைப் பொறுத்தமட்டில்  இந்த உயிர்களும், உலகமும் அவனது உடம்பாகிறது. இறைவன் இவைகளுக்கு உயிராக அமைகிறான் அதாவது அண்டசராசரங்கள் அனைத்தும் அவனுக்கு சரீரமாக அமைகிறது அவன் சரீரியாக இருக்கிறான். அதனால் இறைவனின் திருமேனியே உலகமாகவும் உயிராகவும் தோற்றமளிக்கிறதே தவிர இது மயக்கத்தால் அறியாமையால் ஏற்பட்டுவிட்ட மாயத்தோற்றம் அல்ல கற்பனை வடிவங்கள் அல்ல இறைவன் எந்த அளவிற்கு நிஜமானவனோ அதே அளவிற்கு இவைகளும் நிஜமானவைகள் என்ற முடிவை ஸ்ரீ ராமானுஜர் நமக்கு தருகிறார்.
  
   மேலும் நமது உடலுக்குப் பரிபூரணமான சுதந்திரம் என்பது கிடையாது. உயிரே உடலை சுதந்திரமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதைப்போல இறைவனின் உடல்களான உலகிற்கும் ஜீவன்களுக்கும் முழுமையான சுதந்திரம் கிடையாது என்று விளக்கிக் கூறும் ராமானுஜர் இதுவே உள்ளது பல அல்ல ஒன்றே ஒன்றுதான் உள்ளது என்ற உபநிஷத வாக்கியத்திற்கு விளக்கமாக தருகிறார்.  அதாவது அத்வைதிகள் கூறுவதுபோல் பிரம்மா மட்டும்தான் உள்ள பொருள் மற்ற அனைத்துமே வெறும் கற்பனைப் பொருள் என்பது இதன் விளக்கமல்ல. சுதந்திரமானது உடைய பொருள் ஒன்றே ஒன்றுதான் மற்றவைகள் அனைத்துமே சுதந்திரம் அல்லாதவைகள் தான் என்பதே மேற்கண்ட உபநிஷத வாக்கியத்தின் அர்த்தமாகும் என்கிறார்.
  
    உலகமெல்லாம் இறைவனின் திருமேனி என்று சொல்லும் பொழுது ஒரு மிகப் பெரும் சிக்கல் ராமானுஜரது கொள்கையில் ஏற்படுகிறது.  அதாவது உலகம் இறைவனின் உடல் என்றால் உலகத்திலுள்ள குறைகள் இறைவனையும் பாதிக்கும் குறையுடையவனாக ஆக்கிவிடும் என்பதுதான் அந்த சிக்கல் இறைவனின் பரிபூரண தன்மைக்கு இக்கொள்கையால் அதிகமான இடர்ப்பாடுகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.  இதை அத்வைதிகள் மிகக் கடுமையாகக் கண்டனம் செய்கிறார்கள். உலகம் என்பது உண்மையாகவே இறைவனின் தேகமாக இருக்கிறது என்றால் உலகம் ஒவ்வொரு கனமும் மாறிக்கொண்டே இருக்கிறது. உலகத்தின் இத்தகைய மாற்றம் இறைவனின் மாறாத தன்மையை எப்படி பாதிக்காமல் இருக்கும்.  இக்கொள்கையை ஏற்றுக் கொண்டால் இறைவனின் நித்தியதத்துவம் அர்த்த மற்றதாகிவிடும்.  எனவே இது ஏற்புடையது அல்ல என்கிறார்கள்.
  
    அத்வைதிகளின் கண்டனத்தைப் பார்த்து ராமானுஜர் ஒன்றும் சளைத்துவிடவில்லை. இதற்கான பதிலை ஆனித்தரமாகத்தருகிறார்.  உடம்பிற்கு மூப்பு ஏற்படுகிறது பிணி ஏற்படுகிறது ஆனால் அவை எதுவாலும் உயிரானது எந்தவித பாதிப்பையும் குறைவையும் அடைந்து விடவில்லை.  அதுமாதிரிதான் உலக இயக்கத்தின் மாறுதல்கள் இறைவனை எந்த வகையிலும் பாதிப்பது கிடையாது என்று அடித்துக்கூறுகிறார். இதோடு மட்டுமல்ல இன்னொரு உதாரணத்தையும் அவர் தருகிறார் ஒரு அரசன் இருக்கிறான் என்று வைத்துக் கொண்டால் அவனுக்கும் மக்களுக்கும் தொடர்பு என்பது இல்லாமல் இருக்காது.  அதே நேரம் மக்களின் சுக துக்கங்கள் அரசனை எந்த வகையிலும் பாதிப்படையச்செய்யாது அதே போன்றுதான் உலகமாற்றம் இறைவனை பாதிப்பதில்லை என்று வாதிடுகிறார்.
  
    சொல்லுவது ராமானுஜராக இருக்கட்டும் கடவுளாகக்கூடவே இருக்கட்டும் ஏற்புடைய சொல் அது அல்ல என்று தோன்றினால் அதை  விமர்சனம் செய்வது எந்த வகையிலும் தர்மத்திற்கு முரணாக அமையாது என்று சனாதனதர்மம் மனித சிந்தனைக்கு முழு சுதந்திரத்தை தந்திருப்பதினால் ராமானுஜரின் இந்தக்கருத்தை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றே தோன்றுகிறது.
   
   ஆரோக்கியமான உடலின் துணையில்லாமல் செயற்கரிய எந்த செயலையும் உயிரானது  தனித்துச்செய்துவிட முடியாது.  உடல் நோயாலும், மற்றும் பல பிரச்சினைகளாலும் தாக்கப் படும்போது உயிர் தெளிவுடனும் புத்துணர்ச்சியுடனும் இருக்குமென்று எப்படிக் கூற இயலும் அதனால் உடம்பின் மாறுபாடு உயிரைப் பாதிக்காது என்ற ராமானுஜரின் கொள்கை ஏற்புடையதாக அமையாது. அடுத்ததாக மக்களின் சுகதுக்கங்கள் அரசனை பாதிக்காது என்பதையும் ஏற்றுக்கொள்ளத் தக்கதாக இல்லை.  வறுமையின் பிடியில் மக்கள் அகப்பட்டுத்தவித்தாலோ வன்முறை கலாச்சாரத்தில் ஊறித்திளைத்தாலோ மக்களின் செயல்பாடுகள் அரசனை நிச்சயம் பாதிக்கும். எனவே ராமானுஜரின் இந்த உதாரணத்தையும் அறிவு பூர்வமாகவும் அனுபவபூர்வமாகவும் ஏற்றுக் கொள்ள முடியாது.
  
     மேலும் இறைவனின் திருமேனியாக உலகமும் உயிர்களும் திகழ்கிறது என்பதை வாதத்திற்காக ஒத்துக்கொண்டால் உடல் இல்லாமல் உயிரோ உயிர் இல்லாமல் உடலோ தனித்தனியாக இயங்க முடியாது ஒன்று இயங்க மற்றதின் துணை கண்டிப்பாக தேவை என்பதினால் இறைவன் இல்லாமல் உயிர்களோ உயிர்கள் இல்லாமல் இறைவனோ  இல்லை என்பதான முடிவுதான் வருகிறது இதனடிப்படையில் இறைவன் மட்டுமே சுதந்திரமானவன் என்ற ராமானுஜரின் கோட்பாடு அடிபட்டு போகிறது.  எப்படியென்றால் இறைவனின் உடலான உலகமும் உயிர்களும் இல்லாது கடவுள் இல்லை என்ற நிலை வரும்போது கடவுள் இப்படி சர்வசுதந்திரம் உள்ளவராக இருக்க முடியும் எனவே ராமானுஜரின் கடவுள் சுதந்திர கொள்கையும் பல முரண்பாடுகளைக் கொண்டதாகவே இருக்கிறது.


கேள்வி:    ஆத்மா என்பது பரமாத்மாவின் சிறு பகுதி அதாவது ஆத்மாக்கள் இறைவனின் உடல் இறைவன் அதை இயக்கும் உயிர்  ஆத்மா,  ஜனங்கள் இறைவன், ஜனங்களை ஆளும் அரசன் என்ற இத்தகைய   உதாரணங்களால் இறைவனுக்கும் உலகிற்கும் உடைய தொடர்புகளை ராமானுஜர் விளக்குவது கேட்பதற்கு நன்றாகவே இருக்கிறது. ஆனால் ஆழ்ந்து சிந்தித்து பார்க்கும்போது இந்த உதாரணங்கள் ஆத்மாவும்,  உலகம் வேறு இறைவன் என்பது வேறு என்ற கருத்தே வலுவாக தோன்றுகிறது.  ராமானுஜர் தமது வாதங்களுக்கெல்லாம் மூலம் வேதங்களும்,  உபநிஷதங்களும் என்று தான் சொல்கிறார்.  அவர் ஆதாரமாகச்சொல்லும் உபநிஷதங்கள் உலகமும் உயிர்களும் ஒன்றே எனக்கருத்தைக் கொள்ளும்  தத்வமசி  என்ற வார்த்தை ஆனித்தரமாகச் சொல்லப்பட்டிருக்கிறதே அந்த வார்த்தைக்கு ராமானுஜர் என்ன  பதிலைச் சொல்லுகிறார்?


குருஜி:    உபநிஷதங்கள் கூறும்  தத்வமசி என்ற வார்த்தைக்கு  நீயே அது அல்லது  அதுவே நீ  என்ற அர்த்தத்தை நான் பலமுறை பல இடங்களில் சொல்லியிருக்கிறேன். அதனால் மட்டுமல்ல அந்த வார்த்தையின் உண்மைபொருளே அதுதான்.  அத்வைதிகளுக்கு இந்த வார்த்தையின் பொருளை அப்படியே ஏற்றுக்கொள்வது எந்த சிக்கலும் இல்லை.  காரணம் அவர்கள் ஒன்றாகிய பரமாத்மா மாயையால் கட்டுண்ட நிலையில் ஜீவாத்மாவாக தோற்றமளிக்கிறது. எனவே எல்லாம் ஒன்றுதான்  என்று சுலபமாகக் கூறிவிட முடியும்.  ஆனால் ராமானுஜரின் கொள்கையின்படி இந்தவாதத்தை அவர் கூறிவிட முடியாது. எனவே மிக  முக்கியத்துவம் வாய்ந்த இந்த உபநிஷத வாக்கியத்திற்கு அவர் என்ன பொருளைச் சொல்கிறார் என்பதை உன்னிப்பாகக்கவனிக்க வேண்டும்.
   
  தத்வமசி என்ற வார்த்தையால் வரும் துவம் என்ற பதத்திற்கு ராமானுஜர் நேரடியாக நீ என்ற அர்த்தத்தைக் கொள்ளாமல் உன்னுள்ளே இருக்கும் இறைவன் என்ற பொருளைக் கொள்ளுகிறார். அதாவது ஜீவன்களுக்குள்ளே அந்தர்யாமியாய் இருக்கும் இறைவனையே துவம் என்ற பதம் சுட்டிக்காட்டுவதாகவும் ஆனால் தத்வமசி என்பதற்கு உன்னுள்ளே உறைந்திருக்கும் பரம் பொருள் ஒன்றுதான் என்பதுதான் உண்மையான அர்த்தமாகும் என்று விளக்கம் தருகிறார்.
 
   இது மட்டுமல்ல ஸ்ரீ ராமானுஜரின் கொள்கைகளை வேறு நோக்கிலும் நாம் பார்க்கவேண்டும். அதாவது இறைவனின் உடலான உலகம் மற்றும் உயிர்களின் மாற்றம் அவனை எந்த வகையிலும் பாதிக்காது என்பதை பக்திமார்க்கத்தின் வழியாகச் சிந்தித்து பார்க்கும்பொழுது ஒரு நல்ல முடிவு கிடைக்கிறது.  உலகமும் உயிர்களும் மாறுகின்றன குறைவுடையதாகவும் நிறைவுடையதாகவும் மாறிமாறி தோன்றுகின்றன. இதனால் இறைவனின் தன்மைக்கு குறைவு ஏற்படுகிறது என்ற கருத்தை சற்றுதள்ளி வைத்துவிட்டு இந்த மாறுபாடெல்லாம் இறைவனால் அவனது உடம்பான உயிர்களுக்கும் உலகத்திற்கும் கொடுக்கப்படுகிறது.

    அது அவன் திருவிளையாடல் என்ற கருத்தில் பார்க்க ஆரம்பித்தோம் என்றால் ராமானுஜரின் கொள்கை முற்றிலும் ஏற்றுக்கொள்ள தக்கது என்பது புலனாகும். இறைவனுக்கும் ஆத்மாவிற்கும் உள்ள தொடர்பை தேருக்கும் அதன் சக்கரத்திற்கும் உள்ள தொடர்போடு ஒப்பிட்டு பார்த்தால் மிக நன்றாகப்புரியும். தேரும் சக்கரமும் வேறுவேறா? என்றால் அதற்கு ஆம் என்ற பதிலும் சக்கரம் தேரினுடைய ஒரு பகுதிதானே அதனால் சக்கரமும் தேரும் ஒன்றுதானே என்றால் அதற்கும் ஆம் என்ற பதிலுமே கிடைக்கும்.

    சக்கரம் இல்லாத தேர் பயனற்றது. அதே போன்றே தேரில் இல்லாத சக்கரமும் பயனற்றதே! இரண்டும் வேறுவேறாக இருந்தாலும் ஒன்றாக இணைந்திருக்கும் போதுதான் பயன் என்பது கிடைக்கும்.  அதே நேரம் இரண்டும் ஒன்றையொன்று சார்ந்து இருப்பதினால்  தேருக்கோ சக்கரத்திற்கோ தனியான பாதிப்போ குறைபாடுகளோ இல்லை. அதே போன்றுதான் ஆத்மாக்களும் இறைவனும் ஒருவரையொருவர் சார்ந்திருப்பதால் எந்த குறையும் ஏற்பட்டுவிடப் போவதில்லை.  ஆனாலும் இரண்டும் சேர்ந்தே இருந்தாலும் வேறு வேறுதான் என்ற உண்மை புலனாகும்.  இதை இன்னும் நன்றாகப்புரிந்து கொள்ள வேண்டுமென்றால் ராமானுஜர்  ஆத்மாக்களைப்பற்றியும் அதன் இயல்புகளைப் பற்றியும் கூறுவதை அறிந்துகொள்ள வேண்டும்.



கேள்வி:   ராமானுஜர் ஆத்மாக்களின் இயல்பை பொறுத்து அவைகளை மூன்று விதமாக பிரிப்பதாகக் கேள்விபட்டிருக்கிறேன்.  ஆத்மாவின் அந்த மூன்று தன்மை என்ன?






குருஜி:    ஆத்மாக்கள் அத்வைதிகள் குறிப்பிடுவது போல் ஒன்றுஅல்ல பலவாகும்.  ஆனால் அத்தனை ஆத்மாக்களும் அழியாத தன்மையுடைய நித்திய பொருட்களாகும் என்பதே ராமானுஜரின் கொள்கை ஆனால் வேதங்களில் ஆத்மா ஒன்றுதான் என்ற வாக்கியம் பல இடங்களில் வருகிறதே அதை எப்படி தவறுதலானது என்று சொல்ல முடியும்.  ஆத்மா ஒன்று என்றால் ராமானுஜரின் கொள்கையை கைவிடவேண்டும்.  பல என்றால் வேதத்தைக் கைவிடவேண்டும்.

   இவற்றில் எதைக் கைவிடுவது இரண்டுமே முக்கிய மானவைகளாகவும் உண்மையானவைகளாகவும் தோன்றுகிறதே என்ற கலக்கமும் மயக்கமும் பலருக்கு ஏற்படுவது உண்டு.  இப்படிப்பட்ட மயக்கம் மக்களுக்கு ஏற்படும் என்பதை நன்கு அறிந்த ஸ்ரீ ராமானுஜர் தக்க பதிலை நமக்குத்தருகிறார். ஆத்மாக்கள் ஒன்றுதான் என்று வேதம் கூறுவது எண்ணிக்கையின் அடிப்படையில் அல்ல.  ஆத்மாக்கள் அனைத்தும் அறிவை இயல்பாகக் கொண்டது என்பதனால் அறிவின் இயல்பால் அவையாவும் ஒன்றே என்பதே வேத வாக்கியத்தின் உண்மைப்பொருளாகும் என்கிறார். 

  ஆத்மாக்களை அதன் இயல்பை அடிப்படையாகக் கொண்டு மூன்று வகைகளாக பிரிக்கிறார். முதல் வகை ஆத்மாக்கள்  எப்போதுமே முக்தி நிலையில் இருப்பவைகள் அதாவது அந்த ஆத்மாக்கள் ஆரம்பகாலத்திலிருந்தே கட்டுண்ட நிலையில் இல்லாமல் சுதந்திர நிலையில் உள்ளவை என்றும் இரண்டாவது வகை ஆத்மாக்கள் கட்டுண்ட நிலையிலிருந்து முக்தி நிலையை நோக்கி நகர்ந்தவை என்றும் மூன்றாவது வகை ஆத்மாக்கள் எப்பொழுதும் கட்டுண்ட நிலையிலேயே இருப்பவைகள் என்றும் வகைபடுத்திக்கூறுகிறார்.   இவர் கூறுவதுபோலதான் சைவ சித்தாந்தமும் ஜைன தத்துவமும் ஆத்மாவின் நிலைகளை பற்றி கூறுகிறது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
 
  ஸ்ரீ ராமானுஜர் ஆத்மாவின் இத்தகைய தர வரிசையை அதாவது குண இயல்பை தர்மபூத ஞானம் என்ற பெயரால் அழைக்கிறார்.  தர்மபூத ஞானத்தில் ஆத்மாக்களின் குண இயல்பு ஞானமுடமை ஆகும்.  இறைவனுடைய ஞானம் என்பதும் தர்மபூத ஞானத்திற்கு உட்பட்டதே ஆகும்.  ஆனால் இறைவனின் ஞானமானது செயல்படுவதற்கு புறக்கருவிகள் எதுவும் தேவையில்லை. ஜீவன்களில் ஞானம் புறக்கருவிகளான புலன்களை அடிப்படையாகக் கொண்டே தொழில் செய்ய முடியும். 

 மேலும் ஜீவன்களில் படிந்துள்ள தர்மபூதஞானம் இன்பம், துன்பம், விருப்பு, வெறுப்பு ஆகிய உணர்வுகளாகவும் வெளிப்படுகிறது. இந்த உணர்வுகள் தான் பரிசுத்தமான ஜீவஞானத்தை குறைவுடையதாக்கி கர்மத்திற்குள் தள்ளுகிறது. இதுதான் பிறவித்தளை என்றும் ஜனனமரண துன்பமென்றும் அழைக்கப்படுகிறது.  ஆதியில் ஜீவன்களில் பதிந்துள்ள ஞானமுடைமையை உணர்ந்து தளைகளை அறுத்தெறிந்து ஸ்ரீமன் நாராயணன் வீற்றிருக்கும் ஸ்ரீ வைகுண்டத்தை அடைவதே ஜீவன்களின் லட்சியமாகவும் இறுதி நோக்கமாகவும் இருக்க வேண்டும் என்கிறார் ராமானுஜர் வீடுபேறு என்னும் இறுதிநிலையை ஜீவன்கள் அடைவதற்கு கர்மயோகம், ஞானயோகம், பக்தியோகம் ஆகிய மூன்றுயோக முறைகள் உதவி செய்யும் என்கிறார்.

    இந்த யோகமார்க்கத்தை பற்றிய கருத்துக்களிலும் சங்கரரும் ராமானுஜரும் வேறுபடுகிறார்கள் என்பது சுவையான செய்தியாகும்.  சங்கரர் கர்மகாண்டத்தையும் ஞானகாண்டத்தையும் ஒரு ஜீவன் ஒரே நேரத்தில் கடைப்பிடிக்க முடியாதென்றும் எதாவது ஒரு காண்டத்தை கடைப்பிடித்தால் போதுமென்றும் சொல்லுகிறார். ராமானுஜரோ இரண்டுமே ஒரு ஜீவன் ஒரே நேரத்தில் கடைப்பிடித்தே ஆகவேண்டியது ஆகும்.  காரணம் அறிவில்லாத செயலோ செயலில்லாத அறிவோ இயங்காமைக்கு சமமாகும் என்கிறார். அப்பொழுதுதான் பக்திமார்க்கம் என்பது பூரண நிலையை எட்டும் என்று அறுதியிட்டு வலியுறுத்துகிறார்.
  
    பக்தியை பற்றி பேசுகின்ற ராமானுஜர் பிரபக்தி என்ற புதிய விஷயம் ஒன்றையும் சொல்லுகிறார்.  அதாவது பக்தியானது படிப்படியாக முன்னேறிதான் இறைவனின் திருவடி நிழலை அடைய வழி செய்யும் பிரபக்தியோ தோன்றிய ஷனத்திலேயே இறைவனின் கமல பாதங்களில் கொண்டு சேர்த்துவிடும் என்கிறார். இதை எளிமையாக உதாரணத்தோடுச் சொல்ல வேண்டுமென்றால் புத்தருக்கு ஏற்பட்ட திடீர் ஞானத்தோடு ஒப்பிட்டுக்கூறலாம்.  பக்தி விஷயத்தில் மூடத்தனமான குருட்டு பக்தியை ராமானுஜர் ஏற்றுக்கொள்ளவில்லை.

   செயல்புரிதலையும் ஞானத்தை தேடுதலையும் பக்திக்கு துணையாக்கிக் கொண்டு ஒவ்வொரு ஜீவனும் தனக்கு விதிக்கப்பட்ட சுயதர்மத்தை சிரத்தைவுடன் செய்து வரவேண்டும். பலனை எதிர்பாராமல் எல்லாமே ஈஸ்வரனுக்கு அர்ப்பணம் செய்வது இறைவனுக்கு மிகவும் பிடித்தமானது.  உலக இன்பதுன்பங்களில் கிடந்து உழன்றாலும் நாராயணன் ஒருவனையே மனதில் தியானித்து உபாசித்து இடையறாது வணங்கி வரவேண்டும்.  இத்தகைய வழிபாட்டு முறை முற்றிலுமாக வெற்றி பெற்றுவிட்டால் இறைவனது திருக்காட்சியை கண்ணாரக் கண்டு களிக்கக்கூடிய பெருநிலை வந்தமையும்.  இதுவே வீடுபேறு, முக்தி, வைகுண்டபிராப்தி என்று கொள்ளவேண்டும் என்பதே ராமானுஜரின் வேண்டுகோள் ஆகும்.
  
    ஸ்ரீ ராமானுஜரின் இத்தகைய கொள்கைகளை அலசி ஆராய்ந்து பார்க்கும் பொழுது  சில உண்மைகள் நமக்குத்தெரிகிறது. இறைவனும் உயிர்களும் ஒன்றல்ல அதே நேரம் உயிர்களை விட்டு இறைவன் தூரத்திலும் இல்லை உயிர்களின் அருகாமையிலேயே ஏன் உயிர்களுக்கு உள்ளேயே அவன் உறைந்திருக்கிறார் என்பது புலனாகும். இந்த உறவு மரத்திற்கும் பழத்திற்கும் உள்ள உறவுபோல் அமைந்தது அல்ல பழத்திற்கும் சுவைக்கும் உள்ள உறவுபோல் அமைந்ததே ஆகும் என்பது நன்கு விளங்கும்.


கேள்வி:   ராமானுஜர் அற்புதமான சித்தாந்தத்தை உருவாக்கி வைத்திருப்பது மிகவும் நன்றாக தெரிகிறது. தத்துவத்தையும் மனிதனின் முக்தியையும் ஒன்றாக இணைத்ததினாலேயே ராமானுஜரின் விஸிஷ்டாத்வைதம் சங்கரரின் அத்வைத  கொள்கைபோல் தனித்து நிற்காமல் ஒரு மதமாக ஸ்ரீ வைஷ்ணவம்  என்ற பெயரில் மக்கள் கடைப்பிடிக்கும் மார்க்கமாக அமைந்திருக்கிறது.  இத்தகைய மகாயோகியை பெற்றது நமது நாடு செய்த தவப்பயனே ஆகும்.  ஸ்ரீ ராமானுஜரின் சிந்தனைகளைத்தெரிந்து கொள்ள விரும்பியது போலவே அவரின் வாழ்க்கையையும் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.


குருஜி:  ஆதிசங்கரருக்கு இறைவன் கணக்கிட்டு அளந்துவிட முடியாத அளவிற்கு நிறைந்த அறிவை கொடுத்தான் ஆனால் அவரின் ஆயுளை குறைத்துவிட்டான். இதன் காரணமாகவோ என்னவோ ராமானுஜருக்கு பரந்த அறிவைமட்டுமல்ல பரந்த மனதையும் மிக நீண்ட ஆயுளையும் ஆண்டவன் கொடுத்தான்.  அதாவது கி.பி.1017-ம் வருடத்தில் பிறந்த அவர் கி.பி.1137-ம் வருடம் வரையில் அதாவது 120 வயது வரையில் வாழ்வாங்கு வாழ்ந்து நமது மதத்திற்கும் நமது சமூகத்திற்கும் பெரும் தொண்டு ஆற்றியுள்ளார்.

    இவர் தமிழ்நாட்டிலுள்ள ஸ்ரீ பெரும்புதூர் என்னும் ஊரில் ஆதிகேசவாச்சாரியார் காந்திமதி அம்மையார் தம்பதியினருக்கு  மகனாக பிறந்தார். இவரின் இல்லறத் துணைவியாக வந்த அம்மையார் இல்லறத்தின் வாசல்படியை மிதிக்கும் முன்பே பிறிந்து விட்டதினால் முற்றிலுமான துறவு வாழ்க்கையை மேற்கொண்டார்.  இளமையில் திருபுட்குளியில் யாதவப்பிரகாசர் என்பவரிடம் கல்வி பயின்றார். வேதாந்த தத்துவங்களில் குருவிற்கும் சீடனுக்கும் கருத்து வேற்றுமை ஏற்பட்டதினால் குருவை விட்டு பிரிய வேண்டிய நிலை ராமானுஜருக்கு ஏற்பட்டது.
   
    காஞ்சிபுரத்தில் இவர் இருந்தபொழுது ஸ்ரீ ரங்கத்தில் இருந்து வந்த ஆளவந்தார் இவரை முதல்வன் என்ற சிறப்பு பட்டப் பெயரால் அழைத்தார். அதே நேரம் ஸ்ரீ ரங்கத்தை சேர்ந்த பெரியநம்பிகள் இவரை தனது சீடராக ஏற்று சந்நியாசம் வழங்கினார். ராமானுஜர் திருக்கோட்டியூர் நம்பி என்பவரிடம் வேதங்களின் மறை பொருளை கற்றுக் கொண்டார். ராமானுஜரை கூரத்தாழ்வார், முதலியாண்டார், எம்பார் முதலிய ஆன்மீகப் பெரியவர்கள் எம்பெருமானார்  என்று சிறப்பித்து அழைத்தனர்.
 
    ராமானுஜர் காஷ்மீரத்திலுள்ள சாரதா பீடம் வரை பாத யாத்திரை செய்துள்ளார்.  இவர் வேங்கடத்தில் அமர்ந்து அன்பர்களின் சங்கடங்களை போக்கும் வெங்கடேசனுக்கு சங்கு, சக்கரங்களை சமர்பித்தார்.  சிதம்பரத்திலிருந்த கோவிந்தராஜ பெருமாளை திருமலையில் ஸ்தாபிதம் செய்தார்.
 
  ராமானுஜர் மிகப்பெரும் ஆன்மீக ஞானி மட்டுமல்ல இன்றைய உண்மையான சமூக சீர்திருத்தவாதிகளுக்கு முன்னுதாரனமாக திகழும் சமூக போராளியும் ஆவார்.  இவர் தமது குருவான திருக்கோட்டி நம்பியுடன் பெற்ற வைகுண்ட வரமருளும் மூல மந்திரத்தை குருவின் கட்டளையும் மீறி திருக்கோட்டியூர் கோவிலின் ராஜகோபுரத்தில் ஏறி நின்று மக்கள் அனைவரையும் கூவி அழைத்து தான் பெற்ற மகாமந்திரத்தை ஜாதிபேதமில்லாமல் எல்லோருக்கும் உபதேசித்தார் அனைவரையும் வைகுண்டத்திற்கு அனுப்பும் பெரும்பேறு கிடைத்தால் தான் ஒருவன் மட்டும் குருவின் கட்டளையை மீறிய பாவத்திற்காக நரகம் செல்லவும் தயாராக இருப்பதாக சொன்னார்.
  
   உபதேச மந்திரத்தை மட்டும் அவர் பொதுமக்களுக்கு வழங்கவில்லை.  குல ஆச்சாரம் என்ற பெயரில் பல மக்களை கீழ்ஜாதி என்று ஒதுக்கி வைத்து இறைவனின் ஆலயத்திற்குள் கூட நுழையக்கூடாது என்று மூடத்தனமான கொள்கை பேயாட்டம் போட்ட அந்த காலத்திலேயே சேரியிலிருந்து வறிய ஜனங்களை ஸ்ரீ ரங்கம், திருநாராயணபுரம் ஆகிய ஆலயங்களுக்குள் பிரவேசிக்க வழிவகை செய்தார்.  அது மட்டுமல்ல அந்த மக்களுக்கு திருகுலத்தார் என்று பெயரும் இட்டு வேதக்கல்வி அவர்களுக்கும் உரியது என்று வேதங்களை ஜாதிகளின் மாய்மாலத்திலிருந்து விடுவித்தார். 

      இன்றைய புரட்சிக்காரர்கள் அனைவருக்குமே ஸ்ரீ ராமனுஜர் பிதாமகர் என்றால் அது மிகைப்படுத்தப்பட்ட வாதம் அல்ல. ராமானுஜர் இன்றைய பெரும்பாலான சந்நியாசிகளைப் போல் வாய் வேதாந்தம் பேசி வாழ்ந்தவர் அல்லர் தான் கொண்ட கொள்கையில் இரும்புக்கரம் கொண்டு பற்றி நிற்கும் உறுதியான திறமும் எடுத்த காரியத்தை அடுத்தடுத்து பிரச்சினைகள், சோதனைகள் எதிர்பட்டாலும் தொடுத்து முடிப்பதில் காட்டிய உரமும் இன்றைய துறவிகளிடம்  சிறிதளவேனும் இருந்தால் நமது சமூகம் இத்தனை கேடுகளை இன்று அடைந்திருக்காது.

    உபதேசங்கள் வழங்குவதும் ஆசிர்வாதம் செய்வதுமே துறவிகளின் பணியென நினைத்துக்கொண்டு ஆஸ்ரமங்களின் பிரம்மாண்டமான கதவுகளை மூடி வைத்துக்கொண்டு தியானிப்பவர்கள்போல் தூங்கிக்கொண்டு இருக்கும் துறவி பெருமக்கள் ராமானுஜர் காட்டிய சமூக சீர்திருத்த போர் வேகத்தை, போர்க்கோலத்தை தாங்களும் கடைப்பிடிக்க எழுந்து வரவேண்டும்.  ராமானுஜர் காட்டிய செயல்முறை வேதாந்தத்தை இன்றைய துறவிகள் புறக்கணித்து தங்களது மனம் போன போக்கில் வாழ முயற்சித்தால் காலச்சுழற்சியில் காணாமல் போய் விடுவார்கள் என்பதை உணர வேண்டும்.

     இல்லறத்தார்கள் கொடுக்கும் நன்கொடைகள் துறவறத்தாரின் தொப்பைகளை வளர்க்கும் ஊட்டசத்து அல்ல.  அது தங்களால் செய்ய முடியாத நல்ல காரியத்தை துறவிமார்கள் சமூகத்திற்குச் செய்வார்கள் என்ற நம்பிக்கையில் மக்கள் கொடுப்பதாகும்.  அப்படித்தரும் நன்கொடைகளை சமூகப்பணிக்குச் செலவிடாமல் சுயதேவைகளுக்குப் பயன்படுத்திக் கொண்டால் நம்பிக்கைத் துரோகம் செய்த பெரும்பாவம் இன்றைய துறவியர் பரம்பரைக்கு வந்து சேரும்.


கேள்வி:    ராமானுஜர் தாம் வாழ்ந்த காலத்திலேயே உயிர்களெல்லாம் இறைவனின் வடிவம், சமம் என்ற சித்தாந்தத்தை நடைமுறைப் படுத்தியிருப்பதை அறியும் பொழுது மனது சந்தோஷம் அடைகிறது. அவரின் காலத்திற்குப் பின்பும் அச்சீரிய பணி தொடர்ந்ததா?





 குருஜி:    அவரின் காலத்திற்கு பிறகு அந்தபணிகள் முழுமையாக நடைமுறை படுத்தப்பட்டிருந்தால் இன்றைய சமூகம் ஏற்ற தாழ்வற்ற நல்லதொரு சமூகமாக மாறியிருக்கும் அல்லவா.  அதனால் அவரின் காலத்திற்குப் பிறகு அத்தகைய பணிகளின் வேகம் குறைந்து விட்டது என்றே சொல்லவேண்டும்.  இதுமட்டுமல்ல ராமானுஜரின் காலத்திற்கு பிறகு நமது தெற்கு பகுதியை   ஸ்ரீ வைஷ்ணவம்  இரண்டு கருத்து முறைகளாக அதாவது வடகலை என்றும் தென்கலை என்றும் பிரிவு பட்டது.  இந்த இரண்டு பிரிவுகளுக்கிடையிலேயே பல கருத்து முரண்பாடுகள் தோன்ற ஆரம்பித்தன.  இந்த முரண்பாடுகள் வைஷ்ணவத்தின் வளர்ச்சிக்கு ஆக்கபூர்வமாக உதவி புரிந்ததா இல்லையா என்று அறுதியிட்டுக் கூறமுடியாது. பிள்ளை லோகாச்சாரியார், வேதாந்த தேசிகர் ஆகிய இருவரின் காலத்திலும் இந்த கருத்து முரண்பாடுகள் முற்றிய நிலை அடைந்து வைஷ்ணவ மதத்திற்குள் பூசல்களையும், பிளவுகளையும் ஏற்படுத்தி தமிழகத்தை பொறுத்த வரையில் வைஷ்ணவத்தின் வளர்ச்சிக்குப் பெரும் முட்டுக்கட்டைகளாக நிலைபெற்றுவிட்டது என்றே சொல்லவேண்டும்.
  
     இருந்தாலும் வைஷ்ணவத்திற்குள் ஏற்பட்ட பிளவுகள் வட நாட்டை பொறுத்தவரை நன்மை தருவதாகவே அமைந்துவிட்டது.  எப்படியென்றால் இடைக்காலத்தில் வட இந்தியாவில் இஸ்லாமிய மதத்தை சார்ந்த அரசர்கள் இந்து மக்களை பயமுறுத்தியும் ஆசைகாட்டியும் தங்களது மதத்தை ஏற்றுக்கொள்ளும்படிச் செய்து வந்தனர்.  இத்தகைய சூழலில் பிளவுபட்ட வைஷ்ணவத்தில் துடிப்புமிக்க பல குருமார்கள் தோன்றினார்கள்.
 
   இத்தகைய குருமார்கள் ராமானுஜரின் சமூக சீர்திருத்த கொள்கைகளை முன்வைத்து இஸ்லாத்தின் பக்கம் இந்தியர்கள் முற்றிலுமாக சாய்ந்துவிடாமல் தடுக்க பெரும் போராட்டங்களை மேற்கொண்டனர்.  மெலிந்த  மதத்தை இத்தகைய போராட்டங்களினால் மீண்டும் உயிர்த்துடிப்பு உடையதாகவும் மலர்ச்சியுடையதாகவும் ஆக்கினார்கள் என்றே சொல்லவேண்டும்.
 
    ராமானுஜரை முற்றிலுமாக பின்பற்றிய ஸ்ரீ ராமானந்தர் என்னும்யோகி வடக்கே சென்று வைஷ்ணவ இயக்கத்தை துவக்கி அரும்பணியாற்றினார்.  பஞ்சாபிலும் வங்காளத்திலும் உருவான வைஷ்ணவ எழுச்சிக்கு ஸ்ரீ ராமானந்தரே ஊக்குவிக்கும் கருவியாக இருந்தார்.

    ஸ்ரீ ராமானந்தரை வடஇந்தியாவிலுள்ள ஆன்மீக நேசர்கள் ராமராஜியத்தை பூமிக்கு கொண்டுவந்தவர் என்று தலைமேல் வைத்துக் கொண்டாடுகிறார்கள். நல்ல முடியாட்சி, ஒரே தாரத்தை உடைய சிறந்த இல்லறம், ஒரே கடவுளை வழிபடுதல் என்று மூன்று முத்தானக் கொள்கைகளை மக்களிடம் வைத்த ஸ்ரீ ராமானந்தர் அரசியல், சமூகம், சமயம் ஆகிய மூன்று துறைகளிலும் அரும்பணியாற்றினார்.
  
    ஸ்ரீ ராமானந்தரையே மகாத்மா காந்தி தன்னுடைய முன்னோடியாக ஏற்றுக் கொண்டார். மேலும் இவரின் வழித்தோன்றல்களாக கபீர்தாஸ், துளசிதாஸ், தாது ஆகிய முப்பெரும் ஆத்மஞானிகள் கருதப்படுகிறார்கள்.  1398-ல் பிறந்த கபிர்தாஸ் இந்து, முஸ்லீம் ஒற்றுமைக்காக செயலாலும், சிந்தனையாலும் பெருந்தொண்டு ஆற்றினார்.  வேதாந்த கொள்கைக்கும் இஸ்லாமிய அனுபூதிக் கொள்கையான சூபி முறைக்கும் உள்ள பொதுப் பண்புகளை விளக்கி இருதரப்பு மக்களுக்கிடையில் சகோதர பாவம் வளர துணை செய்தார். 

    கம்பர் ராம காவியத்தை தமிழில் எழுதி புகழ்பெற்றது போலவே துளசிதாசர் ராமாயணத்தை இந்தி மொழியில் எழுதி இறவாத புகழைப்பெற்றார். 1544-ல் தோன்றிய ஸ்ரீதாது என்பவர் சக்ரவர்த்தி அக்பரை பல முறை சந்தித்து இந்து மதத்திற்கும் இஸ்லாம் மதத்திற்கும் இடையிலுள்ள முறுகலான நிலையை தளர்த்த பாடுபடுமாறு வற்புறுத்தினர்.

   வங்காளத்தில் ஸ்ரீ சைதன்யர் என்பவரால் அசிந்தீய பேதாபேதம்  என்ற வைஷ்ணவ தத்துவம் தோற்றுவிக்கப்பட்டு ஸ்ரீ கிருஷ்ண ஸ்ரீ ராதை பக்தி மார்க்கமாக வளர்ச்சி பெற்று மக்களின் பேராதரவைப்பெற்றது. இதனால் இஸ்லாமிய தாக்கமும் ஐரோப்பியர்களின் வருகையோடு வந்த கிறிஸ்துவ மததாக்கமும் வங்காளத்தைப் பொறுத்தவரை முனை மழுங்கியதாகவே இருந்தது.  மராட்டிய தேசத்தில் தோன்றிய ஞானதேவர்,  நாமதேவர் ஆகிய ஞானிகள் ஞானத்தையும், பக்தியையும் வற்புறுத்தி மக்களை வழி நடத்தினார்கள்.
  
 இறைவனை வார்த்தையில் வர்ணனை செய்ய முடியாத அளவிற்கு பேரழகனாக ஸ்ரீ வைஷ்ணவம்  காட்டுகிறது. இதனால் பல நூற்றாண்டுகளாக இந்திய மக்களின் வாழ்வில் விஸிஷ்டாத்வைத தத்துவம் நன்கு ஆழமாகப் பதியும்படிச் செய்துள்ளது என்று சொல்லலாம்.  ஒவ்வொரு மனிதனின் ஆன்மீக வாழ்விற்கும் சமுதாய தொண்டிற்கும் ஸ்ரீ வைஷ்ணவம் பேரூக்கத்தை வழங்கியுள்ளது.  இதனால் மனிதன் என்பவன் இன்பநிலையை உணர்ந்து அனுபவிக்கவும் பிரம்மத்தோடு ஒன்றவும் வழி ஏற்படுகிறது.  இது ஸ்ரீ பெரும்புதூர் வள்ளல் நமக்கு வழங்கிய வரம் என்றே சொல்லலாம்.


கேள்வி:    சங்கரரின் கொள்கைகளையும், ராமானுஜரின் கொள்கைகளையும் இணைத்தும் பகுத்தும் இதுவரைச் சொன்னீர்கள். இதில் யாருடைய கொள்கை சிறந்தது? யாருடைய சிந்தனை நடைமுறைக்கு உகந்தது? என்பதைத் தாங்கள் மறுக்காமல் மறைக்காமல் தெளிவு படுத்த வேண்டுகிறேன்?




குருஜி:   அதனது நிலையில் வைத்துவ பார்க்கும் பொழுது இரண்டுமே சிறந்ததுதான் என்று கூறிவிடுவேன் எனத்தயங்க வேண்டாம். சங்கரரின் சிந்தனையிலுள்ள சிறப்புகளையும் சொன்னேன். சில குறைபாட்டையும் சுட்டிக்காட்டினேன் அதே போன்றுதான் ராமானுஜரின் கொள்கையிலுள்ள சரியானதையும், தவறானதையும் பக்கம் சாரமல் நடுநிலையோடு சொன்னேன் என்பதை நான் சொல்லாமலேயே நீ புரிந்திருப்பாய் நான் ஒரு வைஷ்ணவன் என்பதினால் வைஷ்ணவ கருத்துக்களை சிறப்பானது என்றும் மற்ற கருத்துகள் அவ்வளவு சிறப்புடையது அல்ல என்று கூறிவிடுவேன் என்பதாகக் கருதவேண்டாம்.  அத்வைதம், விஸிஷ்டாத்வைதம் ஆகிய இரு பெரும் தத்துவங்களை மட்டும்தான் இதுவரை சொல்லியிருக்கிறேன். துவைதம் என்ற மூன்றாவது தத்துவம் ஒன்று உள்ளது. அதையும் உனக்கு விளக்கிய பிறகு மூன்றில் எதை நாம் எடுத்துக் கொள்ளலாம் என்பதைத் தெளிவாக சொல்லிவிடுகிறேன். ஆகவே குழப்பம் இல்லாமல் நிம்மதியாக இரு.

source  http://ujiladevi.blogspot.com/2010/09/blog-post_28.html





0 comments:

Post a Comment

                     முக்கிய அறிவிப்பு  
           நமது ' ஸ்ரீ நாராயண கேசரி ' தளத்தை பார்வையிட்ட பல வாசகர்கள் தங்களது ஆன்மீக கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டுமென்று தொலை பேசியிலும் ஈ-மெயிலிலும் வற்புறுத்தி கேட்டனர் அதனால் கேள்விகளை +91-9442426434 என்ற அலைபேசி எண்ணிலும் E-Mail sriramanandaguruji@gmail.comமுகவரிக்கும் தெரிவிக்கவும் பதில் நமது தளத்தில் வெளியிடப்படும்